அழகாக தோற்றமளிக்கும் ஜெல்லி மீன்களில் சில இனங்களுக்கு இறப்பு என்பதே இல்லை. உயிரியல் அடிப்படையில் அழிவற்ற உயிரினம். ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அவற்றின் உடல் பாதிக்கப்படும். ஆனால், மீண்டும் வளர்ந்து விடும். இவற்றின் வாய், உடலின் நடுவில் அமைந்துள்ளது.
ஒளி ஊடுருவும் உடலமைப்பை உடையது கண்ணாடி ஜெல்லி. இதன் மரபணுக்களை வரிசைப்படுத்திய விஞ்ஞானிகள், ஆச்சரியம் அடைந்தனர். அந்த மீனுக்கு, ‘பாலிபொடென்சி’ எனப்படும் செல் இருப்பது தெரிய வந்தது. அதாவது, எந்த அங்கமாகவும் மாறும் தன்மை அந்த செல்லுக்கு உண்டு.
அந்த செல்கள், கண்ணாடி ஜெல்லி மீனை இறப்பில்லாததாக மாற்றுகிறது. செல்கள் முதுமை அடைவது போல, மீண்டும் இளமைக்கு திரும்பும் திறனுள்ளவையாகவும் இருக்கின்றன. இதனால், அந்த மீனுக்கு முதுமையே வருவதில்லை.
அத்தகைய அதிசய உயிரினத்தை போற்றும் வகையில், உலக ஜெல்லி மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், 3ஆம் திகதியை இவ்வாறு கொண்டாடுகின்றனர். அவை இடம் பெயருவதைக் குறிப்பிடும் வகையில், இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த மீன் வகை கடலின் ஆழத்திலும் உலவும். இதில், பல இனங்கள் பற்றி இன்னும் அறியப்படவில்லை. ஜெல்லி மீன் புதை படிமங்களை, பாறைகளில் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். ஜெல்லி மீன்களுக்கு, இதயமோ, நுரையீரலோ, மூளையோ இல்லை. தோல் மிக மெல்லியதாக இருப்பதால், அதன் வழியாக ஒக்சிஜனை உறிஞ்ச முடிகிறது. எனவே, சுவாசிக்க நுரையீரல் தேவையில்லை. இதற்கு இரத்தமும் இல்லை. எனவே, அதை பம்ப் செய்ய இதயம் தேவையில்லை.
தோலின் வெளிப்புற அடுக்குக்கு கீழிருக்கிறது நரம்பு வலை. அதில் கிடைக்கும் சமிக்ஞையை பயன்படுத்தி சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும். தொடு உணர்திறன் பெற்றுள்ளதால், எண்ணியதை செய்ய இவற்றுக்கு மூளை தேவையில்லை.
ஜெல்லி மீன் விளிம்பு பகுதி, கூடார மணி போல் இருக்கும். இது, ‘மெடுசா’ என அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இது. ஒரு ஜெல்லி மீனை வெட்டினால், இரண்டு புதிய மீன்களாக மாறி விடும்.
சிங்க பிடறி என்ற ஜெல்லி, 120 அடி நீளம் வரை வளரும். இது அண்டை நாடான சீனா, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், கொரியா கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
இரவில் ஒளிரும் ஜெல்லி, ‘பயோலுமினசென்ட்’ என்ற உறுப்பை கொண்டுள்ளது. அதை தொட்டால், நீலம் அல்லது பச்சை ஒளியை வெளியிடும். இது, மீன், இறால், நண்டு மற்றும் சிறு தாவரங்களை உணவாக்கும்.
தொகுப்பு - மீரா