சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, தனது சுற்றுப்பயணத்துக்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் முழுத்துண்டு ஒன்றை மட்டுமே அணிந்து கொண்டு, வெயிலில் வியர்வை சிந்த வயல்களில் பாடுபடுவதைக் கண்டார். இதைக் கண்டு வேதனையுற்ற அவரது உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.
‘ஏழை மக்கள் இவ்வளவு எளிய உடையுடன் வாழும்போது தனக்கு ஏன் இவ்வளவு ஆடைகள்? இந்தியர்களில் கோடிக்கணக்கானோர் உடுப்பதற்கு அரைத்துண்டு கூட இல்லாதபோது, தான் மட்டும் நன்றாக உடை அணிவது எப்படி சாத்தியமாகும்?’ என்ற சிந்தனை அவருக்குள் எழுந்தது. மதுரைவாசிகளின் எளிமையும் அவரது மனதில் பதிந்தது.
இந்தக் கேள்வியுடன் 1921 செப்டெம்பர் 21-ஆம் திகதி மதுரையில் அவர் தங்கியிந்தபோது, விடியற்காலையில் எழுந்தார். மறுநாள் அவர் காரைக்குடி செல்ல வேண்டியிருந்தது. காலை பத்து மணிக்கு சிகை அலங்கார தொழிலாளியும் வந்தபோது, அவரைப் பார்த்ததும் காந்தி அதிர்ச்சியுற்றார்.
ஏனெனில், அந்தத் தொழிலாளியும் ஒரு முழுத் துண்டை மட்டுமே இடுப்பில் கட்டியிருந்தார். மற்றுமொரு முழுத் துண்டை தனது கையில் வைத்திருந்தார். அவரிடம் காந்தி, தனது தலை முடியை மொட்டை அடித்து கொண்டார். கனத்த மனதுடன் இருந்த காந்தி, குளிக்கும்போது ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
காரைக்குடிக்குப் புறப்படும்போது, முதலில் தனது குல்லா, மேலாடை, அங்கிகளைத் தூக்கி எறிந்தார். ஒரு கதர் வேட்டியை அணிந்துகொண்டு புறப்பட்டுச் சென்றார். இந்த முடிவு எடுக்க அவருக்கு சில விநாடிகள் கூட தேவைப்படவில்லை.
உடனிருந்த அவரது நண்பர்கள், ‘ஐயா.. இந்தக் கோலம் வேண்டாம். பழையபடியே இருங்கள்’ என்று சொல்லிப் பார்த்தனர். கண்ணீர்விட்டனர். ஆனால், காந்தி மனம் மாறவில்லை.
காரைக்குடியில் செப்டெம்பர் 22-இல் நடைபெற்ற கூட்டத்தில், தனது உடை மாற்றம் குறித்து காந்தி கூறியது:
‘அந்நியத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டும். நமது நாட்டில் உற்பத்தியாகும் துணிகளையே அணிய வேண்டும். ஏழை, எளிய மக்களின் கடுமையான உழைப்பால் உற்பத்தியாகும் நம்மவர்களின் துணிகளை அணியாவிட்டால், நமக்கு உண்மையில் சுதந்திரம் கிடைக்காது.
நாட்டில் உள்ள இலட்சக்கணக்கானோர் தங்களுடைய குறைந்தபட்ச தேவைக்கான அளவு துணிகளை கூட வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர், கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்.
நாட்டின் வெப்பதட்ப நிலைக்கு மிகவும் குறைந்த ஆடைகள்போதும். ஆடைகள் மீது அநாவசிய மோகம் வேண்டாம்.
ஆடம்பரம், பகட்டு, மிதமிஞ்சிய செழிப்பு, சுகம் போன்றவை சுதந்திர வாழ்வின் எதிரிகள். உடையில், தோற்றத்தில் கூட சமத்துவம் இருக்க வேண்டும் என்றார்.
காந்தியை அவரது எதிரிகள் பழிப்பதற்காகவும், கேலி பேசுவதற்காகவும் ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என்று கிண்டல் செய்தனர். ஆனால், அவர் தனது எளிமையின் வாயிலாக, ஒரு புனிதத் தன்மையை ஏற்படுத்திவிட்டார்.