ஐரோப்பிய நாடான ஸ்கொட்லாந்து ஏர்ஷயரில், 1840இல் பிறந்தார் ஜான் பாய்ட் டன்லப். இவர் கால்நடை மருத்துவம் பயின்றார். முதலில், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.
அப்போது, கரடு முரடான சாலைகளில், கெட்டியான இரப்பர் கழுத்து பட்டை அணிந்த குதிரைகள், சிரமப்பட்டு சுமை வண்டி இழுத்து வருவதைப் பார்த்தார். குதிரைகளின் சிரமம் குறைக்க காற்று அடைத்த குஷன் பயன்படுத்த முடியுமா என சோதனையில் ஈடுபட்டார்.
அச்சமயத்தில், கற்கள் நிறைந்த சாலையில் சிரமம் இன்றி மிதிவண்டி ஓட்ட உதவும்படி கேட்டான் அவரது மகன். அதற்காக பரிசோதனையில் இறங்கினார்.
தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படும் குழாயை வெட்டி, டியூப் தயாரித்தார். அதில், காற்றை அடைத்து மிதிவண்டியின் பின்புற சக்கரத்தோடு இணைத்தார். மிதிவண்டி எளிதாக சாலையில் உருண்டோடியது. ஏற்கனவே, 1845இல், ரொபர்ட் தொம்சன் இதை கண்டுபிடித்திருந்தார். ஆனால், பிரபலமாகவில்லை.
காற்றடைத்த டயரை மேலும் ஆராய்ந்து பரிசோதனை செய்து மேம்படுத்தினார் டன்லப். இதற்கான காப்புரிமையை ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 1888இல் பெற்றார். தொடர்ந்து, 1890இல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார்.
இந்த மிதிவண்டி பற்றி அறிந்தார் தொழிலதிபர் டபிள்யு. ஹெச் டு கிராஸ். அவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது. டன்லப்புடன் இணைந்து ஒரு நிறுவனத்தை துவங்கினார். அது, டன்லப் இரப்பர் கம்பெனி என அழைக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்பால் பெரிதாக இலாபமடையவில்லை டன்லப். காப்புரிமையை பங்குதாரருக்கு விற்று விட்டார். அந்த நிறுவனம், அதே பெயரில் இயங்கியது.
காற்று அடைக்கப்பட்ட டியூப் டயர், 1888இல் அறிமுகமானது. இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. மோட்டார் வாகனம் உருவானதும் அதன் தேவை அதிகரித்தது. டன்லப்பின் கண்டுபிடிப்பு தொழிற்சாலைகள் பெருக அடித்தளமாக அமைந்தது. சாலை போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.
நவீன இரப்பர் டயர் கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையை பெற்ற டன்லப், 1921ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி தனது 81ஆம் வயதில் காலமானார்.