அடுத்த வாரம் இதே நாள் ஆகும் போது, இலங்கை நாட்டில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றிருக்கும். அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதி எத்திசையில் நகரும் என்பதை பெரும்பாலும் அப்போது தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி அநுர குமாரவின் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்குமாயின், அது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படும். இலங்கை மக்கள், சுதந்திரத்தின் பின்னர் மாறிமாறி தெரிவு செய்த அரசாங்கங்கள் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல நாட்டின் மேட்டுக்குடியினரை தலைவர்களாகக் கொண்ட அரசாங்கங்களாக இருந்தன. 1988- 1993 காலப்பகுதியில் ஜனாதிபதி பதவி வகித்த ரணசிங்க பிரேமதாசவை மாத்திரம் விதிவிலக்காகக் காட்ட முடியும்.
இந்த நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி அரசாங்கங்களின் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட இளைஞர் கூட்டம் தெற்கிலும் வடக்கிலும் ஆயுதப் போராட்டங்களை நடத்தின.
அவை ஆயுத முனையில் நசுக்கப்பட்டமையும் வரலாறு. ஜே.வி.பி. என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி பின்நாட்களில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட போதிலும், மக்கள் அவர்களின் கடந்த கால வரலாறு காரணமாகவும், இடதுசாரிக் கொள்கைகள் காரணமாகவும் போதிய ஆதரவு வழங்கவில்லை. ஒரு தடவை பதினெட்டு ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டமையே அவர்களின் வரலாற்றுச் சாதனையாக இருந்தது.
அதன் பின்னர், அக்கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து போனது. அது மட்டுமன்றி முன்னர் அக்கட்சியில் இருந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் விலகி மற்றக் கட்சிகளில் இணைந்து கொண்டனர்.
கடந்த அரசாங்க காலப்பகுதியிலும் மூன்றே ஆசனங்கள் மாத்திரமே பாராளுமன்றத்தில் அவர்களுக்குக் கிடைத்தது. இந்நிலையிலேயே நாடு வங்குரோத்து அடைந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்.
இதுவரை பிரதான கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் அக்கட்சிகள் நாட்டை கொள்ளையடித்ததாக, உறுதியாக நம்பினர்.
நாட்டை மாறி, மாறி ஆட்சிசெய்த பிரதான இரு குழுக்களின், இலஞ்சமும் ஊழலும் முறைகேடுகளும் குடும்ப அரசியலும் நாட்டை குட்டிச்சுவராக்கியதாக பெரும்பான்மையான மக்கள் நம்பினர்.
2009இல் யுத்தம் முடிவுற்ற போது நாட்டின் முடிசூடா மன்னராக புகழ்ந்து கொண்டாடப்பட்ட மந்த ராஜபக்ஷவும் நாடுகாக்கும் வீரராக போற்றப்பட்ட கோட்டாபயவும் சரியாக பத்தாண்டுகளின் பின்னர் அதே மக்களால் கேவலப்படுத்தப்பட்டு வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு ஓடி ஒளித்த அதிசயமும் இலங்கையில் ஏற்பட்டது. பொருளாதார சரிவு மாத்திரமன்றி அரசியல் வங்குரோத்து நிலையும் 2022 இன் பின்னர் மிகத் தெளிவாக அவதானிக்கப்பட்டது.
தாம் நம்பி வாக்களித்த அரசியல் தலைவர்கள் தமக்கு துரோகம் செய்து தம்மை நடுத்தெருவில் விட்டதான மக்களின் கோபம் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவானதாக மாறியது. அதன் தலைவரான அநுர குமார திசாநாயக்க மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவர். அத்துடன் மிகச் சிறந்த பேச்சாளர்.
