தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 18 அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி முழுமையாக நீக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
வரிகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் சில வரிகளை நீக்குவது போன்ற பல விடயங்கள் தொடர்பாக அடுத்த வரவு செலவு திட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனடிப்படையில், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வரி திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இந்தப் பிரச்சினைகளுக்கு விடை காண நாங்கள் கடுமையாக முயற்சித்து வருகிறோம். நாட்டினுள் தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளோம். அவ்வாறு செய்து நாடு மறுபுறத்தில் வெள்ளத்தின் இயற்கை பேரழிவை எதிர்கொண்டது.
41 இலட்சம் ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கியது. இது ஒரு கடுமையான சிக்கலை உருவாக்கியது. அதன்படி அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அதிகபட்ச அரிசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அனைத்து அரிசி இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் 60- – 70 ஆயிரம் மெற்றிக் தொன்கள் அரிசி நாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானதென நினைக்கிறீர்களா? விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?
இந்நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்தே இந்தளவு பாரிய பாராளுமன்ற அதிகாரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்நாட்டினுள் பல தனித்துவமான பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசிப் பிரச்சினை உள்ளிட்ட இந்தப் பிரச்சினைகள் கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளே தவிர எம்மால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளல்ல. என்றாலும் அவர்கள் உருவாக்கிய விடயங்கள் என நாம் ஒதுங்கிக் கொள்ளப் போவதில்லை. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே கடந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மூவரடங்கிய அமைச்சரவை அமைத்து உரிய நிறுவனங்களை அழைத்து கலந்துரையாடி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
அதன் பின்னர் மக்களின் ஆணையைப் பெற்று நாங்கள் புதிய அமைச்சரவையை அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். தற்போது நாட்டினுள் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலும், முக்கியமான பல தீர்மானங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். இந்நாட்டில் அரிசி உற்பத்தி தொடர்பில் பல்வேறு தகவல்கள் உள்ளன.
விவசாய அமைச்சர் தோழர் கே. டி. லால் காந்தவும் நானும் இணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். எமது நாட்டின் தகவல் கட்டமைப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் இருப்பது இதன் போது தெரியவந்தது. அந்த யதார்த்தத்தில் ஒரு கடுமையான சிக்கல் உள்ளது. அந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்ற பிரச்சினை எங்களுக்கு இருந்தது. எமது நாட்டின் நெல் உற்பத்தி நாட்டு மக்களுக்கு போதுமானது. தேவைக்கு அப்பால் மேலதிகமாகவும் உள்ளது. எனவே இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.
இந்த அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?
நாம் இரண்டு பருவங்களில் விவசாயம் செய்யும் ஒரு விவசாய நாடு. எங்கள் விவசாயிகள் இரண்டு பருவங்களிலும் போதுமான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். எதிர்காலத்தில் அதனை மேலும் அதிகரிக்க தேவையான சூழலை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். பாராளுமன்றத்தில் விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய தலைவர்கள் உள்ளார்கள்.
அவர்கள் இந்நாட்டு விவசாயிகளுக்காக முன் நின்று அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். சிறுபோகம் மற்றும் பெரும் போகத்தைக் கருத்தில் கொண்டால், பிரதான பருவத்தில் 2.6 மெட்ரிக் தொன் நெல்லும், சிறு போகத்தில் 2.2 மெட்ரிக் தொன்னும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4.8 மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 3 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நாம் உற்பத்தி செய்கிறோம்.
நமது நாட்டின் அரிசித் தேவைக்கு ஏற்ப நாளொன்றுக்கு 6500 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுகிறது.ஒரு மாதத்திற்கு ஒரு லட்சத்து தொண்ணூற்று ஐயாயிரம் அல்லது இரண்டு இலட்சம் தொன் அரிசிதான் தேவை. அப்படியானால், நம் நாட்டில் அரிசி உபரியாக இருக்க வேண்டும். ஆனால், புள்ளி விபரத்தில் இந்த அரிசி உபரியாக இருந்தாலும், நம் நாட்டில் சந்தைக்குச் செல்லும் போது, அரிசி இல்லை. அதனால்தான் அரிசி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது. இந்த கணக்கீடுகள் மற்றும் புள்ளிவிபரங்களை நாங்கள் தேடிச் சென்ற பின்னர் அங்கு ஒரு தீவிர சிக்கல் உள்ளது. நம் நாட்டின் உணவு உற்பத்தி செயல்பாட்டில், அரிசி உண்பவர்களைப் போலவே உணவு உற்பத்தி செயல்முறையிலும் பல பகுதிகள் உள்ளன. அந்த துறைகளில் உள்ளவர்களும் இந்த உற்பத்தி செயல்முறைக்கு வர வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு சில பதில்களைக் கண்டோம். நமது விவசாயிகள் மூன்று மெட்ரிக் தொன் அரிசியை உற்பத்தி செய்ய தேவையான நெல்லை உற்பத்தி செய்தாலும் அவை மற்றைய துறைகளில் பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது.
