மலையக மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வும், அவர்கள் இந்த நாட்டில் ஏனைய சமூகங்களை போன்று வாழ்வதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டால் அதுவே தமக்குக் கிடைக்கும் அங்கீகாரம் எனத் தான் கருதுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி : பொதுவாக மலையகத் தலைவர்கள் அரசாங்கத்துடனேயே இணைந்திருப்பார்கள் அப்படியிருக்கும்போது நீங்கள் டெலிபோன் சின்னத்துடன் இணைந்தமைக்கான காரணம் என்ன?
பதில் : கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாம், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக டெலிபோன் சின்னத்துக்கே ஆதரவு வழங்கினோம். அதன்படி, தொடர்ந்தும் அதே பாதையிலேயே பயணிக்கின்றோம்.
கடந்த கோட்டாபய, ரணில் அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலேயே அமர்ந்திருந்தோம். இந்நிலையில், இனி வருகின்ற அரசாங்கம் எமது மக்களுக்கு என்ன செய்யும்? அல்லது என்ன செய்ய முடியும்? என்பதை பொறுத்தே நாம் எமது ஆதரவை வழங்குவோம். தனிப்பட்ட சுய இலாபங்களுக்காக நாம் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை. அது முற்போக்கு கூட்டணியின் கொள்கையும் இல்லை. சலுகை அரசியலை விட, உரிமை அரசியலுக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அதனையே எம் மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.
கேள்வி : 1700 ரூபா சம்பளம் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளோம். எமது பெருந்தோட்ட மக்கள் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக சம்பள அதிகரிப்பை போராட்டங்கள் மூலமாகவும் வேலை நிறுத்தம் செய்துமே பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அதற்காக பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகவே, கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, பெருந்தோட்ட மக்களை சுய தொழில் முயற்சியாளர்களாகவும் காணி உரித்துடையவர்களாகவும் மாற்றுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதனை சஜித் பிரேமதாசவும் ஏற்றுக் கொண்டார்.
நாம் தொடர்ந்தும் நவீன அடிமைகளாக இந்த நாட்டில் இருக்க முடியாது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். எனவே, இவ் விடயம் தொடர்பாக, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அழுத்தம் கொடுப்போம். அதற்கான பேரம் பேசும் சக்தியையும் மக்கள் வழங்கவேண்டும்.
கேள்வி : இந்த பாராளுமன்ற தேர்தலில் புதிய முகங்களின் அறிமுகம் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அவர்கள் உங்களுக்கு சவாலாக இருப்பார்களா?
பதில் ; புதிய முகங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், வெறுமனே தேர்தல் காலங்களுக்கு வெறும் கோசங்களை மாத்திரம் முன்நிறுத்தி சுற்றுலா பயணிகளைப் போன்று வருகைதந்து, வாக்குகளை சிதறடித்து, எமது சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காது, மக்களோடு மக்களாக இருந்து பொது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அனைத்து நேரங்களிலும் அவர்களுடன் இருந்து, அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொண்டு நிதானமாக அரசியலுக்கு வர வேண்டும். நான் இளைஞனாக இருந்தபோது அவ்வாறு செயற்பட்டதனாலேயே தற்போது இந்த இடத்துக்கு உயர்ந்திருக்கின்றேன். நீங்கள் நினைப்பது போன்று ஒரே இரவில் இவை சாத்தியமாகவில்லை.
நாம் அன்று அரசியலை ஆரம்பித்தபோது பல அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு, அரசியலை கற்றுக்கொண்டு அவர்களின் அனுபவத்தை பெற்றுக்கொண்டு. படிப்படியாக பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் அமைச்சு பதவிகள் என வளர்ந்திருக்கின்றோம்.
நான் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றமைக்கான காரணம் இதுவே. பணம் இருந்தால் மாத்திரம், அரசியலில் வென்றிடலாம் என நினைப்பது அறியாமை. எனவே இளைஞர்கள் படிப்படியாக வளர்ந்து வரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
அத்துடன், இத் தேர்தலில் போட்டியிடுகின்ற எவருமே எமக்கு சவால் இல்லை. காரணம் நாம் மக்களுக்கு நீண்ட சேவைகளை செய்துவிட்டே வாக்கு கேட்கின்றோம். ஏனையவர்களை போன்று வாயில் வடை சுட்டுவிட்டு வாக்கு கேட்கவில்லை. இதனை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். இதற்கான பதிலை மக்கள் 14 ஆம் திகதி வழங்குவார்கள்.
