இலங்கை அணியில் திடீரென்று துடுப்பாட்ட எழுச்சி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அது யாரை அணிக்குத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தேர்வுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது.
இத்தனைக்கும் கடந்த ஜூலையில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை பெரும் வரட்சியை சந்தித்திருந்தது. அதிலும் முதல் இரு போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்திற்கு வந்த வேகத்தில் அரங்கிற்கு வரிசை கட்டியதைப் பார்க்க முடிந்தது.
முன்னதாக கடந்த 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் நிலைமை இதனை விடவும் மோசம். தொடரில் முதல் எட்டு இடங்களுக்கு முன்னேற முடியாமல்போனது மாத்திரமல்ல முதல் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குக் கூட தகுதி பெறத் தவறியது.
பந்துவீச்சிலும் பிரச்சினைகள் இருந்தது என்றாலும் துடுப்பாட்டத்தில் அது தலையிடி தரும் அளவுக்கு இருந்தது. கடந்த இரண்டு உலகக் கிண்ணங்களிலும் அதனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது பார்த்தால் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடர்களை வென்றிருக்கிறது.
கடந்த ஓகஸ்டில் அதிக பலம்மிக்க இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தலா 2–1 என வென்றது.
இந்தத் தொடர்கள் அனைத்தும் சொந்த மண்ணில் தனக்குச் சாதகமான அதிகம் சுழலக்கூடிய ஆடுகளங்களில் நடந்ததாக குறைத்து மதிப்பிடலாம். ஆனால் கடந்த காலங்களில் இலங்கை அணியால் அதுவும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் சொந்த மண்ணில் கூட ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாத்திரமே பயன்படுத்தி வந்த நிஷான் மதுஷ்கவை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முடிவுற்ற ஒருநாள் தொடரில் முதல்முறை அழைக்கப்பட்டபோது தனது கன்னிப் போட்டியில் ஆரம்ப வீரராக 69 ஓட்டங்களைப் பெற்றதோடு அடுத்த போட்டியில் 38 ஓட்டங்களைக் குவித்தார். அந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியால் வெல்ல முடிந்தது.
பத்தும் நிசங்க காயத்திற்கு உள்ளானதாலேயே மதுஷ்கவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர் அதனை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர் கடைசி ஒருநாள் போட்டியில் பதினொருவர் அணிக்குத் திரும்பிய பத்தும் சும்மா இருக்கவில்லை. அவரும் தன் பங்குக்கு அரைச்சதம் ஒன்றை பெற்றார்.
மழையால் இடையூறு ஏற்பட்ட மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் குசல் மெண்டிஸ் 19 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். ஆரம்ப வரிசையில் அவிஷ் பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா கூட போட்டியாக வந்து நிற்கிறார்கள். எனவே இலங்கை அணியில் முதல் மூன்று வரிசைக்குள் இடம்பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
தலைமைத்துவத்தை ஏற்ற புதிதிலேயே இப்படி ஒரு தலையிடி ஏற்படும் என்று அணித் தலைவர் சரித் அசலங்க நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். கடந்த பல ஆண்டுகளை பார்த்தோம் என்றால் இலங்கை அணியில் ஆரம்ப வரிசையை தேர்வு செய்வது என்பது பெரும் சிக்கலானது. ஏனென்றால் யாருமே பெரிதாக சோபிக்கவில்லை. எப்போதுமே மோசமானதில் நல்லதைத் தேர்வு செய்வது தான் பெரும் போராட்டமாக இருந்து வந்தது. இப்போது முதல் முறையாக அதற்குத் தலை கீழாக மாறியிருக்கிறது.
‘நிஷான் மதுஷ்கவின் ஆட்டம் பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின்னர் அசலங்க குறிப்பிட்டார்.
‘அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது இப்போது மிகக் கடினமாக இருக்கிறது. திறமையான வீரர்களை இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் போட்டித் தன்மை அணி என்ற வகையில் மிகப் பெரிய வெற்றி. வீரர்களிடையே போட்டித் தன்மையையே தலைவர் மற்றும் பயிற்சியாளர் எதிர்பார்க்கின்றனர்.
