தனது இசையுலகில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ எவ்வளவு முக்கியம் என்பதை ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகியுள்ள ‘அமரன்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இரண்டுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதால், பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ‘வீர தீர சூரன்’, ‘கிங்ஸ்டன்’, செல்வராகவனின் அடுத்த படம், ‘வாடிவாசல்’, ‘ராபின்ஹுட்’, ‘மட்கா’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களுக்குப் பிறகு செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் இப்போது வரை கிளாசிக் ஆக இருக்கிறது. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த என்னை முன்னணி படங்களுக்கு இசையமைப்பாளராக மாற்றியது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான்.‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு என்னை எண்ணத் தொடங்கினார்கள். அதற்கு எப்போதுமே செல்வராகவன் சாருக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இசைக்கு என்னை நம்பினார். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிய இருக்கிறோம். அதுவும் இசையாக பயங்கரமாக இருக்கும். அவருடைய பாணியில் ஒரு காதல் கதை” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே வெளியாகவில்லை. ஆனால், இப்படத்தில் நாயகனாக நடித்து, இசையமைத்து, தயாரிக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ் என்று தகவல் வெளியாகியுள்ளது.