பன்னூலாசிரியரும் சன்மார்க்க அறிஞருமான அல்ஹாஜ் மௌலவி காத்தான்குடி பௌஸ் நேற்று முன்தினம் (6) மாலை தனது 65 ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா காத்தான்குடி ஜாமிஉல் லாபிரீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நேற்று (7) சனிக்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தினகரன் பத்திரிகையின் செய்தியாளராக பணியாற்றிய மௌலவி யு.எல்.எம்.பெளஸ் (ஷர்க்கி) மத்ரஸா பாட நெறியை பூர்த்திசெய்து மௌலவியாகியதன்பின், பலபிட்டிய ஜும்மா பள்ளியில் பேஷ் இமாமாக 10 வருடங்கள் மார்க்கத் தொண்டாற்றினார்.
பின்னர், பாணந்துறை ஊர்மனை மஸ்ஜிதுல் முபாரக் ஜும்மா பள்ளியில் பிரதம பேஷ் இமாமாக 32 வருடங்கள் சேவையாற்றியதையடுத்து, ஓய்வுபெற்ற மௌலவி பௌஸ் தனது சொந்த ஊரான காத்தான்குடியை சென்றடைந்தார்.
அரச உயர் விருதான கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்டுள்ள மௌலவி பெளஸ் 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு கீழக்கரையில் நடைபெற்ற உலக தமிழ் இலக்கிய மாநாட்டிலும் கவிதை பாடியுள்ள மௌலவி பௌஸ் சிறந்த கவிஞரும், பேச்சாளரும் என்பதுடன் இலக்கியத்துறைக்கும் பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது, தான் அனுபவித்த அவஸ்தைகளை மற்றவர்கள் படிப்பதற்காக தனது முகநூல் பக்கத்தில் “கிட்னியும் டைலசும்” என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கின்றார்.
“கிட்னி பெயிலியர் அதற்காக டைலஸ் இரத்தம் சுத்தகரித்தல் என்றால் என்ன? நமது இரத்தத்தைதான் நமக்கு சுத்திகரிப்பர். இரத்தம் சுத்திகரிக்க ஆண், பெண், சிறுவர், பெரியவர் என்ற வேறு பாடுகள் கிடையாது.
அவசரத்துக்கு கழுத்தில்தான் கிட்னிவழி திறக்க ஏற்பாடு செய்வார்கள். அது ஒரு துளை ஆப்ரேசன். சிறிய விறைப்பு ஊசியுடன் வலிக்க வலிக்க துளையிடப்படும்.
அதனையடுத்து, கையில் துளையிடப்படும். கையில் துளையிடப்படுவதில் ஆறு வாரங்களின் பின்னர் உபயோகத்துக்கு உட்படுத்தப்படும். சிலருக்கு துளையிட்டும் இரத்த ஓட்டம் இருக்காது.
அப்படியாயின் நெஞ்சு தொடை, கால் போன்ற இடங்களில் துளையிடப்படும். ஆஸ்பத்திரியும் நாமும் அலைய வேண்டிவரும். டைலஸ் செய்யும் காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு போத்தல் தண்ணீர், அல்லது அரை லீற்றர் தண்ணீரே குடிக்கலாம்.
அதற்கு மேல் குடித்தால் தூக்கம் வராது, விடிய விடிய விழிப்புதான். தண்ணீர் அதிகமாகக் குடிப்பது தவறு. ஒருமுறை நான்கு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் டைலஸ் செய்யப்படும்.
மூன்று போத்தல் நான்கு போத்தல் தண்ணீர் உடம்பிலிருந்து வடிக்கப்படும். பின்வழி குழாயினால் இது வடிந்தோடும். நல்லது கெட்டது பாராமல் இரத்தம் வடிக்கப்படும்.
வாரம் ஒரு தடவை இரண்டு தடவை டைலஸ் செய்யப்படும். புதிய வயர், புதிய ஊசிதான் குத்துவார்கள், உசிரு போய் வரும். தூங்கலாம் கதைக்கலாம்.
டைலஸ் இருக்கும்போது சீனி குறையும் பிரசர் குறையுக்கூடும். மயக்கம் வரும். அதற்கு உடன் மருந்துகளும் தரப்படும்.
கடைசியில் போட்ட குழாய் கழட்டிபிளாஸ்டர் ஒட்டி விடுவார்கள். நாம் நன்றாக அமத்திப் பிடிக்க வேண்டும். அவதானம் குறைய இருந்தால் இரத்தம் வெளியே கொட்டி விடும். நான் அனுபவித்தது உங்கள் பார்வைக்கும்….” என குறிப்பிட்டிக்கின்றார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தின்போது, பெருந்திரளான ஊர்மக்கள் மற்றும் அவர் பணிபுரிந்த பாணந்துறை பகுதியிலிருந்தும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
மௌலவி பௌஸின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று ஊர்மனை மஸ்ஜிதுல் முபாரக் ஜும்மா பள்ளியின் பிரதம இமாம் மௌலவி யு.எல்.எம்.பைசர் ஹசனி தெரிவித்தார்.
மொறட்டுவை மத்திய விசேட நிருபர்