நிஷான் மதுஷ்க நல்ல நிலையில் இருக்கிறார். அப்படியான வீரர் ஒருவர் இருக்கையில் வைக்கப்பட்டிருப்பது அணி என்ற வகையில் நல்லதாகும். வெள்ளாலகேவுக்கு மற்றும் வென்டர்சேவுக்கு வாய்ப்பு ஒன்றை அளிக்க இடமே இருக்கவில்லை. இந்த நிலைமையில் தேர்வுக் குழு, பயிற்சியாளர் மற்றும் தலைவராக நானும் இணைந்து அனைத்து வீரர்களுக்கும் மாறி மாறி வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது முறை ஒன்றை தயாரித்து வருகிறோம்’ என்கிறார் அசலங்க.
‘இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களை வெல்ல முடிந்தது மகிழ்ச்சியானது. அதேபோன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டையும் வெல்ல முடிந்தது மகிழ்ச்சியானது.
நாம் இலங்கையிலும் வெளிநாட்டிலும் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவது எவ்வாறு என்பதை பார்க்க வேண்டி உள்ளது. அதற்காக அணிக்குள் எவ்வாறான துறைகளை முன்னேற்ற வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்’ என்றும் அவர் மேலும் கூறினார்.
இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் செய்த சில மாற்றங்களும் நிசங்க போன்ற வீரர்கள் வலுவான நிலைக்கு வர உதவி இருக்கிறது. இதிலே இலங்கையின் தேசிய சுப்பர் லீக் உள்ளூர் போட்டித் தொடரை குறிப்பிடலாம்.
முன்னர் இலங்கையின் பிரதான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளாகவே இருந்தன. ஆனால் ஐந்து அணிகள் மாத்திரம் போட்டியிடும் தேசிய சுப்பர் லீக் தொடர் அறிமுகமான பின் கடந்த சில ஆண்டுகள் உள்ளூர் திறமைகளை கட்டியெழுப்புவது மற்றும் உருவாக்குவதில் பெரிய அளவில் உதவி இருக்கிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசலங்க முதல் இரு போட்டிகளிலும் 77 மற்றும் 62 ஓட்டங்களைப் பெற்றார். இதற்கு முன்னர் அவர் தேசிய சுப்பர் லீக்கில் சோபித்த நிலையில் அதன் தொடர்ச்சியையே அவரது ஆட்டத்தில் பார்க்க முடிந்தது.
கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி தம்புள்ளையில் நடந்த ஜப்னா அணிக்கு எதிரான தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணியின் தலைவரான அசலங்க துடுப்பாட்டத்தில் 142 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் 206 ஓட்டங்களை விளாசினார்.
‘இந்தியாவுக்கு எதிரான கடந்த தொடரில் நான் சரியாகச் செயற்படவில்லை’ என்கிறார் அசலங்க. அவர் அந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலுமே மொத்தமாக 49 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
‘ஆனால் நான் தேசிய சுப்பர் லீக்கில் ஆடியபோது நன்றாகச் சோபித்தேன். அந்தத் தொடரை நடத்தியதற்கு நாம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றி கூற வேண்டும். கிரிக்கெட்டின் போட்டித் தன்மையைக் கொண்ட தொடராக அது இருந்தது. தேசிய அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது எல்லா வீரர்களுக்கும் பொருந்தும். திறமையை வளர்ப்பதற்கும், போட்டியை கட்டமைப்பதற்கும், மீண்டு வருவதற்கும் முடியுமானதாக அது உள்ளது’ என்கிறார் அசலங்க.
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் லீக்கில் இலங்கை அணிக்கு வாய்ப்புக் கிடைக்காததற்கு என்ன, எதிர்வரும் காலத்தில் இலங்கை அணி அதிக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் ஆட வேண்டி உள்ளது.
இலங்கையில் டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டுச் சென்ற நியூசிலாந்து அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடர்களில் ஆடுவதற்கு இந்த மாதம் மீண்டும் இலங்கை வருகிறது. இப்போது இலங்கை அணியில் வலுவான துடுப்பாட்ட வரிசை ஒன்று உள்ளது. கமிந்து மெண்டிஸ் மத்திய பின் வரிசையில் வலுச் சேர்ப்பவராக உள்ளார். பந்துவீச்சு முகாமும் குறிப்பிடத்தக்க அளவில் பலமாகவே உள்ளது. எனவே நம்பிக்கையுடன் எதிரணியை எதிர்கொள்ளும் சூழல் இலங்கை அணிக்கு வந்திருப்பதாக எதிர்பார்க்கலாம்.
எஸ்.பிர்தெளஸ்