Home » மக்கள் மனங்களில் மாற்றம் இன்றேல் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனிதான்

மக்கள் மனங்களில் மாற்றம் இன்றேல் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனிதான்

தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர்

by Damith Pushpika
December 1, 2024 6:39 am 0 comment

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி, முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்படாதது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்தத் தேவையில்லையெனவும் அரசின் 5 வருட காலப்பகுதியில், அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும்போது முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். செவ்வியின் முழு விபரம் வருமாறு;

கேள்வி: தேசிய மக்களை சக்தி அரசாங்கத்தில் ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் பதவியை ஏற்றதன் பின்னர் உங்கள் பணிகளை மேற்கொள்வதில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை?

பதில்: நிச்சயமாக இலங்கையை பொறுத்தவரையில், இன ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் என்பது சவால் மிக்க ஒன்று. 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலகட்டத்தை எடுத்துப் பார்த்தால் சாதாரண மக்கள் தமக்கிடையே இன நல்லிணக்கத்தோடு தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளும், தமது ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகளாலும் ஒரு கருவியாகவே இனவாதம் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.

எனவே இனவாதம் இல்லாத சமூக நல்லிணக்கத்தை கொண்டு வருவது என்பது மிகவும் சவால் மிக்கது.

மக்கள் மத்தியில் ஆரோக்கியமான கருத்துக்களை பரப்பி இன பாகுபாட்டை வளர்க்காமல் இன நல்லிணக்கத்தை தூண்டுவதில் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது

ஆனால் துரதிர்ஷ்டவசமாக , கடந்த கால வரலாற்றை பார்த்தால் எல்லா ஊடகங்களும் அல்ல ஒரு சில ஊடகங்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக அவற்றிடையேயான பிளவை மேலும் கூர்மைப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

இனங்களுக்கிடையில் குரோதங்களை வளர்க்கும் வகையில் செயல்படும் ஊடகங்களை நான் கண்டிருக்கிறேன். அவ்வாறானதொரு சூழலில். நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடென்பவை சவாலானவைதான்.

மக்களின் மனோநிலையிலும் மாற்றம் வரவேண்டும் அவ்வாறு இல்லாமல் தேசிய நல்லிணக்கம் என்பது ஒரு எட்டாக் கனியாகத் தான் இருக்கும்

தேசிய நல்லிணக்கம் என்பது ஒவ்வொரு தனி மனிதனதும் மனங்களில் அல்லாமல் வெறுமனே அமைச்சு வடிவில் மாத்திரமே இருப்பதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்பதுதான் என் கருத்து

கேள்வி: தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் இருந்து ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அதி தீவிரம் காட்டி வரும் அரசாகும். அரசினால் எடுக்கப்படும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், முன்னாள் அமைச்சர்கள் அல்லது உயர் மட்டத்தில் இருந்தவர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராகவே அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த 76 வருட காலமாக அரசு நிர்வாகங்களில் இருந்தவர்கள் எல்லாருமே ஊழலுக்கு பழக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவுவதால், உங்கள் அமைச்சர்கள் ஊழல் அற்றவர்களாக இருந்தாலும் கீழ் மட்டங்களில் உள்ள அதிகாரிகளை ஊழல் அற்றவர்களாக மாற்றுவதில் சிக்கல்கள் இருக்கும் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: என்னைப் பொறுத்தளவில் இந்த நாடு வங்குரோத்து நிலை அடைய காரணம் இந்த நாட்டில் தலைவர்களின் இலஞ்சம், ஊழல் மற்றும் பொதுமக்கள் சொத்துக்களை அவர்கள் கொள்ளையடித்தது தான்,

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவி ஏற்றதன் பின்னர் அவ்வாறான எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுகளும் நிர்வாக மட்டங்களில் இருந்து நமக்கு பதிவாகவில்லை. ஜனாதிபதி இதற்கெல்லாம் முன் உதாரணமாக அமைந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டிருக்கும் ஒரு நாடு என்ற வகையில் சுகபோகங்களை எல்லாம் புறந்தள்ளி செயல்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.

நமக்கு தரப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு தேவையானவற்றை மாத்திரமே பெற்றுக் கொண்டு நாங்கள் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் என மேல்மட்டத்தில் இருக்கும் அனைவரும் ஊழல் இல்லாமல் பொதுமக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாமல் சிக்கனத்துடன் செயலாற்றுவதை பார்க்கும் போது கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் எல்லோருமே அதனைத் தான் பின்பற்றுவார்கள்.

