பாராளுமன்றத் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதி அநுர, தனது கார்க் கதவைத் தானே திறந்து கொண்டு இறங்கிவந்த எளிமை பற்றிச் சிலாகிக்கும் அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரதி இ. ஜெயராஜ், அவர் சிஸ்டத்தை’ மாற்றப் போகிறார் என்பதற்கான அடையாளக் குறியீடுகளில் இச் சம்பவம் ஒன்றாகி விட்டது என்கிறார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி…..
கேள்வி: பாராளுமன்றத் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதி அநுர, தனது கார்க் கதவைத் தானே திறந்து கொண்டு இறங்கிவந்த எளிமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மகிழ்ச்சி தந்தது. உயரத்தில் இருக்கின்றபோது காட்டுகின்ற எளிமைதான் எளிமை! அதனை அநுர புரிந்து கொண்டிருக்கிறார். ‘சிஸ்டத்தை’ மாற்றப் போகிறார் என்பதற்கான அடையாளக் குறியீடுகளில் இச் சம்பவம் ஒன்றாகி விட்டது. ஜனாதிபதியின் இச் செயல் நம் நாட்டிற்கு மட்டுமல்ல, அயல் நாடுகளுக்கும் முன்னுதாரணமாகி இருக்கிறது.
ஆனால் ஒன்று, இதுபோன்ற செயல்களால் நாட்டு மக்களின் உள்ளங்களைக் கவரலாமே தவிர, நாட்டினை உயர்த்த முடியாது.
இப்போது அவரதும், அவரது அணியினரதும் முழுக் கவனமும் இரண்டாவது விடயத்தில்தான் பதிய வேண்டும். நாட்டை உயர்த்தி விட்டால் இத்தகைய நல்ல அடையாளங்களுக்கு மதிப்பு வரும். அதில் தவறிழைத்தால் இத்தகைய நன்னடத்தைகள் எல்லாங்கூட வெறும் கவர்ச்சிக் காரியங்களாகிவிடும்.
எதுவானாலும் இம் முயற்சி நல்ல முயற்சி. – பாராட்டுவோம்.
கேள்வி: பாராளுமன்றத் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வந்த டாக்டர் அருச்சுனாவின் செயல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: உங்கள் ஊரில் கத்தரிக்காய் விலை குறைந்து விட்டதா?….வேறு வேலை இருந்தால் பாருங்கள்.
கேள்வி: பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் ‘கெத்து’க் காட்டிய அருச்சுனா, கடைசியில் பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறாரே? அவரது ஆதரவாளர்கள் இதனையும் பாராட்டுவார்களோ?
பதில்: தாங்களாய்க் கெடுகிறவர்கள் என்று சிலபேர் இருக்கிறார்கள். மற்றவர்களால் கெடுக்கப்படுகிறவர்கள் என்று சிலபேர் இருக்கிறார்கள். அருச்சுனா இரண்டாவது வகையிலும் சேர்வார்.
மன்னிப்புப் பற்றியா கேட்டீர்கள்? ‘எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்கிறார் வள்ளுவர்.
இதற்குமேல் நான் என்ன சொல்ல? (பேச்சு விழாமல் வள்ளுவரைக் கடவுள் காப்பாற்றுவாராக!)
கேள்வி: கட்சி, தலைமையைத் தந்தால், ‘வடக்கிலும் கட்சியை வளர்த்தெடுப்பேன்’ என்று சாணக்கியன் பேசி இருக்கிறாரே?
பதில்: பல் உள்ளவன் முறுக்கைக் கடிப்பேன் என்கிறான். கடித்து விட்டுச் சொல்வதால் நம்பித்தான் ஆகவேண்டும்.
கேள்வி: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய செய்தி?
பதில்: பொய்யாய்ப் பகல் கனவாய்ப் போகட்டும்!
கேள்வி: என்ன? சுமந்திரனை இன்னும் சிலபேர் விடமாட்டார்கள் போலிருக்கிறதே?
பதில்: அவர்களுக்கு இனத்தின் மீதோ, சுமந்திரன் மீதோ அக்கறை இல்லை. தம்மை அடையாளப்படுத்தும் முயற்சியாய் சுமந்திரனைத் திட்டிப் பார்க்கிறார்கள். எல்லாரும் சொல்லுகிற சூரியன்-நாய் பழமொழியை நானும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: சுமந்திரனை இவ்வளவு பாராட்டுகிற நீங்கள், சிறீதரனைப் பற்றி ஏதும் சொல்வதில்லையே. ஏன்? அவர் உங்கள் பகையாளியா?
