Home » தியவன்னாவையை சுத்தப்படுத்திய பொதுத் தேர்தல்

தியவன்னாவையை சுத்தப்படுத்திய பொதுத் தேர்தல்

by Damith Pushpika
November 24, 2024 6:00 am 0 comment
  • முற்றிலும் முழுமையான அதிகாரம். இதை வைத்துக்கொண்டு ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யலாம் என்று அந்த அரசியலைமைப்பைக் கொண்டு வந்த ஜே. ஆர். ஜயவர்தன கூறினார்
  • அந்த அதிகாரத்தின் சில இறகுகள் இப்போது கத்தரித்து விடப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற அறுதிப்பெரும்பான்மையை எந்த ஒரு தனிக்கட்சியும் பெறமுடியாது என்ற ஆரம்ப கால நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது
  • பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் புதுமுகங்கள். ஆகவே அவர்களுக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு பழக்கப்படவும் சற்று கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்
  • ஆரம்ப நிகழ்வின் ஒரு கரும்புள்ளியாக யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினரின் மோசமான நடத்தை அமைந்திருந்தது
  • அவரோடு வந்திருந்த ஒரு பெண் பார்வையாளர் கலரியில் இருந்து அவருக்கு பறக்கும் முத்தம் வழங்கியமையும் அவர் எதிர்க்கட்சித்தலைவர் ஆசனத்தில் அமர முற்பட்டு பாராளுமன்றப் பணியாளர்களோடு முரண்பட்டமையும் அவரைத் தெரிவு செய்து அனுப்பிய வாக்காளர்களுக்கு செய்யப்பட்ட மோசமான அவமானமாகவே கருத வேண்டும்
  • இது போன்ற அலங்கோலமான நடத்தைகள் இனிமேலும் நடைபெறாமல் பாராளுமன்றத்தின் கௌரவம் இப்புதிய அரசாங்கத்தின் கீழ் பேணப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
  • ஒவ்வொரு சமூகத்தின் இருப்பும் அதன் அதிகார இருப்பில் தான் தங்கியுள்ளது என்ற கருத்துருவம் மாற்றமடையும் வரையிலும் எல்லாச் சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது தவிர்க்க முடியாது