ஊழல் ஒழிப்பை சட்டரீதியாக கடுமையாக அமுல்படுத்தினாலும் உயர்மட்ட அதிகாரிகளும் தங்களை அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிட்டால் அதில் பயன் இருக்கப் போவதில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அரசு மட்டங்களில் உள்ளவர்கள் எல்லோருமே ஊழல் அற்றவர்களாக இருக்கும்போது உயர் அதிகாரிகளும் அதனை பின்பற்றுவதை தவிர வேறு வழி இருக்காது என்பதுதான் எனது கருத்து.

கேள்வி: தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலை எந்த அளவுக்கு தடையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: நாட்டின் பொருளாதார நிலையென்பது நிச்சயம் தாக்கத்தை செலுத்தும் ஒரு காரணி தான். இவ்வாறு பொருளாதாரம் ஏன் அதலபாதாளத்துக்கு சென்றது என ஆராயபோனால், இதுவரை நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் பிழையான வழிநடத்தல்கள், சில நேரங்களில் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் என்பனவற்றைதான் குறிப்பிட முடியும். துரித பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவ்வாறு துரிதமாக மீட்சியடையக்கூடிய துறைகளாக உல்லாசப் பயணத்துறை போன்றவற்றை நாங்கள் இனங்கண்டுள்ளோம்.

இவ்வாறான துறைகளை இனங்காண்பதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.

அதன்படி, தேவையற்ற அரச செலவீனங்களைக் குறைப்பதோடு மற்றும் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. உலகளவில் எம்மீது நம்பிக்கை ஏற்படுகின்றபோது, எம்மால் முதலீடுகளை ஈர்க்க முடியும். கடந்த காலங்களில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய அரசின் திட்டங்கள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

கேள்வி: அமைச்சரவை அமைச்சு பதவி முஸ்லிம்களுக்கு வழங்கப்படாதது குறித்து உங்கள் பதில் என்ன?

பதில்: அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி, முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்படாதது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்தத் தேவையில்லை. அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அரசின் 5 வருட காலப்பகுதியில் முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இருக்கவேண்டும் என்பது முஸ்லிம் சமூகத்தினது விருப்பாக இருந்திருக்கின்றது. சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அமைச்சரவையில் இருந்து முஸ்லிம் பிரதிநிதியொருவர் அமைச்சவையில் அங்கம் வகித்திருக்கின்றார். அதுவொரு சமூக மனநிலை. அரசு ஒரு கூட்டணி அரசாக அமைகின்ற போது அதில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் கட்சிகள் தமக்கான அமைச்சுப் பதவிகளைக் கோரியே அதரவு வழங்குவார்கள். அவர்களுக்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதுண்டு. தேசிய மக்கள் சக்தி இவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கொண்டிருக்கின்றது, துறைசார்ந்து திறமையானவர்கள் எந்த மதத்தவராயினும், இனத்தவராயினும் தேசிய மக்கள் சக்தி அதன் அமைச்சரவையில் அவர்களை உள்ளீர்க்கும்.

அவ்வாறாயின், முஸ்லிம் சமூகத்தில் பொருத்தமானவர்கள் இல்லையா? என்ற கேள்வி எழலாம். ஆனால், அதில் முஸ்லிம், தமிழ் என்ற வேறுபாடு பாராமல் மக்களுக்கு பணியாற்ற துறைசார்ந்த சிறந்தவர் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். அதுமாத்திரமல்ல, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு என்பதும் 5 வருடங்களுக்கும் ஒரே மாதிரியானதாவும் இருக்காது. இடையில் மாற்றங்கள் வரலாம். அதில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம். எனவே, முஸ்லிம் சமூகம் பொறுமை காக்கவேண்டும்.

அரசு முழு இலங்கைக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்படுகையில், அதற்கு இன, மதம் பாராது ஆதரவு வழங்கவேண்டும். மாறாக அரசு இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்க முற்பட்டால் அதனை எதிர்ப்பதில் தவறில்லை. பொருத்தமானவர்களால் ஆளப்படுகின்ற ஒரு நாட்டின் பிரஜையாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.

கேள்வி: இறுதியாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இப்போதுதான் நாங்கள் நாட்டை பொறுப்பேற்றுள்ளோம். பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றுள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். இனவாதம் மலிந்து கிடந்த ஒரு மனப்பான்மையிலிருந்து தற்போதுதான் மீண்டுவந்திருக்கின்றோம். எனவே, இந்த அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். முன்னைய அரசாங்க காலத்தில் பாராளுமன்றம் வருபவர்கள், தமது குடும்பத்துக்கும் தமது சந்ததியினருக்கும் எவ்வாறு சொத்து சேர்ப்பது என்ற எண்ணத்துடனே வந்தார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு அவ்வாறல்ல. மக்களுக்காக சேவை செய்வதை நோக்கமாகக்கொண்டு அரசை பொறுப்பேற்றுள்ளது. எனவே எமது பணிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division