தற்போது அரிசி மாத்திரம் அல்ல முட்டை மற்றும் தேங்காய் விலைகளும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன?
எமது நாட்டில் முட்டை உற்பத்தி துறையில் நாம் தன்னிறைவடைந்திருக்கிறோம். எமது நாட்டில் ஒன்பது மில்லியன் முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. எமது நாட்டில் 8 மில்லியன் முட்டையே பயன்படுத்தப்படுகிறது. எமது நாட்டில் ஒரு கோடி 25 இலட்சத்துக்கும் அதிகமான முட்டைக் கோழிகள் இருக்கின்றன. அதேபோன்று தேவையான குஞ்சுகளும் எண்பது இலட்சம் உள்ளன.
அரிசி மாபியா இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு முறையான புள்ளி விபரக் கட்டமைப்பு தேவை என்று உங்கள் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூறியதுதானே?
நாட்டின் அரிசியின் தேவை எந்த அளவானது?, மேலதிக உற்பத்தி எந்தளவானது? ஏனைய துறைகளுக்குச் செல்லும் அளவு எந்த அளவானது போன்ற விடயங்கள் தொடர்பில் புள்ளி விவரங்களைச் சேர்ப்பதற்கான இடங்கள் இல்லை. அனைத்து விடயங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும். இது தொடர்பில் இதனோடு தொடர்புடைய துறைகளை சம்பந்தப்படுத்தி தரவுகளை ஓரிடத்திற்கு கொண்டு வந்து 20 தரவு கட்டமைப்புகளை எதிர்காலத்தில் உருவாக்க நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அதேபோன்று அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் மற்றும் சதொச ஊடாக 70000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரிசி ஆலைகளுக்குச் சென்று ஏன் அரிசி கொண்டு வரக்கூடாது என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. இந்தப் பிரச்சினையை இதற்கு மேலும் கொண்டு செல்ல வேண்டாம் என்று நாம் அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்துக் கூறினோம். தமக்கு வங்கிகளில் பிரச்சினை உள்ளது. எனவே ஜனாதிபதி தலையிடுவதாக இருந்தால் இதற்கு பதிலை தேடி தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். சதொச ஊடாக அனைத்து மக்களுக்கும் அரிசி இருநூற்றி இருபது ரூபா சந்தை விலையில் வழங்குவதற்காக அவர்கள் எங்களுடன் உடன்பட்டுள்ளனர். இன்று முதல் அந்த ஆலைகளில் இருந்து அரிசி கொண்டு வரப்படவுள்ளது.
வரும் 20ஆம் திகதி வரை, அரிசி இறக்குமதியாளர்கள் மூலம் திறந்த சந்தையில் இருந்து அரிசி கிடைக்கும். அத்துடன், 20ஆம் திகதிக்குப் பின்னர் பத்தாயிரத்து இருநூறு மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு வரும். அதன் பின்னர் 41 மெட்ரிக் தொன் இலங்கைக்கு வருகிறது. அதன் மூலம் அரிசி சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தேங்காய் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். ஜனாதிபதியாக தோழர் திசாநாயக்கவும், வர்த்தக அமைச்சராக நானும் தேங்காய் உற்பத்தி தொடர்பில் அரசுக்கு சொந்தமான குருநாகல் மற்றும் சிலாபம் பிரதேசத்தில் உள்ள நிறுவனங்களையும் தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களையும் அழைத்தோம். குறிப்பாக புறநகர் பகுதி மக்கள் தேங்காய் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களில் சதொச ஊடாக தேங்காயை 130 ரூபா விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த நத்தார் பண்டிகை காலத்தில் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்காக ஏதேனும் நிவாரணங்களை வழங்குமா?
பண்டிகை காலங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது பொதுவாக சந்தையினுள் காணப்படும் ஒரு நிலையாகும். எனவே அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். நாட்டினுள் பொருட்களின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முயற்சிக்கின்றார்கள்.
நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிப்போம். மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு சந்தையினுள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இருப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் ஊடாகத் தலையிடுவதற்கு நாம் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25% குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எம். எஸ். முஸப்பிர்