பதில்: உண்மையில் அவர்தான் என் நெருங்கிய நண்பர். புலிகள் காலத்தில் இருந்தே என் பேச்சுக்களை இரசிக்கும் மனிதர். கம்பன் விழா நிகழ்வுகள் ஒன்றையும் தவறவிடாதவர்.
தனது பதவியை வைத்துக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பலதரம் உதவி செய்திருக்கிறார். நான் மாறுபாடான கருத்துக்கள் சிலவற்றை எழுதினாலும், அதுபற்றிக் கவலைப்படாமல் இம்முறைகூட எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னார்.
ஆற்றல் உள்ள சுமந்திரனை, நம்மவர்கள் அநியாயமாய் வீழ்த்தியது பற்றி நான் பெரிதும் கவலை கொண்டிருக்கிறேன். பிரபாகரனும், சுமந்திரனும் தோற்றவர்கள் அல்ல. தோற்கடிக்கப்பட்டவர்கள்.
அத் தோல்வியால் சுமந்திரன் சோர்வுற்று விடக்கூடாது என்பதற்காகவே அவரை அதிகம் பாராட்டி எழுதுகிறேன். வென்றவர்க்கு எதற்குப் பாராட்டு? வெற்றியே பாராட்டு அல்லவா?
ஆனால் ஒன்று, சிறீதரனின் சில செயல்களால் நான் மன வருத்தமுற்றிருக்கிறேன். அதுபற்றி அவரோடு நேரில்தான் பேசவேண்டும்.
நிறைகள் பற்றிப் பொதுவில் பாராட்டலாம். குறைகள் பற்றித் தனியே சொல்வதுதான் நாகரிகம். சந்திப்புக்காய்க் காத்திருக்கிறேன்.
கேள்வி: ஜனாதிபதி, ‘முக்கியமான நேரத்தில் பாராளுமன்றத்துக்குள் நீங்கள் வராதது பெரிய இழப்பாய்ப் போயிற்று’ என்று தொலைபேசியில் சுமந்திரனிடம் வருந்தினாராமே?
பதில்: யார் தேவை என்று அவர்களுக்குத் தெரிகிறது. நம்மவர்களுக்குத் தான் தெரியவில்லை. அதனால்தான் அந்த இனம் வளர நாம் தேய்கிறோம்.
கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு மழையும் எதிரியா?
பதில்: ஒருநாளும் இல்லை. மழை ஒருவருக்கும் எதிரியாவது இல்லை. ஈழத் தமிழர்களுக்கான எதிரிகள் நம் மண்ணிலேயே நிறையப்பேர் இருக்கிறார்கள். விண்ணிலிருந்து தனியே வரவேண்டுமா என்ன?
கேள்வி: இந் நாட்டின் தமிழ், சமய அறிஞரெல்லாம் தாமுண்டு. தம் வேலை உண்டு என்று பேசாமல் இருக்கிறார்கள். நீங்களும் அப்படி இருந்து நல்ல பெயர் வாங்குவதைவிட்டு, சமூக விடயங்கள் பற்றி எல்லாம் பேசி பலரிடமும் ஏன் திட்டு வாங்குகிறீர்கள்?
பதில்: அவர்கள் உலகைத் திருப்தி செய்கிறார்கள். நான் தர்மத்தைத் திருப்தி செய்கிறேன். உலகத்தவரது பாராட்டாலும், திட்டாலும் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.
‘உண்மைகளைத் துணிந்து உரைக்க, தமிழ், சமய உலகில் ஒருவராவது இருந்தாரே!’ என வருங்காலம் சொன்னால் எனக்கு அதுவே போதுமானது. இவர்கள் திட்டினாலும் நிச்சயம் இறைவன் என்னை அங்கீகரிப்பான்.
கேள்வி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ‘பிடிவிறாந்து’ பிறப்பித்திருப்பது பற்றி?
பதில்: அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அமெரிக்கா நிழல் செய்யும் வரைக்கும் இஸ்ரேலை யாராலும் எதுவும் செய்யமுடியாது. நீதி நிலைநாட்டப்படாவிட்டாலும் அதனை உரைக்கவாவது உலகில் ஓர் அமைப்பு இருக்கிறதேயெனச் சந்தோஷப்படவேண்டியதுதான்.
அ.கனகசூரியர்