நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் நடிகர்கள் கவின், ரெடின் கிங்க்ஸ்லி, சுனில், திவ்யா, அக்ஷயா உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் வெளியானது. இதில் நடிகை திவ்யாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சோஷியல் மீடியா பிரபலம், மாடல், நடிகை எனப் பல பரிணாமங்களில் வலம் வருபவரிடம் ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் தளத்திற்காகப் பேட்டி எடுத்தோம்.
“சமூகவலைதளப் பிரபல்யம் மூலமே ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு லுக் டெஸ்ட் செய்து முடித்ததும் இயக்குநர் சிவபாலனுக்கு திருப்தியே இல்லை. அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் இளமையாக இருப்பதாக சொல்லி ரிஜெக்ட் செய்தார். வாய்ப்பை நழுவ விட்டதில் வருத்தமாக இருந்தது. பின்பு, என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மீண்டும் என்னை அழைத்து லுக் டெஸ்ட் செய்து ஓகே செய்தார்கள். ப்ளஸ் சைஸ் என்றாலே காமெடி கதாபாத்திரம் என்ற எண்ணம்தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், அதை உடைத்து வேறொரு திவ்யாவாக இந்தப் படத்தில் இருந்தது சந்தோஷம்.
ஏனெனில், என்னுடைய முதல் படமான ‘ருத்ர’னிலேயே என்னை யானையுடன் ஒப்பிட்டு இருக்கும்படி ஒரு நகைச்சுவைக் காட்சி படமாக்கியிருந்தார்கள். அது சென்சாரில் நீக்கப்பட்டது. படத்தரப்பிலும் இதுதொடர்பாக என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். அந்தப் புரிதல் வந்திருப்பதில் மகிழ்ச்சி. சமூகவலைதளங்களில் இப்போது நிறைய ப்ளஸ் சைஸ் மாடல் என்னைப் பார்த்தும் வந்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. காதல் செய்வதற்கு இவர்களுக்கு ப்ளஸ் சைஸ் என்றால் ஓகே. ஆனால், கல்யாணம் என வந்தால் இந்த ப்ளஸ் சைஸ் இவர்களுக்குப் பிரச்சினை. சமூகவலைதளத்தில் என்னைப் பார்த்து நெகட்டிவாக கமெண்ட் செய்பவர்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், இது நம்முடைய வாழ்க்கை. பிறருக்கு பயந்து நமக்கு விருப்பப்பட்டதை செய்யாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்றார்.