மழை பெய்யும் பொழுது வெயில், வெயில் இருக்கும் பொழுது மழை என சிக்கலான வளிமண்டல நிலைமைகள் இப்பொழுது தோற்றம் பெற்றுள்ளன. வழமையாக ஏற்படும் புயல்களில் கூட பூகோள வெப்பமடைதலின் காரணமாக பண்புரீதியான அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. மிக வேகமான காற்றுக்கள், கடற்கொந்தளிப்புக்கள் எதுவுமின்றி மோசமான செறிவுமிக்க மழைவீழ்ச்சியை ஏற்படுத்திய புதுமையான ஒரு நிகழ்வாக விளங்கிய தாழமுக்கம் தொடர்பாகவும் அதன் பிரதான அம்சங்கள், நகர்வுகள் மற்றும் வானிலைச் சூழல்கள் பற்றியே இங்கு நோக்கப்படுகின்றது.
உலக வளிமண்டலவியல் ஸ்தாபனத்தின் துணைச்செயலாளர் ஜெனரல் கோ பரட் என்பவர் ஏப்ரல் 23இல் இடம்பெற்ற ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான எண்பதாவது பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் அமர்வில் குறிப்பிடும்போது 2023 இல் ஆசியா வானிலை, காலநிலை மற்றும் நீருடன் தொடர்பான இடர்களினால் பாதிக்கப்படும் ஒரு பிராந்தியமாக இருக்கும் எனக் கூறப்பட்டதற்கு ஏற்பவே தற்பொழுது இடம்பெறும் நிகழ்வுகள் காணப்படுகின்றன. இடி மின்னல்களுடன் கூடிய கடுமையான புயல்களும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்பட்டு வருகின்றன. பூகோள வெப்பமடைதல் போக்குகளுக்கு மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் தூண்டப்படும் காலநிலை மாற்றம் முதல் நிலை ஊக்கியாகச் செயற்படுகின்றது.
அண்மைய காலங்களில் பூகோள வெப்பமடைதலின் காரணமாக கடல் மேற்பரப்பு வெப்பநிலைகளில் ஏற்படும் குழப்பமான அதிகரிப்புக் காரணமாக சூறாவளிகளை எதிர்வுகூறுவதென்பது குறிப்பாக, மேற்பரப்புக்குக் கீழாகவும், சூறாவளிகளைச் சுற்றியுள்ள காற்றின் நடத்தை காரணமாகவும் மிகக் கடினமானதும் சவால் மிக்க ஒன்றாகவும் காணப்படுகின்றது. வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்பொழுது 30 பாகை செல்சியஸ் ஆகவும் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் 32 பாகை செல்சியஸ் ஆகவும் காணப்படுவதினால் சூறாவளி விருத்திக்கான சாதகமான சூடான வெப்பநிலை அதற்குத் தேவையான வெப்பத்தினையும் ஈரப்பதத்தினையும் வழங்குகின்றது.
சமுத்திர வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பு எல்நினோ, லாநினா தோற்றப்பாட்டில் சிக்கலான நிகழ்வுகளை ஏற்படுத்துவதனால் எல்நினோ தென் ஊசலி வட்டத்தினைக் குறிப்பாக அதன் தோற்றம், செறிவுத்தன்மை மற்றும் காலம் என்பவற்றினை எதிர்வு கூறுவது கடினமாக மாறியுள்ளது. பசுபிக் சமுத்திரம் மிகப்பெரிய அளவில் ஆழமான நீரினைக் கொண்டு அமைந்துள்ளது. இது பூகோளம் முழுவதும் குழப்பமான காலநிலைப் பாங்குகளையும் உருவாக்குகின்றது. பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமடைதலும், குளிர்ச்சியும் எல்நினோ, லா நினாவைப் பொறுத்தவரை ஏனைய சமுத்திரங்களிலும் பார்க்க பெரிய அளவில் இடம்பெறும். ஆனால் வலிமையான நேர்க்கணிய இந்து சமுத்திர இருமுனை நிகழ்வுகள் இடம்பெறும் காலத்தில் எப்போதாவதுதான் இந்து சமுத்திரம் இத்தகைய மாறுதன்மையை கொண்டிருக்கும். இந்நிலையில் பசுபிக் சமுத்திரத்தின் சூடான கட்டம் தற்பொழுது குறைவடைந்து செல்லும் நிலையில் எதிர்க்கட்டமான லாநினா நோக்கி நகர்கின்றது. இந்நிலையில் இந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திரத்தின் கிழக்கு மத்திய கோட்டிற்கு மேலாகக் காணப்படும் தாழமுக்கப் பகுதி இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக் கரையோரமாக நகர்ந்து சென்னைக்கும் புதுச்சேரிக்குமிடையில் வலுவிழந்து கரையைக் கடக்கும் என கூறப்பட்டது.
