சிவகார்த்திகேயனின் இரண்டு தாத்தாக்கள் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தியவர்கள். அந்தளவிற்கு புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் ஆவார்கள். இதுபற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
3 என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன், மெரினா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என்று படிபடியாக நல்ல படங்களில் நடித்து திரைத்துறையில் சாதித்தவர். அந்தவகையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான அமரன் படம் 200 கோடி வசூலைக் கடந்து வருகிறது. ஒரு மாபெரும் ஹிட்டைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.அந்தவகையில் இவரின் சொந்த ஊர் திருச்சி என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், இவரின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக இடம் திருச்சியல்ல.
அவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்தான். சிவாவின் அப்பா நாச்சியார்கோவில் போகும் வழியில் உள்ள நன்னிலம் அருகிலுள்ள திருவீழிமிழலையில்தான் வாழ்ந்தாராம். இங்குள்ள திருவீழிதாதேஸ்வர திருக்கோயில் அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
இப்படி புகழ்பெற்ற இந்த கிராமத்தில்தான் இரண்டு புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள்தான் சிவகார்த்திகேயன் தாத்தாக்களாகிய கோவிந்தராஜ் பிள்ளை, தட்சணாமூர்த்தி பிள்ளை ஆகியோர். அந்தக் காலத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள் என்று சொன்னால் இசைத்துறையில் அனைவருக்குமே தெரியும்.
ஒரு சின்ன கிராமத்திலிருந்து கொண்டு அந்தக் காலத்திலேயே வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி செய்தவர்கள் இவர்கள்.
நினைத்துப் பாருங்களேன், மொபைல் போன், டிவி போன்ற எந்த வசதியும் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் வெளிநாடு வரை சென்று தங்களது கச்சேரியை நடத்தியிருக்கிறார்கள் என்றால் எந்தளவிற்கு புகழ்பெற்றவர்களாக இருந்திருப்பார்கள். இவர்கள் இருவரும் 1987ம் ஆண்டு ரஷ்யாவில் கச்சேரி நடத்திவிட்டு திரும்பிய பின்னர், அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். அதை இப்போதும் அந்த குடும்பத்தினர் பத்திரமாக வைத்து காப்பாற்றி வருகிறார்கள். அந்த கிராமத்திலிருக்கும் அவருடைய அப்பாவிற்கான வீட்டை சிவகார்த்திகேயன் இடித்து புதிதாக மொடர்னாக கட்டியிருக்கிறாராம்.
“தாத்தா காலத்திலிருந்தே சிவாவின் குடும்பம் ராஜ பரம்பரை. அவரின் தாத்தா இருவரும் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா எனப் பல ஊருக்குப் போய் கச்சேரி நடத்தி இருக்கிறார்கள். சிவா அப்பா இங்கேதான் பிறந்தார். பின்னால் சிறை அதிகாரியாக வேலை செய்த போது திருச்சி போய் செட்டில் ஆகிவிட்டார்.” என்று அந்த கிராமத்தில் இருந்த ஒருவர் கூறியிருந்தது இப்போது வைரலாகி வருகிறது.
இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? சிவகார்த்திகேயன் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறவினராம். சிவாவின் சித்தப்பா மனைவியின் சகோதரியைதான் தயாநிதிமாறனின் தாய்மாமன் மணம் புரிந்துள்ளார்.