நீண்ட நாட் காத்திருப்புக்கும், விவாதங்களுக்கும் பிறகு மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுள்ளார். நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. நாவம்பர் 23ஆம் திகதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியில் உள்ள ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 41. தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக 132, ஷிண்டே அணியில் உள்ள 13 பா.ஜ.க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் என பா.ஜ.கவுக்கு தனித்து 145 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க தனித்தே ஆட்சி அமைக்க முடியும் எனினும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து போக வேண்டும் என்று பா.ஜ.க தலைமை திட்டமிட்டது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக பா.ஜ.க தலைமை தீர்மானித்து விட்டது. இது ஏக்நாத் ஷிண்டேவிக்கு நன்றாகத் தெரியும். ஆனால். தேர்தல் முடிவு வரும் வரையில் காத்திருந்து மீண்டும் தனக்கு முதல்வர் பதவி வழக்க வேண்டும் என்று டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆனால், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக ஷிண்டேவை நியமிப்பதாக அமித் ஷா உறுதியளித்தார். இதை ஏற்காத ஷிண்டே முதல்வர் பதவிதான் வேண்டும் என்று அடம்பிடித்தார். ஆனால், அமித் ஷாவும் பா.ஜ.க தலைமையும் ஷிண்டேவின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இந்த சூழலில் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு குறைந்து விடக்கூடாது என்பதற்காக கடந்த பத்து நாட்களாக ஷிண்டே பல நாடகங்களை நடத்தினார். பா.ஜ.க தலைமை இதை கண்டுகொள்ளவே இல்லை. பதவி ஏற்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு வரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள துணைமுதல்வர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் பா.ஜ.கவின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் நிலையை பின்னோக்கிப் பார்த்தோமானால் மாநில கட்சிகளோடு முதலில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடத் தொடங்கி மெல்ல மெல்ல மொத்த மாநிலத்தையும் பா.ஜ.க தன்வசமாக்கிக் கொள்கிறது. மகராஷ்டிராவிலும் இதுதான் நடந்திருந்திருக்கிறது. மாநிலக் கட்சிகளின் பலத்தை குறைத்து தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் காய் நகர்த்தி வருகிறது. தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் இது முடியாமலும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் சரியான கூட்டணி அமைக்க முடியாததால் இங்கே வெற்றி பெறுவது அவர்களுக்கு கடினமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றக் கழகம் மூலம் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க கால்பதிக்க முடியற்சி செய்யலாம். ஆனால், தி.மு.க தலைமையிலான கூட்டணியை எளிதில் உடைத்து விட முடியாது என்ற நிலையும் இங்கே இருக்கிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி தான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் இதையே உறுதிப்படுத்தியிருந்தன. ஆனால், எதிர்பாராத திருப்பமாக பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது, அதிலும் கூட்டணி அமைத்து ஐந்து மாதங்களில் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்று விவாதம் நீண்டு வருகிறது.
ஐந்து மாதங்களில் இந்த வெற்றியை பெறுவதற்கு பா.ஜ.க என்ன செய்தது என்பதான் இப்போது எல்லோர் மனதிலும் ஒடிக்கொண்டிருக்கும் கேள்வி. இது பற்றி மும்பையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சமர் காதஸ் கூறும் போது மகாயுதி கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் தான் முக்கிய காரணம் என்கிறார். லாட்லி பேஹன் யோஜனா திட்டம், பல்வேறு சதிகளை ஒன்றிணைக்கும் உத்தி ஆகியவைதான் பா.ஜ.கவுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என்கிறார்.
மகாராஷ்டிராவில் பெண்களுக்கு பயனுள்ள வகையில் தொடங்கப்பட்ட லாட்லி பேஹன் போஜனா திட்டம் தொடங்கப்பட்டு, நான்கு மாதங்களில் 2.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது பெண்களின் வாக்குகளை பெறுவதற்கு நல்ல பலனை தந்துள்ளது. இதேபோல இந்துக்கள் பிரிந்து கிடந்தால் தோற்று விடுவோம் என்ற முழக்கமும் இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்கு உதவியாக இருந்துள்ளது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா முஸ்லிம்கள் 70 – 80 சதவீதம் வாக்களித்தனர். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கனின் வாக்குகள் 35 – 40 சதவீதமாக குறைந்துள்ளது. அரசியலமைப்புச்சட்டம் குறித்து பா.ஜ.கவால் நன்கு கையாளப்பட்டதால் தலித்துகளின் வாக்குகள் பா.ஜ.கவுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. இட ஒதுக்கீட்டில் துணைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டதால் பௌத்தர்களின் வாக்குகளும் பா.ஜ.கவுக்கு கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி கண்டதால் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுபுதிய யுக்தியை கையாண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எங்கெல்லம் பொதுக்கூட்டம் நடத்தினார்களோ அங்கெல்லம் பா.ஜ.க தோற்றுப் போனது. ஆகையால் சட்டமன்ற தேர்தலில் குறைந்த அளவிலேயே பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தேர்தல் வெற்றிக்காக களத்தில் நிறைய பணியாற்றியிருக்கிறார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடிக்கு வாக்களர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைப்பதில் அது முக்கிய பங்காற்றியிருக்கிறது.
மகா விகாஸ் அகாடி கூட்டணி ஏன் தோல்வியை சந்தித்தது என்று ஆராய்ந்தால் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தங்களிடம் பெரிய அளவில் வாக்கு சதவிகிதம் இருப்பதாகவும் அதிக இடங்களை கைப்பற்றுவோம் என்றும் காங்கிரஸ் தவறான கணக்கு போட்டுவிட்டது. அதிருப்தி வேட்பாளர்களாலும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் வெற்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.”நாம் பிரிந்து கிடந்தால் தோல்வியுறுவோம்” என்ற மகாயுதி கூட்டணியின் முழுக்கம் மக்களிடையே புதிய எழுச்சியை உண்டாக்கியதாலேயே அவர்களால் நிறைய இடங்களை கைப்பற்ற முடிந்துள்ளது. இந்த முழக்கத்தின் உட்கருத்தை காங்கிரஸ் கூட்டணியினர் இனிவரும் காலங்களின் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.