டிசம்பர் 25ஆம் திகதி இந்து சமுத்திரத்தின் கிழக்கு மத்திய கோட்டில் தென்மேற்காக மையம் கொண்டிருந்த இத்தாழமுக்கம் திருகோணமலைக்கு தென்கிழக்காக 530 கிலோ மீற்றர், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 80 கிலோ மீற்றரிலும் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 1009 கிலோ மீற்றரிலும் நிலை கொண்டிருந்தது. அத்துடன் 68 பாகை கிழக்கு மற்றும் 32 பாகை வடக்கு அகலக்கோடு நெடுகிலும் குழப்பங்கள் காணப்பட்டன. வங்காள விரிகுடாவின் தென் பகுதிக்கு மேலாக வலிமையான மேலைக் காற்றின் ஒழுங்கற்ற தன்மை மற்றும் கீழைக் காற்றின் ஒழுங்கின்மை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியின் மேலாகக் காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளே வங்கக் கடலின் மேலாக நேர்க்கணிய ரீதியிலான தாழமுக்கத் தோற்றப்பாடு ஏற்படுவதற்கான சூழ்நிலையை தோற்றுவித்தது.
வங்காள விரிகுடாவில் மொன்சூனுக்கு இடைப்பட்ட ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்சீனக் கடல் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களினால் தூண்டப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் நவம்பர் 18 இன் பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்தது. இந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி இந்து சமுத்திரத்தில் மத்திய கோட்டுப் பகுதியின் மேலாக மேல் வளிச் சூறாவளி சுற்றுவட்டத்தின் விருத்தி சுமத்திராக் கரையோரத்துக்கு அப்பால் தென் அந்தமான் கடல் பகுதியுடன் இணைந்த முறையில் விருத்தி அடையும் எனக் கூறப்பட்டிருந்தது. சூறாவளியாக மாறுவதற்கான உள்ளார்ந்த தன்மையைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டாலும் நவம்பர் 23 காலையில் இது ஒரு தாழமுக்கப் பகுதியாகவே செறிவடையும் நிலை தென்பட்டது. இத் தாழமுக்கப் பகுதியின் உருவாக்கம் பற்றி இந்திய வளிமண்டலவியல் திணைக்களமும் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பூகோள எதிர்கூறல் முறைகள் விசேடமாக IMD GFS, NCEP GFS, ECMWF, NCUMG ஆகிய முக்கியமான மாதிரிகளின் எதிர்வுகூறலில் பரந்தளவான தாழமுக்கப் பகுதியொன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தெற்காக 26 ஆம் திகதி உருவாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அமுக்க இறக்கத்தத்தினை எடுத்துக் கூறிய மாதிரிகளில் அத்தாழமுக்கம் கொண்டிருக்கக் கூடிய செறிவுத்தன்மை தொடர்பாக பாரிய வேறுபாடுகள் இருந்தன. பூகோள எதிர்வுகூறல் முறைமை மட்டுமே அதிகூடிய செறிவுத்தன்மையைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எல்லா மாதிரிகளுக்கும் இடையில் ஒரு இணக்கம் இருந்ததை அவதானிக்க முடிந்தது. தாழமுக்க முறைமை பலவீனமடைந்து தமிழ்நாட்டு கரையைக் கடக்கும் என்பதை நான்கு மாதிரிகளும் குறிப்பிட்டிருந்தன. நவம்பர் 26 மற்றும் 27 இல் மிகக் கடுமையான மழைவீழ்ச்சி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு கிடைத்துள்ளது. இலங்கைக்கு