உலக அரசியலில் யூதர்களின் போரியல் உத்திகள் தனித்துவமானவையாக இருந்தாலும், உலகளாவிய சட்ட நியதிகளை அழித்தொழிக்கும் வரலாற்றுப் பணியை மேற்கொள்வதாகவே அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. உலக ஒழுங்கில் என்றுமே கண்டிராத அனைத்து வகை ஆக்கிரமிப்புகளையும் நிகழ்த்தி வரும் யூதர்கள் போரியல் விதிகளையும் மனிதநேயத்தின் அடிப்படைகளையும் ஒன்றாகவே மீறுகின்ற அரசாக காணப்படுகின்றனர். இதனை ஆதரிக்கும் மேற்குலகமும் அத்தகைய போரியல் விதிகளை தனது நலனுக்கும் தனது நட்புச் சக்திகளுக்கும் இசைவானதாக கட்டமைத்து வருகின்றனர். அன்றி நியாயாதிக்கத்துக்கான ஒன்றாக கொள்ள முடியாத அளவு பிரயோகித்து வருகின்றது. இக் கட்டுரையும் ஹமாஸ் இஸ்ரேலியா போரின் பிந்திய போக்குகளை தேடுவதாக உள்ளது.
அண்மைய வாரங்களில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் லெபனானை நோக்கி விஸ்தரிக்கப்பட்டுள்ளதோடு, ஈரானை இலக்கு வைத்து தாக்குதலை நகர்த்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரினது அடிப்படை ஈரானின் அணு ஆயுதத்தை அழித்தொழிப்பதற்கான போராகவே ஆரம்பத்திலிருந்து கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது. அதனை நோக்கி, தற்போது இஸ்ரேல் நகர்வதாகவே தெரிகின்றது. கடந்த அக்டோபர் முதலாம் திகதி ஈரானிய தாக்குதல் இஸ்ரேல் மீது பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 200 ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கான பதிலை வழங்க 26.10.2024 இஸ்ரேல் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு ஈரானிய ராடர் நிலையங்கள் ஏவுகணை தளங்கள் ட்ரோன் உற்பத்தி தொழில்சாலைகள் என்பனவற்றை தாக்கி அளித்ததாவும் ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் மூன்று மணித்தியாலம் இத்தாக்குதலை நிகழ்த்தியதாகவும் தெரியவந்தது. தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் முதன்மையான அழிவுகளை ஏற்படுத்தியதாகவும், ஈரானின் இராணுவ கட்டமைப்புகளும் அணு ஆயுத மையங்களும் அழித்தொழிக்கப்பட்டதாகவும் தெரியப்படுத்தியது. ஆனால் ஈரானிய அதிஉயர் மதத் தலைவரான ஐயத்துல்லா அலி கமெய்னி இஸ்ரேல் தாக்குதலை ஈரான் எதிர்கொண்டதாகவும் அத்தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தெரியப்படுத்தியதோடு ஈரானின் வலிமையை எதிரிகளுக்கு புரிய வைக்க வேண்டும் என கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உறவினரை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். எனவே இருதரப்புக்கும் இடையில் போர் புதிய திசையன் நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. இதில் இஸ்ரேலியர்களின் கணிப்பீடுகளும் ஈரானியரின் பதில் நகர்வுகளும் இத்தாக்குதலின் பிரதிபலிப்புகளை அளவீடு செய்ய போதுமானதாக உள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காசாவை துடைத்து அளித்துள்ள போதும் கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் கைது செய்யப்பட்ட பணயக்கைதிகளை இன்னும் முழுமையாக மீட்கப்பட முடியாத நிலை அதன் பலவீனத்தை தெளிவுபடுத்துகின்றது. யூதர்கள் பெருமளவில் அராபியர்கள் மீது அழிவுகளையும் படுகொலைகளையும் நிகழ்த்திய போதும் இன்னும் யூத பணயகைதிகள் மீட்கப்படாமல் இஸ்ரேலிய இராணுவத்தின் உத்திகளின் மீதான அதிருப்தியை யூதர்கள் மத்தியில் தந்துள்ளது. ஆனாலும் இப்பிராந்தியத்தில் நிகழும் தாக்குதல்களும் அழிவுகளும் யூதர்களின் இருப்பின் மீதான கேள்விகளை ஏற்படுத்தியிருப்பதோடு அரா பியர்களின் கூட்டுத்தன்மைக்கான அழைப்புகளையும் ஐயதுல்லா ஹமேனி வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய போக்கினை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது இஸ்ரேலிய – மேற்குலக கூட்டு இப்பிராந்தியத்தின் அதிகாரத்தின் எல்லையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயலுகின்ற வேளை மறுபக்கத்தில் தமது தேசங்களின் அரசியல் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் முயலுகின்றன. அதன் அடிப்படையில் போர் நிறுத்த உடன்பாடு ஒன்றுக்கான