கேள்வி : ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர் இருக்கும்போது மக்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பார்களா?
பதில் : நிச்சயமாக ஆதரவளிப்பார்கள். அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளில் அதனை மக்கள் நிரூபித்திருக்கின்றார்கள். ஏனெனில் அந்த தேர்தலின் பிரதிபலிப்பு இந்த பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக பிரதிபலிக்கும்.
ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் நாம், பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி : இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெறுவீர்களாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புண்டா?
பதில் : இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படுமாயின், நாட்டின் பொருளாதார நிலைமை தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை மையப்படுத்தி வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டோடு முற்போக்கு கூட்டணியாக நாம் சஜித் பிரேமதாச தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.
ஏனெனில், கடந்த காலங்களில் எந்தவிதமான கறையும் படியாதவர்கள் நாமே என்பதை மக்கள் இன்று நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள். பல பிரபலங்கள் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்கின்ற பொழுது நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் கடந்த காலங்களில் நாங்கள் செய்த சேவையை மக்களிடம் கூறி மக்களிடம் வாக்கு கேட்கின்றோம். இதன் காரணமாகவே தற்பொழுது எமக்கு அனைத்து இடங்களிலும் அனைத்து மக்களும் பெரும் வரவேற்பை வழங்கி வருகின்றார்கள்.
கேள்வி : தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஜக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருக்கின்றதல்லவா? இதன் நோக்கம் என்ன? இதனால் நாட்டில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட துறையின் ஏற்றுமதி வீழ்ச்சியடையாதா?
பதில் : இது வெறுமனே அரசியல் வார்த்தை அல்ல. இது தொடர்பாக நீண்ட ஆய்வுகள், கலந்துரையாடல்கள் துறைசார்ந்த நிபுணத்துவ குழுவின் பரிந்துரையுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு உறுதிமொழியாகும்.
சிறுதோட்ட உரிமையாளர்களாக எம் மக்கள் வரவேண்டும் என்பதே எமது இலக்கு. இதன்மூலம் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எம் மக்களும் கௌரவமான ஒரு தொழிலை முன்னெடுக்க முடியும்.
எமது மக்கள் இந் நாட்டில் ஏனைய சமூகங்களை போன்று தலைநிமிர்ந்து, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
குறிப்பாக, இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்காக அன்றும், இன்றும், என்றும் உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரே சமூகம் என்றால் அது எம் மலையக மக்களே.
இந்த செயற்பாட்டின் மூலமாக அந்நிய செலவாணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அவ்வாறானதொரு பொய்யான மாயையை பெருந்தோட்ட கம்பனிகள் உருவாக்கி வருகின்றன. அதற்கு காரணம் அவர்களிடமிருந்து இந்த பெருந்தோட்டங்கள் இல்லாமல் போய்விடும் என்ற பயமே. ஏனெனில் எந்த ஒரு கம்பனியாவது நட்டத்தில் இயங்குகின்றது என்ற காரணத்தை காட்டி தோட்ட நிர்வாகத்தை அரசாங்கத்திடம் கையளித்திருக்கின்றார்களா?
கேள்வி : மலையக மக்களுக்கு மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை வழங்வதே தமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகின்றார்களே… இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில் : ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் மலையக மக்களுக்கு பல அடையாளங்களை கொடுப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் எதனையும் செயற்படுத்தவில்லை. மலையக மக்கள் என்ற அடையாளத்தை வழங்குவதற்கான எந்த அவசியமும் இல்லை. ஏனெனில் நாம் மலையக மக்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
எமது மலையக மக்கள் முன்னணியின் கொள்கையும் அதுதான். “மலையகம் எமது தாயகம், நாம் ஒரு தேசியம்” என்ற விடயத்தை முன்வைத்தே செயற்பட்டு வருகின்றோம்.
எனவே எமது மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வும், அவர்கள் இந்த நாட்டில் ஏனைய சமூகங்களை போன்று வாழ்வதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டாலே அது எங்களுக்கு கிடைக்கின்ற அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.
எஸ். தியாகு (நுவரெலியா தினகரன் நிருபர்)