கிழக்காக காணப்படும் வெப்ப நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் நகர்வு அமைந்திருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இதன் நகர்வு இருந்த காரணத்தினால் புயலாக மாற்றமடையவில்லை. நவம்பர் 29 இல் இது புயலாக மாற்றமடைந்து இந்தியாவின் தமிழ்நாட்டு கரையை கடந்து செல்லும் என கூறப்பட்டுள்ளது. வளிமண்டல நிலைமைகளில் ஏற்பட்ட சிக்கலான தன்மைகளின் காரணமாகவும், வங்காள விரிகுடா பகுதிகளில் மூன்று திசைகளிலிருந்து வந்த நீரோட்டங்களின் சங்கமத்தின் காரணமாகவும் இத் தாழமுக்கத்தின் நகர்வானது மெதுவாக இருந்தது. சமுத்திரத்தின் கீழ் காணப்பட்ட வெப்ப நீரோட்டத்திலேயே இதன் நகர்வு தங்கியிருந்த காரணத்தினால் சுழற்சி வேகம் குறைவடைந்து அதிக நாட்கள் நிலைத்திருந்து கடும் மழைவீழ்ச்சியுடன் கூடிய பெருமளவான வெள்ளப் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதுவரை காலமும் ஏற்பட்ட புயல்கள் போலன்றி இத்தாழமுக்கம் வித்தியாசமான பண்பு கொண்டதாக இருந்தது. வேகமான காற்றினைக் கொண்டிருக்கவில்லை. காற்றின் வேகம் ஏறக்குறைய மணிக்கு 80 கிலோ மீற்றருக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் மழைவீழ்ச்சி மிக கூடுதலாக இருந்தது. வியாழக்கிழமைக்கு பின்னரே இத்தாழமுக்கம் சூறாவளியாக மாறும் என குறிப்பிடப்படுகின்றது. தாழமுக்கம் செறிவடையும் பொழுது சவுதிஅரேபியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள ‘பெங்கால்’ என்னும் பெயர் இதற்கு சூட்டப்படும். மொன்சூன் பருவ காலம் முடிவடைந்த பின்னர் இடைப்பட்ட தாழமுக்கக் காலத்தில் ஏற்படும் இரண்டாவது புயலாக இது காணப்படுகின்றது. இலங்கையில் வட கீழ் மொன்சூன் பருவகாலம் இன்னமும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூறாவளியாக இத்தாழமுக்கம் செறிவடையும் பொழுது தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் போன்றவற்றிற்கு மிகக் கடுமையான மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமேற்குப் பகுதியை நோக்கி இலங்கைக்கு கிழக்காக கரையோரமாக நகரும் இத்தாழமுக்கம் கிழக்கு நோக்கிய நகர்வினால் (ஏறக்குறைய 40 கிலோ மீற்றர்) சிறு தடுமாற்றத்தைக் கொண்டிருந்தாலும் பாதையில் எந்தவித மாற்றமும் இன்றி எதிர்வுகூறப்பட்டதன் படியே தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. வழமைக்கு மாறாக பசுபிக் சமுத்திரத்தின் மத்திய கோட்டுப் பகுதியில் கடல் மேற்பரப்பு குளிர்ச்சி தோற்றம் பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு எல்நினோ வருடமாக மிக வெப்பமாக இருந்தது போலவே 2024 ஆம் ஆண்டு லாநினா வருடமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் இந்து சமுத்திரத்தின் வடக்குப் பிரதேசத்தில் லாநினா வருட காலங்களில் வங்கக் கடல் மற்றும் அராபியன் கடல் பகுதிகளில் விருத்தியடையும் சூறாவளிகள் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு கரைகளை நோக்கியே நகரும் போக்கினைக் கொண்டிருக்கும் என்பது முக்கியமானது.
