தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி மற்ற கட்சிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசியதில் மற்ற கட்சிகளிடையே முரண்பாடும், விமர்சனமும், வரவேற்பும் இருந்தாலும் விஜயின் அரசியல் வருகை சிலருக்கு பயத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
விஜயின் மாநாட்டு உரையில் மற்ற கட்சிகளை விட தி,மு.க மீதான எதிர்ப்பே கூடுதலாக இருந்தது. ஆனால், அது பற்றி தி.மு.கவிலிருந்து பெரிதாக எதிர்வினை எதுவும் இல்லை. சென்னையில் நடபெற்ற ஒரு விழாவில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது. இன்றைக்கு யார் யாரெல்லாமோ புதிது புதிதாக கட்சியைத் தொடங்குபவர்கள் கூட, தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டும் என்ற நிலையில் பேசி வருகின்றனர். தி.மு.க தலைமையினால் அரசு தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்திருக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆனால், அவர்களுடைய பேச்சுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் போக்கு மக்களுக்கு நன்மை செய்யக் கூடியதுதான். தேவையில்லாமல், எல்லோருக்கும் நாங்கள் பதில் சொல்லி, எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் கிடைக்க வில்லை. இதில் மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. என்று பேசியிருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர்வுகளை கண்காணிக்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே பணியாற்ற தொடங்கியதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் விஜயின் மாநாட்டு உரை தங்களுக்கு சாதகமாகவே இருப்பதாக உணர்கின்றனர். அ.தி.மு.க.வைப் பற்றி விஜய்யும் மாநாட்டில் பேசவில்லை, எதிர்காலத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கவும் வாய்ப்பு அமையலாம் என்பதை இப்போதே கணித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக் கழகம் பற்றி விமர்சித்து எதுவும் பேச வேண்டாம் என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போது அரசியல் சூழல் மாறிவருகிறது.தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், தி.மு.க. பா. ,ஜ.க தான் நமக்கு பிரதான எதிரிகள். அ.தி.மு.க பற்றி தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சியினர் விமர்சிக்காத வரை அவர்களை அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் விமர்ச்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பதிலிருந்து நாம் என்ன அறிய முடிகிறது என்றால், 2026. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது.தமிழ்நாட்டில் கூட்டணி மாறலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கையும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள், கட்சியின் கோரிக்கையை விஐய்யும் தனது மாநாட்டு உரையில் குறிப்பிட்டதால், விடுதலை சிறுத்தைகளின் பார்வை விஜய் மீது திரும்பியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை 1999ஆம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்து வருகிது. செங்கப்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நிர்வாகிகளுடன் பேசும் போது ஆட்சியில் பங்கு என்ற கருத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்தக் காணொலி திருமாவளவனின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தபோது பல சர்ச்சைகள் எழுந்ததால் பிறகு நீக்கப்பட்டது. எனினும் இக்கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என திருமாவளவன் உறுதிபடத் தெரிவித்திருந்தார் இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதன் அர்ஜுனா. விடுதலை சிறுத்தைகள் கட்சியில்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க வென்றிருக்க முடியாது என்பது உள்ளிட்ட விமர்சனங்கள் தெரிவித்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணியில் தொடர்கிறோம் தி.மு.க கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யின் மாநாட்டு உரையில் கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார். இதன் மூலம் அவர் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு மறைமுகமாக கூட்டணி அமைக்க அழைப்பு விடுப்பதாகவும் பேசப்பட்டது.
விஜயின் ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ அர்ஜுனா ஆதரவு தெரிவித்த நிலையில், திருமாவளவன் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கட்சியின் தலைவர் திருமாவளவனோ ” பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ” ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இவ்வாறான சூழலில் சென்னையில் டிசம்பர் 6 ஆம் திகதி அம்பேத்கார் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனும் விஜய்யும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி திருமாவளவன் கூறும் போது, இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இசைவு தெரிவித்து ஓராண்டாகிறது. இந்த விழாவில் ராகுல் காந்தி, ரஜினிகாந்த் போன்றவர்களையும் அழைக்க திட்டமிட்டனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு முன்பாகவே விஜய்யையும் அழைப்பதாக தெரிவித்திருந்தனர். அந்த விழாவில் தான் நான் இப்போது கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்
தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ள கூட்டணி சர்ச்சைகளை கருத்தில் கொண்டு விஜய்யுடன் கலந்து கொள்வதை திருமாவளவன் தவிர்த்திருக்கலாம், ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தி.மு.க.வுக்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்கிறாரா? என்ற அடிப்படையிலும் இதை உற்று நோக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற யுக்தியால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அடுத்து வரும் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்கலாம், ஆட்சியில் பங்கு கேட்கலாம், இல்லை என்றால் கூட்டணி மாறுவோம் என்று எச்சரிக்கையையும் தரலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவையனது தான் என்று காங்கிராஸ் கட்சியின் நிர்வாகி சரவணன் வரவேற்றுள்ளதும் மேலும் கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஆனால், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது. இண்டியா கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில் சரவணன் கூறியது அவரது சொந்தக்கருத்து என்று கடந்து போவதன் பின்னணி குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி பலமாக இருந்தாலும், விஜயின் அரசியில் வருகையால் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற பயமும் இருக்கிறது, அதே நேரத்தில் விஜய் அரசியலில் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
அவர் அரசியலில் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்து ஆட்சியை பிடித்து விட முடியாது.
தமிழ் மக்கள் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய்யின் அரசியல் நடவடிக்கையைப் பொறுத்தே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.