ஆயுள் வரை இணையை பிரியாமல் வாழும் அபூர்வ வகை பறைவையினம் இருவாய்ச்சி.ஆங்கிலத்தில் ‘ஹோர்ன்பில்’ என அழைக்கப்படுகிறது. ஹோர்ன்பில் (Hornbill) என்பது ஒருவகையான மரம் ஆகும். இந்த மரத்தில் தான் இப்பறவை கூடுகட்டுகிறது. அதனால் இப்பறவைக்கு ஹோர்ன்பில் என பெயர் சூட்டியுள்ளார்கள்.
இதன் ஆயுள், 50 ஆண்டுக்கும் அதிகம். நீண்டு வளைந்த பெரிய இரட்டை அலகு, புதுமையாக இருக்கும். இதற்காகவே, இருவாய்க்குருவி என விந்தைப் பெயர் சூட்டியுள்ளது தமிழகம்.
வளர்ந்த இருவாய்ச்சி பறவை, 4 அடி வரை நீளமிருக்கும். அதிகபட்சம் நான்கு கிலோ வரை எடையுள்ளது. ஆண் பறவையின் விழி படலம் சிவப்பாக காட்சி தரும். பெண்ணுக்கு, நீலம் கலந்த வெண்மையாக இருக்கும். பெரிய அலகு மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். அதன் மீது மற்றொன்று கவிழ்ந்து ஒட்டியது போல் தோன்றும்.
கால்கள், பசுமை கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். முகம், முதுகு, உடலின் கீழ்ப்பகுதி, இறக்கைகள் கறுப்பு வண்ணத்தில் காட்சி தரும். இறக்கைகளில் இரண்டு வெள்ளைப் பட்டைகள் தீட்டப்பட்டுள்ளதால் வனப்பு கூடுதலாக தெரியும். கழுத்தைத் தோள்களுக்குள் இழுத்து, வானை நோக்கி அலகை சாய்த்தபடி அமர்ந்த நிலையில் தூங்கும். இறக்கையை நிதானமாக அடித்து மிதந்தவாறு பறக்கும்.
ஒருமுறை இணை சேரும் ஆண், பெண் பறவைகள், மரணம் வரை பிரிவதில்லை.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்க காலம். அதற்காக, பெண் பறவை, உயரமான மரங்களில் பாதுகாப்பு மிக்க பொந்தை தேர்வு செய்யும். அதில் ஐந்து முட்டைகள் வரை இடும். ஆண் பறவை எச்சரிக்கை உணர்வுடன், பொந்தின் வாயிலை இலை, தழைகள் மற்றும் களிமண்ணால் மூடி விடும். உணவு கொடுக்க பொந்தின் மேல் பகுதியில் ஒரு துளையும், கழிவு வெளியேற்ற கீழ்ப்புறம் மற்றொரு துளையும் அமைத்திருக்கும்.
ஆண் தான், இணை பறவைக்கும் குஞ்சுகளுக்கும் தேவையான உணவை தேடி வந்து தரும். குஞ்சுகள் பறக்கும் ஆற்றலைப் பெற்றவுடன், பொந்தில் மூடியிருப்பதை அலகால் உடைத்து வழி ஏற்படுத்தும். இதுபோல், திட்டமிட்ட வியப்பூட்டும் வாழ்க்கை உடைய அபூர்வ பறவை இனம் இருவாய்ச்சி.
இந்த பறவையில் உலகம் முழுதும், 55 இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் புதை படிவங்கள், ஆபிரிக்க நாடுகளான உகண்டா, மொரோக்கோ, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் கிடைத்துள்ளது.