தமிழ்நாடு மற்றும் அதற்கு அருகாக உள்ள கர்நாடகாவின் தெற்கு உட்பட்ட பகுதிகளில் முகிற் போர்வைகள் அதிகளவில் காணப்படுவதுடன் குளிரான தன்மையும், காற்று சற்று வேகமாகவும் காணப்படும் நிலைமை தற்பொழுது நிலவுகின்றது. வெப்பநிலை வழமையான நிலைக்குக் கீழாகவே இருக்கும். சனிக்கிழமை வரை 24 மணித்தியாலத்தில் ஏறக்குறைய 200 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வித்தியாசமான இயற்கை நிகழ்வாக இது இருப்பதனால் வெள்ளி இரவு தமிழகத்தில் தீவிர மழை காணப்படும். முல்லைத்தீவுக்கு அப்பால் 150 கிலோ மீற்றரிலும் காங்கேசன் துறைக்கு அப்பால் 250 கிலோ மீற்றரிலும் நிலை கொண்ட தாழமுக்கம் முல்லைத்தீவு பகுதியிலுள்ள வலுவான நீரோட்டத்தினால் கட்டுப்பட்டது. சுருக்கமாகக் கூறினால் பெங்கால் புயலை கடல் நீரோட்டங்களே வழிநடத்துகின்றன. இதனால் தான் குறைவான நகர்வு வேகத்துடன் நிலை கொண்டு மிகக் கடுமையான மழைவீழ்ச்சியை கொடுத்து வருகின்றது. வடக்கு நோக்கிய தாழமுக்கத்தின் நகர்வினால் புதன் கிழமையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மழை குறைவடையத் தொடங்கியுள்ளது. நவம்பர் 30 வரை காற்றுடன் கூடிய கடும் மழை இடம்பெறும் என சமூக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிடப்பட்டது. வட இந்தியக் குளிரலையின் தாக்கம் அதிகமாக இருப்பதினாலும் போதிய வெப்பம் கிடைக்காத காரணத்தினாலும் தாழமுக்க நிகழ்வில் சிக்கல்நிலை ஏற்பட்டது. மலேசியப் பகுதியிலிருந்து வரும் வெப்ப நீரோட்டம் இதன் இயக்கத்தில் செல்வாக்கைக் கொண்டிருந்தது.
இத்தாழமுக்கப் பாதிப்பினால் மக்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன. வெல்லாவெளி, மண்டூர் பகுதிகள், நிந்தவூர், சாய்ந்தமருது வயல் நிலங்கள் மடுப் பிரதேச தாழ்நிலப் பகுதிகள் சம்மாந்துறை வயல் நிலங்கள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் இடி, மின்னல், புயலுடன் மழை இடம்பெற்றுள்ளது. வட மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழைவீச்சி இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கடியான ஒரு நிலைமையையும் ஏற்படுத்தி உள்ளது. டிசம்பரில் வரப்போகும் மேலும் இரண்டு நிகழ்வுகளுக்கு மக்கள் மீண்டும் தயாராக இருக்க வேண்டும். டிசம்பர் 10 ஆம் திகதிக்குப் பின்னர் தென் சீன கடலில் மத்திய கோட்டில் இலங்கைக்கு தெற்காக இன்னொரு புயல் நிகழ்வும், கிறிஸ்மஸுக்குப் பின்னர் இன்னொரு புயல் நிகழ்வும் ஏற்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூகோள வெப்பமடைதலின் தாக்கம் காரணமாக தொடர்ச்சியாக இத்தகைய அனர்த்தங்கள் உருவாகி வருவதை மனிதனால் தடுக்க முடியாது.
கொழும்புப் பல்கலைக் கழகம் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எஸ். அன்ரனி நோர்பேட்