2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றியெழுதுவதற்கான ஆரம்பமாக அமைந்திருந்தது மாத்திரமன்றி, வரிசையான சாதனைப் பதிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தனியொரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது வெற்றிகள் மூலம் சாதனைகளைப் பதிவு செய்து வருகின்றது.
இந்த வரிசையில் கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட அமைச்சரவையும் இச்சாதனைகளில் ஒன்றாக ஏற்கனவே பேசப்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் காணப்பட்ட அமைச்சரவையின் எண்ணிக்கையில் மாத்திரமன்றி பல்வேறு விடயங்களில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளடங்கலாக 21 பேரைக் கொண்ட அமைச்சரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. அமைச்சர்களை நியமிக்கும் நிகழ்வு மிக மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைச்சர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அநுர குமார திசாநாயக்க தெளிவாகக் கூறியிருந்த விடயம் தமது அரசாங்கத்தில் அமைச்சரவையின் எண்ணிக்கை 25 இற்குள் காணப்படும் என்பதாகும். அதற்கு அமைய 21 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பதுடன், பிரதியமைச்சர்கள் எண்ணிக்ைக 25 ஆகும்.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையையும் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் அமைச்சரவையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாரிய வித்தியாசத்தை உணர முடியும். கடந்த காலங்களில் காணப்பட்ட அதிகரித்த அமைச்சரவை மற்றும் அவர்களைப் பராமரிப்பதற்கு பொது நிதியின் விரயம் போன்றவற்றால் விரக்தியுற்றிருந்த மக்கள் தேசிய மக்கள் சக்தி போன்றதொரு கட்சியைத் தேர்ந்தெடுத்தனர்.
குறிப்பாக கடந்த ஆட்சிகளில் அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புக்கள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டன. தேர்தல் காலத்தில் தமக்காகப் பாடுபட்டவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைப்பதற்காக உறுப்பினர்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பதுமே இதன் பிரதான நோக்கமாக இருந்தன.
குறிப்பாக எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை அரசுக்குச் சார்பாகத் திருப்புவதற்காக எலும்புத் துண்டைப் போடுவதைப் போன்று அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியே இழுத்தெடுத்திருந்தனர். மக்களால் வெகுவாக வெறுக்கப்பட்ட ஆளும் கட்சிகளின் இந்த அரசியல் அணுகுமுறை இம்முறை முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெறுமனே 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமித்ததன் மூலம் புதியதொரு முன்னுதாரணம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னைய அமைச்சரவைக்கும், தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவைக்கும் இடையில் காணப்படும் மற்றுமொரு பிரதான வேறுபாடு நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் தகுதிகள் ஆகும். இலங்கை வரலாற்றில் மிகவும் படித்த அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக இது காணப்படுகின்றது.
அமைச்சரவையில் உள்ள அனைவரும் ஆகக்குறைந்த கல்வித் தகைமையாக பட்டக் கல்வியைப் பெற்றவர்களாவர்.
இந்த அமைச்சரவையில் மூன்று பேராசிரியர்கள், கலாநிதிப் பட்டம் பெற்ற மூவர், வைத்திய கலாநிதிகள் இருவர், பொறியியலாளர், சட்டத்தரணி எனப் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றவர்களைக் கொண்ட கலவையாக இது அமைந்துள்ளது. பிரதமர் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பது சிறப்பம்சமாகும்.
ஆனால் இதற்கு முன்னர் இருந்த அமைச்சரவையில், எப்போதாவது ஒரு பேராசிரியர், வைத்திய கலாநிதி, ஒரு சில வழக்கறிஞர் என ஒரு சிலர் மாத்திரமே உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். அரசியல்வாதிகள் என்பவர்கள் கல்வி மட்டம் குறைந்தவர்கள் என்ற மக்களின் விமர்சனங்களை இந்த அரசாங்கம் உடைத்தெறிந்துள்ளது. மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.
தகுதியான அமைச்சர்கள்:
அமைச்சுப் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்களை நியமித்தது மாத்திரமன்றி, அமைச்சுகளின் விடயப் பொறுப்புகள் சரியான முறையில் ஒதுக்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் விஞ்ஞான ரீதியில் அமைச்சரவையை நியமிக்கின்றோம் எனக் கூறிக்கொண்டாலும், அமைச்சுக்களின் விடயப் பரப்புக்கள் எவ்வித அடிப்படைகளும் இன்றி பிரிக்கப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட வேண்டிய அமைச்சுக்கள் பல தனித்தனி அமைச்சுகளாக்கப்பட்டிருந்தன.
உதாரணமாக, சுகாதார அமைச்சு ஒரு காலத்தில் நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டது, அதேசமயம் நெடுஞ்சாலைகள் உயர்கல்வியுடன் இணைக்கப்பட்டது. சில சமயங்களில், ஒரே தயாரிப்புக்கான உற்பத்தி மற்றும் விநியோகப் பொறுப்புகள் வெவ்வேறு அமைச்சுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு தேவையற்ற குழப்பமும் திறமையின்மையும் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
எனினும், தேசிய மக்கள் சக்தியின் நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறை எதிர்காலத்தில் தேவையற்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைகின்றது.
