Home » மலையக சமூகவியல் மாற்றத்திற்கு துணிந்து குரல் கொடுக்கும் ஜீவன்

மலையக சமூகவியல் மாற்றத்திற்கு துணிந்து குரல் கொடுக்கும் ஜீவன்

by Damith Pushpika
November 10, 2024 6:35 am 0 comment

இளம் வயதில் தொழிற்சங்க அரசியல் பிரவேசம் செய்வது புதிய விடயமல்ல. இருப்பினும் மிகவும் இளமையான வயதில் ஆட்சிபீடமேறும் அரசுகளில் இணைந்து முக்கிய பொறுப்புக்களை பொறுப்பேற்றிருந்தது மிகவும் அபூர்வமான விடயம். அவ்வாறானதொரு வாய்ப்பை பெற்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இதுவரையிலும் மிக்க சாதுரியமாக தொழிற்சங்க, அரசியல் பணியாற்றி மலையக சமூகத்தை தலைநிமிரச் செய்து வழிநடத்தி வந்திருக்கின்றார் என்றால் இது பெருந்தோட்ட சமூகத்திற்கு கிடைத்த கௌரவமாகவே கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இன்று அவரது 30ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இக்கட்டுரையை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் சரியான தருணத்தில் தொலைநோக்குச் சிந்தனையோடு தொழிற்சங்க பணியில் அவரை ஈடுபடுத்தி தனது சாணக்கியத்தை நிலைநாட்டினார். அவரது அர்ப்பணிப்பின் பயனாகவே பல முன்னேற்றகரமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜீவன் தொண்டமானின் முயற்சியின் பயனாகவே வீடமைப்புத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு முன்னைய ஆட்சியின்போது முழுமை பெறாத 1235 வீடுகளை பூர்த்தி செய்து அவற்றுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், வீதிப் போக்குவரத்து ஆகியவற்றை வழங்கி மக்கள் மயப்படுத்தியுள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வில் பலசுற்று பேச்சுவார்த்தைகள், சுழற்சி முறையிலான போராட்டங்கள் என்பனவற்றோடு நின்றுவிடாமல் கம்பனிகளுக்கு எதிரான அழுத்தங்கள் போன்றவற்றால் 1350 ரூபா சம்பளத்தை பெற்றுத்தந்து தந்தையின் கனவை நனவாக்கியிருக்கின்றார். தேசிய மட்ட அரசியல் தலைமைகளோடு உறவுகளை பேணுவதிலும் தனது கவனத்தை செலுத்தி வந்திருக்கின்றார்.

கடந்த காலங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின்போது தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும், மலையக மக்களுக்கான அபிவிருத்திகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியமையை நாம் நினைவூட்டுகின்றோம்.

நாம் 200

ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயரால் பெருந்தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட இந்த மக்கள் இன்று முழுமையாக வளர்ச்சி காணாவிட்டாலும் ஓரளவு வளர்ச்சி அடைந்தும், சிலர் அதே நிலையிலும், சற்று வித்தியாசப்பட்டும் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது எமது மலையக மக்கள் பல்துறைகளில் வளர்ச்சி கண்டாலும், இன்றும் அதே லயன் அறைகளில் வசித்து வருவதையும் காணக்கூடியதாய் இருக்கின்றது.

இந்த மக்களின் கடின உழைப்பு, இந்த நாட்டின் பொருளாதாரத்தில் இன்றும் மிகப்பெரும் பங்காற்றி வருகின்ற நிலையிலும் மலையக மக்கள் போற்றப்படுகின்றார்கள். ஏனைய சமூகத்தவர்களோடு ஒப்பிடும்போது, பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்த போதிலும் இன்று குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

இந்த மக்களின் வாழ்க்கைத்தர உயர்விற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கும் ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த வருடம் கொழும்பு, சுகததாச உள்ளரங்கில் நாம் 200 வரலாற்றுப் பயணம் மிகக் கோலாகலமாக எவருமே சிந்திக்காத விதத்தில் மிகப்பிரமாண்டமாக கொண்டாடப்பட்டமையை நினைவு கூருவதும் இத்தருணத்தில் பொருத்தமானதாகும். ஏனென்றால் மலையக மக்களை கௌரவப்படுத்திய பெருமை ஜீவன் தொண்டமானுக்கே உண்டு.

மலையகத்தின் இளைய தலைமுறை நாயகனாக இவர் வலம் வருகிறார். இளம் வயதிலேயே அனுபவ முதிர்வை வெளிக்காட்டும் அவர், மலையக சமூகவியல் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்களை துணிச்சலுடன் மேற்கொண்டு வருவதன் மூலம் விடிவெள்ளியாகத் திகழ்கின்றார். அவரின் இடைவிடாத முயற்சிக்கும், அயராத உழைப்புக்கும் சகலரும் ஒன்றிணைந்து கரம் கொடுப்போம்.

இன்று அவரது 30ஆவது பிறந்த நாளில் இறையாசி கிட்ட இறைவனைப் பிரார்த்தித்து நாமும் வாழ்த்துகின்றோம்.

சவரிமுத்து தேவதாஸ் ஊடகப்பிரிவு - இ.தொ.கா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division