இலங்கை ஜனாதிபதி அனுர குமார கடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி சரியான திசையில் பயணிக்க வேண்டுமாயின் தியவன்னாவை சுத்தப்படுத்தும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தருமாறு வாக்காளார்களைக் கேட்டிருந்தார். பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் தியவன்னாவை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியே கொட்டியது மாத்திரமன்றி யாரும் எதிர்பார்த்திட முடியாதளவுக்கு ஒரு மாபெரும் வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஏன் தேசிய மக்கள் சக்தி கூட இத்தகைய ஒரு வெற்றியை கனவிலும் கருதியிருக்க முடியாது. வடக்கு கிழக்கில் இனவாதம் நிலவுகிறது என்ற தெற்கின் நிலைப்பாட்டை அங்குள்ள வாக்களர்கள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். தெற்கில் ஒரு தமிழர் வாக்குப்பெற்று வெற்றியடைவது கடினம் என்ற நிலைப்பாட்டை தெற்கு வாக்காளர்கள் தெறித்துப்போகச் செய்திருக்கிறார்கள். கொழும்பு வாழ் தமிழர்களும் இம்முறை தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றி தரவில்லை. முஸ்லிம் தரப்பினர் மத்தியிலும் இதே மாற்றங்கள் வேறொரு அளவுத்திட்டத்தில் ஏற்பட்டிருக்கிறது. 2019 இல் கோட்டாபய வெற்றி பெற்றபோது, தான் சிங்களப்பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றதாக இறுமாப்புடன் மார்தட்டிக்கொண்டார். இம்முறை இலங்கை வாழ் மக்களில் அறுதிப் பெரும்பான்மையின் ஆதரவுடன் அநுர குமார அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. ‘‘Power Corrupts, Absolute Power Corrupts Absolutely’ ’ என்பது ஒரு ஆங்கிலப்பழமொழி அதிகாரம் ஊழல் நிறைந்தது முழுமையான அதிகாரம் நிச்சயமான ஊழலை உருவாக்கும் என்பது இதன் தமிழாக்கம். இப்போது மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பது முற்றிலும் முழுமையான அதிகாரம். இதை வைத்துக்கொண்டு ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யலாம் என்று அந்த அரசியலைமைப்பைக் கொண்டு வந்த ஜே .ஆர். ஜயவர்தன கூறினார். அந்த அதிகாரத்தின் சில இறகுகள் இப்போது கத்தரித்து விடப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற அறுதிப்பெரும்பான்மையை எந்த ஒரு தனிக்கட்சியும் பெறமுடியாது என்ற ஆரம்ப கால நம்பிக்கை சிதறடிக்கப்பட்டிருப்பதுடன் பாராளுமன்ற அறுதிப் பெரும்பான்மையுடன் பலவிடயங்களை தற்போதைய அரசாங்கம் சாதிக்க முடியும். ஆயினும் அநுர குமார அரசாங்கம் ஊழலை முற்றாகக் களைவதற்காகவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காகவும் நல்லாட்சிமுறையினை நிலைநிறுத்தி நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதற்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மிகப்பெரும் பெரும் பொருட் செலவில் மிகப்பெரும் எடுப்பில் இதுவரை நடந்த பதவியேற்பு வைபவங்கள் மிகவும் எளிமையான முறையில் குறைந்த பொருள் செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்த வலைப் பதிவாளர் ஒருவர் இம்முறை பாராளுமன்ற அமர்வு ஒரு நகரசபைக் கூட்டம் போல இடம் பெற்றதாக பதிவிட்டிருந்தார். இன்னும் மகாராஜாக்கள் கால மனப்பாங்கில் இருந்து இப்படிப்பட்டவர்கள் இன்னும் வெளிவரவே இல்லை என்பதை இது வெளிக்காட்டுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் புதுமுகங்கள். ஆகவே அவர்களுக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு பழக்கப்படவும் சற்று கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். சபாநாயகரின் தலையங்கி போடப்பட்டிருந்த விதம் குறித்தும் மீம்கள் வெளியாகி இருந்தன. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ஆரம்ப நிகழ்வின் ஒரு கரும்புள்ளியாக யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினரின் மோசமான நடத்தை அமைந்திருந்தது. அவரோடு வந்திருந்த ஒரு பெண் பார்வையாளர் கலரியில் இருந்து அவருக்கு பறக்கும் முத்தம் வழங்கியமையும் அவர் எதிர்க்கட்சித்தலைவர் ஆசனத்தில் அமர முற்பட்டு பாராளுமன்றப் பணியாளர்களோடு முரண்பட்டமையும் அவரைத் தெரிவு செய்து அனுப்பிய வாக்காளர்களுக்கு செய்யப்பட்ட மோசமான அவமானமாகவே கருத வேண்டும். இது போன்ற அலங்கோலமான நடத்தைகள் இனிமேலும் நடைபெறாமல் பாராளுமன்றத்தின் கௌரவம் இப்புதிய அரசாங்கத்தின் கீழ் பேணப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் மீள இடம் பெற்றிருந்தன. இனவாதத்திற்கு இனிமேல் நாட்டில் இடமில்லை என்றும் இன, மத, மொழி அடிப்படையிலான பேதங்கள் களையப்படும் என்று அவர் குறிப்பட்டார். இது தொடர்பில் குறிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் இப்பேதங்கள் பதவியில் இருந்த அரசாங்கங்களினதும் அதிகாரிகளினதும் நடத்தைகளினாலேயே ஏற்பட்டனவே அன்றி மக்கள் தாமாகவோ ஒரு போதும் வேறுபாடுகளையோ பிரிவினைகளையோ ஆதரித்ததில்லை. இலங்கையில் இருமுறை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தித் தலைவர்களுக்கு அது புரியாமல் இருக்க முடியாது. ஆகவே அரசு தலைவர் எதிர்பார்ப்பது போல இலங்கையர்கள் என்ற ஒற்றுமையை நாட்டுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால இலங்கை ஒரே தேசமாக முன்னேற முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும். இப்போதே முஸ்லிம் தரப்பினருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படவில்லை என்ற எதிர்வினைகள் அச்சமூகத்தின் இரு கல்விமான்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. சிலவருடங்களுக்கு “முன்னர் ஒரு முன்னாள் ஜனாதிபதியுடன் இடம் பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது பூசை நடக்கிற சந்தர்ப்பத்தில் பேய்களுக்கு பலிகொடுப்பது போல பங்காளிக்கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டியிருக்கிறது. அவர்கள் இதைத் தான் கேட்கிறார்கள். வழங்காவிட்டால் ஆதரவு தரமாட்டார்கள். ஏன் அமைச்சுப்பதவிகள் இல்லாவிட்டால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதா?” எனக்கேட்டார். இன்றைய அரசாங்கத்திலும் அப்படி பேய்களுக்கு பலி கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் ஒவ்வொரு சமூகத்தின் இருப்பும் அதன் அதிகார இருப்பில் தான் தங்கியுள்ளது என்ற கருத்துருவம் மாற்றமடையும் வரையிலும் எல்லாச் சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது தவிர்க்க முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த போதிலும் இந்த அரசாங்கத்தின் எதிர்கால நன்நம்பிக்கை தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டுமாயின் எல்லாச் சமூகங்களுக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எதிர்க்கட்சிகள் கலங்கித்தான் போயிருக்கின்றன. இந்தத்தேர்தலில் மக்கள் வெளுத்துத் துவைத்து காயப்போடுவார்கள் என்ற பயத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியலில் ராஜபக் ஷ இளவல் மீண்டும் பாராளுமன்றம் வந்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணிக்கு கிடைத்த தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்கவை உள்ளே அனுமதித்தமை ரணிலை கடுப்பாக்கி இருக்கிறது. சஜித் பிரேமதாசவின் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம் வேண்டுமென்று ஹிருணிகா போர்க்கொடி தூக்குகிறார்.

டக்ளஸ் தேவானாந்தா, மனோ கணேசன் உட்பட பிரபலமான தமிழ் தலைவர்கள் தமது பாராளுமன்ற ஆசனங்களை இழந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான பின்னடைவாக இருக்கக் கூடும். ஆனால் இந்தத்தேர்தலில், வாக்காளர்கள் தமிழ்த் தலைமைகளுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் மிகப்பெரிய இடர்அபாயமுள்ள ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். அதன் விளைவுகள் சிலவேளை தற்கொலைக்கு சமமானதாகவும் இருக்கக் கூடும். ஆனால் தமிழர்களின் வாக்குகள் எப்போதும் உங்களுக்குத்தான் கிடைக்கும் என்று கனவு காணாதீர்கள். உங்களை திருத்திக் கொள்ளுங்கள் என்பது தான் அது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division