அதேபோல, இதுவரை காலமும் நிரந்தர அமைச்சர்கள் எனக் கூறிக்கொண்டு உலவியவர்கள் இல்லாமல் போயுள்ளனர். பல தசாப்தங்களாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த மூத்த அரசியல்வாதிகள் சிலர் இருந்தனர்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், அரசாங்கத்தின் கொள்கை எதுவாக இருந்தாலும் அதில் போய் ஒட்டிக் கொள்வார்கள். அமைச்சுப் பொறுப்புக்களுக்காக எப்பொழுதும் பக்கம் தாவிக்கொண்டே இருப்பவர்கள் அவர்கள்.
அவ்வாறானவர்கள் இம்முறை தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருப்பதால் தவளை போன்று அங்கும் இங்கும் பாயும் அரசியல்வாதிகளின் தேவை இவர்களுக்கு இருக்காது என்பதும் மற்றுமொரு சாதனையே.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிய அப்பியாசக் கொப்பியொன்றுக்குச் சமமானதாக அமைகின்றது. மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களை சரியான முறையில் எழுதுவார்களாயின் நாடு இதுவரை எதிர்நோக்கிய பின்னடைவுகளில் இருந்து முன்னேறி அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் என்பது திண்ணம்.
ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்பார்ப்பு:
அது மாத்திரமன்றி, சுமார் 68 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் குறிப்பாக நாட்டின் அனைத்துத் திக்கிலும் உள்ள மக்கள் ஜனாதிபதி அநுர குமார மீதும், அவர் முன்வைத்துள்ள கொள்கைகள் மீதும் கொண்டுள்ள எதிர்பார்ப்பு அளப்பரியது.
இதுவரை காலமும் இல்லாத வகையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு கட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பாரிய பொறுப்பு புதிய அமைச்சரவைக்கு உள்ளது. இதனை ஜனாதிபதியும் அமைச்சரவை நியமன நிகழ்வில் வலியுறுத்திக் கூறியிருந்தார்.
மக்கள் ஆணையின் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்துவதில் எப்பொழுதும் உறுதியாக இருக்குமாறு ஜனாதிபதி புதிய அமைச்சர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
‘ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு ஒரு சாதாரண குடிமகனை விட பாரிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கெல்லாம் அது புரியும். நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்களிடம் அந்த வரம்புகள் உள்ளன. உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. உங்களிடம் ஒரு பிணைப்பு உள்ளது.
அதனைப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும், இங்கு அமைச்சரவைக்கு மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கும் பலர் புதியவர்கள். ஆனால் நாங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளோம். நீங்கள் ஒரு தொழிற்துறையைப் போலவே வேகமாக பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் செயற்பாட்டாளராக பணியாற்றியுள்ளீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள், பாராளுமன்றத்திற்கு புதியவர்கள், ஆனால் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. பணியாற்றுவதில் புதியவர்களல்ல’ என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
‘இந்தப் பணியை நேர்மையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையுடன்தான் நாம் செயற்படுகிறோம். மேலும், ஒரு சமயத்தில் அரசியல் நோக்கங்களுக்காக இயக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்காக பங்காற்ற வேண்டியிருந்தது. எங்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தன. அந்த நோக்கங்களை அடைவதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் பாடுபட்டோம்.
நமது கோஷங்கள், நமது செயல்பாடுகள் இவை அனைத்தும் அதிகாரத்தைப் பெறும் போராட்டத்தின் போக்கில்தான் இருந்தன. நாம் முட்டிமோதி இந்த நாட்டு மக்களுக்கு இந்தத் தேவையை உணர்த்தியுள்ளோம். அதுதான் பெறுபேறு. அரசியல் வெற்றி கிடைத்துள்ளது.
எம்மை இனி அரசியல் கோஷங்களால் மட்டும் அளவிடக் கூடாது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னரும், நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னரும், எங்கள் கோஷங்களின் அடிப்படையில்தான் எம்மை அளவிட்டார்கள்.
ஆனால், நவம்பர் 14ஆம் திகதிக்குப் பிறகு, ஆட்சியில் நாம் சிறப்பானவர்களா இல்லையா என்ற காரணிக்கமையவே அளவிடுவர். முன்பெல்லாம் நமது அரசியல் செயற்பாடு நல்லதா, கெட்டதா என்பதை வைத்து அளவிடப்பட்டது. இனிமேல் நமது ஆட்சி நல்லது கெட்டது என்ற காரணியால் எம்மை அளவிடுவர்’ என்ற விடயத்தையும் ஜனாதிபதி புதிய அமைச்சர்களுக்கு நினைவுபடுத்தியிருந்தார்.
கொள்கை ரீதியில் உறுதிப்பாட்டைக் கொண்டு இதுவரை காலமும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் நீண்டகாலக் கனவை நனவாக்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பலர் மத்தியில் உருவாகியுள்ளது.
அத்துடன், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள புதிய அமைச்சர்கள் பலர் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தி, வினைத்திறன் மிக்க அரசாங்க சேவையை வழங்குவதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இதில் பாரபட்சம் இன்றி சரியான வழிப்படுத்தல்களுடன் விடயங்களை முன்னெடுப்பதும், கொள்கைக்கான பற்றுறுதியுடன் அனைவரும் செயற்படுவதுமே காலத்தின் தேவை என்பதுடன், ஒட்டுமொத்த இலங்கையினதும் எதிர்பார்ப்பாகும்.