உலக அரசியல், பொருளாதாரம் குறித்த உன்னிப்பாக அவதானிக்கும் ஒருவர். ஒரு தடவை அவர் இருந்த ஒரு மேடையில் உலகிலேயே அதிகூடிய பணவீக்கம் ஜேர்மனியில் ஏற்பட்டது என்று குறிப்பிட்டேன். பேச்சு முடிந்து அமர்ந்த பின்னர், மிக நாகரிகமாக அண்மையில் அதைவிட தீவிரமான பணவீக்கம் இன்னொரு நாட்டில் ஏற்பட்டது அல்லவா எனக்கேட்டார். காரணங்கள் வேறாக இருந்தாலும் உடனடியாக அதை அவதானித்து கருத்துச் சொல்ல உலக வாசிப்பு இருந்தால் மாத்திரமே அது சாத்தியப்படும். பொருளாதாரம் தொடர்பாக சிறந்த ஒரு வாசிப்பு அவருக்கு இருக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெளிப்படையான இதயசுத்தியான பேச்சு அவருக்கு சிறந்த ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மிகவும் எளிமையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மூவர் அடங்கிய ஒரு அமைச்சரவையை வைத்துக் கொண்டு நாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியை சீராகக் கொண்டு செல்ல அவரால் முடிந்திருக்கிறது. உடனடி அதிசயங்களை அவரால் மேற்கோள்ள முடியாது என்பதை சிறு குழந்தையும் அறியும். எனவே தான் அடுத்துவர இருக்கும் பொதுத்தேர்தல் அவரது ஆட்சியை உறுதிப்படுத்தி முன்கொண்டு செல்ல முக்கியமான ஒன்றாகப்பார்க்கப்பட முடியும்.
இம்முறை பொதுத்தேர்தல் நாணயத்தின் இரண்டு பக்கங்களில் எந்தப்பக்கம் ஆட்சியைப்பிடிக்கும் என்பது பற்றிய ஒரு வழமையான பொதத்தேர்தல் அல்ல. இது ஒரு சத்திய சோதனை. அநுர மீது நம்பிக்கை கொண்டு அவரை மக்கள் பதவியேற்றியது உண்மை. ஆனால் அவர் பதவியேற்றியதன் பலனை அனுபவிக்க வேண்டுமாயின் அந்தக் கட்சியிலிருந்து 113 அங்கத்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் மாத்திரமே சாத்தியப்படும்.
தொங்கு பாராளுமன்றங்களால் கடந்த காலங்களில் எதையும் சாதிக்க முடியவில்லை. 2015இல் ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி சிறிசேன பேய்களுக்கு பலி கொடுப்பது போல கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் ஆட்சியை நடத்த முடியாமல் போகிறது எனக்குறிப்பிட்டார்.
இதுவே கள யதார்த்தம். தேசிய மக்கள் சக்தி நினைப்பது போல ஊழலற்ற மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழவும் நாட்டின் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டுமாயின் பெரும்பான்மைப்பலம் அவர்களிடம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
அவ்வாறன்றி ஆட்சியமைக்க ஏனைய கட்சிகளின் கூட்டு தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகும்.
புதிய கட்சிகள் புதிய முகங்கள் என முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு பொதுத்தேர்தல் சிக்கலானதாக மாறியிருக்கிறது. சிறுபான்மை இனக்கட்சிகள் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் அநுர அலை அங்கும் வீசுவதாக ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேசியத்தைத் தொலைத்து விட்டு அலைக்குள் அகப்பட்டுக்கொள்வதன் ஆபத்தையும் தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆகவே அவர்களும் புதிய முகங்களைக் களமிறக்கியிருக்கிறார்கள். மலையக அரசியல் தொடர்பிலும் மாற்றுத் தேவைகள் உணரப்படுவதாக ஒரு சாரார் கூறுகின்றனர். அந்த மாற்றங்களையும் காண முடிகிறது.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது. மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டிருக்கிறது.
ஆகவே யார் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் முன்னைய பாராளுமன்றங்களைப்போல அடிதடி அடாவடியுடன் நாங்கள் தான் கெத்து என்று ஆட்டங்காட்ட முடியாத ஒரு நல்ல சூழல் உருவாகி வருகிறது.
பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு சொல்லிவிடும். அடுத்தவாரம் நாம் அதுபற்றிச் சொல்வோம்.