இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் முடிந்து இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறப்போகிறது. இந்த ஆண்டில் ஐந்து ஒருநாள் தொடர்களை வென்ற இலங்கை, டி20 போட்டியிலும் சோபித்து வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணியில் மிதமிஞ்சிய வீரர்கள் திறமையை வெளிக்காட்டி வருவது எதிர்காலத்திற்கு நல்லது.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது தனியே பயணிக்கும் ஒன்று, அதற்காக அனுபவம் மிக்க பிரத்தியேக வீரர்கள் இருப்பதால் இலங்கை டெஸ்ட் அணியை பார்க்க வேண்டிய கோணமே வேறு. இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அண்மைய ஆண்டுகளில் பெரும் சரிவுகளை சந்தித்தபோதும் டெஸ்ட் எப்போதுமே ஒரு குறைந்தபட்ச ஸ்திரத்தன்மையையாவது தக்கவைத்து வருகிறது.
எனவே நடைபெறப்போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்பது நிச்சயமாக சவால் மிக்கது. தென்னாபிரிக்காவை தென்னாபிரிக்க மண்ணில் எதிர்த்தாடுவது சாதாரணப்பட்டதல்ல. ஆட்டச் சூழலை பழகிக்கொள்வது, ஆடுகளங்களை கையாள்வது, திறமையான எதிரணியை எதிர்கொள்வது என்று ஒவ்வொரு தருணத்தையும் பார்த்துப் பார்த்து விளையாட வேண்டும்.
அதற்காகத் தான் இலங்கை டெஸ்ட் அணியின் பிரத்தியேக வீரர்கள் ஏற்கனவே தென்னாபிக்கா சென்று பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காகவே தென்னாபிரிக்க முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மக்கன்சி இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரின் கீழே ஏற்கனவே தென்னாபிரிக்கா சென்ற டெஸ்ட் அணி தலைவர் தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ மத்தியூஸ், பிரபாத் ஜயசூரிய போன்ற வீரர்கள பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 27 தொடக்கம் டிசம்பர் முதலாம் திகதி வரை டர்பட், கிங்ஸ்மீட்டில் நடைபெறப்போகிறது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் கிபர்ஹா, செயின்ட் ஜோர்ஜ் பார்க்கில் டிசம்பர் 5 தொடக்கம் 09 ஆம் திகதி வரை நடைபெறும்.
இரண்டே இரண்டு டெஸ்ட் தான், ஆனால் எதிர்பார்ப்புகள் அதிகம். ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் உலகக் கிண்ணம். இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் இந்த டெஸ்ட் பருவத்தின் இறுதிப் போட்டிக்கு நுழைய இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு சரிக்கு சமமாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதற்கு இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கு முக்கியமானது. ஆனால் இலக்கை எட்டுதென்பது பெரும் சவால் மிக்கது. எனவே இந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் இலகுவாக எடுத்துக் கொள்ளாது. இலங்கை அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்வதைப் பார்த்தாலே புரிகிறது.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதிலே எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் வீரர்கள் தவிர அண்மைக் காலத்தில் பெரிதாக சோபிக்காதபோதும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ அழைப்பட்டனர்.
எம்புல்தெனிய இலங்கை அணிக்காக கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடி இரண்டு ஆண்டுகள் கடந்திருப்பதோடு ஓஷத வாய்ப்புப் பெற்று ஓர் ஆண்டு கடந்துவிட்டது. என்றாலும் இந்த இருவரும் கடைசியாக 2019 இல் இலங்கை அணி தென்னாபிரிக்கா சென்றபோதும் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதுவே அவர்கள் இப்போது அணிக்கு அழைக்கப்படுவதற்கு விசேட தகைமையாக மாறி இருக்கிறது.
என்றபோதும் இந்த டெஸ்ட் தொடரில் அதிகம் அவதானிக்கப்படும் வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகத் தான் இருப்பதால். டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை ஆடிய எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் 5 சதங்கள் 4 அரைச்சதங்களுடன் 1004 ஓட்டங்கள் பெறுவதென்பது உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒன்று. அதிலும் அவரது ஓட்ட சராசரியான 91.27 என்பது ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு உரியது.
எனவே தென்னாபிரிக்காவில் இலங்கை சாகசம் நிகழ்த்த வேண்டுமாயின் கமிந்து மெண்டிஸ் முக்கியமானவர். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் நிசங்கவும் முக்கியம். அவரது சுழல் தென்னாபிரிக்க மண்ணில் எப்படி செயற்படப்போகிறது என்பதை வைத்துத் தான் இலங்கையின் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்பட முடியும்.
திமுத் கருணாரத்ன தொடக்கம் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய அனுபவ வீரர்களின் பட்டாளம் பொறுப்புடன் ஆடினாலேயே சாதிக்க முடியும்.
உலக டெஸ்ட் சம்பியன்சிக் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லோட்ஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு ஆடுவதற்கு இலங்கைக்கான வாய்ப்பு போதுமாக உள்ளது. அதற்கு இந்த தென்னாபிரிக்க டெஸ்;ட் தொடர் முக்கியம்.
கடந்த ஓகஸ்ட், செப்டெம்பரில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியால் வெல்ல முடிந்ததே இலங்கையின் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி கனவு அதிகரிக்கக் காரணம்.
இலங்கை அணி இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரை அடுத்து சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்ள வேண்டும்.
இதிலே மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்றாலேயே இலங்கையால் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். எனவே தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஒன்றிலேனும் வெற்றி பெற்று தோற்காமல் இருப்பது அவசியம். இது பெரும் சவாலாக இருந்தாலும் முடியாததல்ல.
மறுபக்கம் தென்னாபிரிக்க அணிக்கும் இதே சவால் தான். அதாவது தென்னாபிரிக்க அணிக்கு இந்த உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன. இலங்கைக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளுடன் சொந்த மண்ணில் பாகிஸ்தானை இரு டெஸ்ட் போட்டிகளில் சந்திக்கப்போகிறது.
தென்னாபிரிக்க அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் அந்த அணியும் எஞ்சிய நான்கு டெஸ்ட்களில் மூன்றில் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்ய சாதகமான சூழல் இருக்கிறது.
எனவே ஆரம்பமாகும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் என்பது ஒரு சாதாரண டெஸ்ட் தொடர் என்பதை விடவும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் காலிறுதிப் போட்டிகளாக பார்க்க முடியும்.