அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் சிட்னி முருகன் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். 2001 இல் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவை, இப்போதைய அந்தனி அல்பானீஸின் அரசு ஒக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளது.
அதனையொட்டி ஒரு இந்து கோயிலுக்குச் செல்லும் வகையிலும் பிரதமரின் வருகை அமைந்தது. ஆலயத்தின் உள்ளே சென்ற பிரதமருக்காக சிறப்புபூஜை செய்யப்பட்டது. பூஜை முடிந்ததும் ஆலய கல்யாண மண்டபத்தின் மாதிரி வடிவமைப்பையும் அவர் பார்வையிட்டார்.
கோயில் வெளிவீதியில் அமைக்கப்பட்ட மேடையில் பிரதமர் உரையாற்றும்போது தமது அரசு பல்லின, கலாசாரத்திற்கு ஆதரவளிப்பதோடு அவுஸ்திரேலியா ஒரு பல்லின கலாசாரம் கொண்ட நாடு என்பதில் உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டுக்கு தமிழர்கள் வழங்கி வரும் பல்துறை பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.
முருகன் கோயில் அமைந்திருக்கும் சிட்னிக்கு அடுத்த பெரிய நகரான பரமட்டா நகர பாராளுமன்ற உறுப்பினர் அன்ரு சால்டன் தனது உரையில் பரமட்டா நகரின் முக்கிய சின்னமாக இந்த முருகன் ஆலயம் இருப்பது பெருமையை இருக்கிறது என்றார்.
மாத்தளை சோமு