அழைப்பினை எகிப்திய ஜனாதிபதி அப்துல் கதா அல் சிபிஸி முன் வைத்துள்ளர். காசாவில் இரண்டு நாள் போர் நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்ததோடு, அத்தகைய போர் நிறுத்தம் வெற்றிகரமாக அமையுமாயின், அடுத்து வரும் 10 நாட்களில் சமரச பேச்சுக்களுக்கு இடம் அளிக்கப் போவதாகவும் அதனை முன்னெடுக்க திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். போர் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து மேற்குலக சார்பு சக்திகள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் அவ்வப்போது உரையாடி வருகின்றன. அதே சந்தர்ப்பத்தில் அத்தகைய போர் நிறுத்த உடன்பாடுகளை முன்னிறுத்திக் கொண்டு தாக்குதல்களையும் படுகொலைகளையும் இலகுவாக இஸ்ரேல் சாத்தியப்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான நகர்வுகள் உச்சம் தொடுகின்ற போது, பேச்சுவார்த்தைகளை அமெரிக்க தரப்பு முன்மொழிய முயற்சிக்கின்றது. யூத உறவு முறையை கொண்ட கமலா ஹரிஸ் வெற்றி பெற வேண்டும் என்பதில் அமெரிக்க அதிகார வர்க்கம் கவனம் கொண்டுள்ளது. இப்போரின் நகர்வுகளை தீவிரப்படுத்தவும் ஈரானின் இருப்பை முற்றாக அழித்து விடவும் திட்டமிட்டிருக்கும் அமெரிக்க ஆளும் தரப்புக்கு இலகுவாக கையாளக்கூடிய ஜனாதிபதியாக கமலா ஹரிஸ்ஸை கருதுகின்றனர். அதற்காக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வருகின்ற பட்சத்தில் ஈரான் மீதான தாக்குதல் கைவிடப்படும் என்றோ அமெரிக்க நலன்கள் நிராகரிக்கப்படும் என்றோ ஒன்றும் கிடையாது. மாறாக அதி தீவிரத்தோடு தாக்குதல் அரங்கேற்றப்படும். ஆனால் ரொனால்ட் ட்ரம்ப் என்பவர் ஆளும் வர்க்கத்தினால் இலகவில் கையாளப்பட முடியாதவர் எனக் கருதுகின்றனர். இதனாலே கமலா ஹரிசை முன்னிறுத்துவதோடு யூதர்களின் உறவு முறையினால் கமல ஹாரிஸின் இருப்பு தக்கவைக்கப்பட முடியுமென கருதப்படுகிறது.
இரண்டாவது ஹமாஸ் இஸ்ரேலிய பேரின் புதிய நகர்வாக அமைந்த ஹிஸ்புல்லாக்கள் மீதான தாக்குதல் அதன் அமைப்பையும் தலைமையும் முற்றாகவே அழிவு உள்ளாக்கியுள்ளது. ஆனாலும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைன் காசிமை தேர்ந்தெடுத்துள்ளார். அவரது வரவு ஹிஸ்புல்லாக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதே நேரம் இஸ்ரேலியை இராணுவத்துக்கு நெருக்கடி மிக்க சூழலை ஏற்படுத்துவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது மறுபக்கத்தில் சில நிபந்தனைகளோடு போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லாக்களின் புதிய தலைவர் காசிம் தெரிவித்துள்ளார். எனவே புதிய தலைவரின் உத்திகள் எந்த அளவுக்கு இஸ்ரேலியர்களை கட்டுப்படுத்தும் என்பதிலேயே இப்போரின் நகர்வை அளவீடு செய்து கொள்ள முடியும். ஆனாலும் ஹிஸ்புல்லாக்கள் இப்போரில் இருந்து மேல் எழுவது என்பது அவர்களது உத்தியிலே தங்கியுள்ளது.
மூன்றாவது இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்திருப்பதாகக் குறிப்பிட்டாலும் ஹிஸ்புல்லாக்களுக்கு புகலிடம் அளித்த லெபனானின் மீது அத்தாக்குதல் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஷஹிஸ்புல்லாக்களின் இலக்குகள் லெபனானின் இலக்குகளாகவே உள்ளன. இத்தகைய யூதர்களுக்கு எதிரான அமைப்புகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடுகளையும் அவற்றின் வளங்களையும் அந்த மக்களையும் இஸ்ரேலியர்கள் அழித்தொழிப்பார்கள் என்ற செய்தியை லெபனான் மீதான தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன. தொடர்ச்சியாக விமான தாக்குதல்களையும் தரைவழி தாக்குதல்களையும் யூதர்கள் முன்னெடுத்து வருகின்ற சந்தர்ப்பத்தில் ஹிஸ்புல்லாக்கள் அழித்தொழிக்கப்பட முடியாத சக்திகள் என்பதை வெளிப்படுத்துகின்ற நகர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லாக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
நான்காவது, இதேசந்தர்ப்பத்தில் வடக்கு, காசா பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேலியர் இராணுவம் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. வடக்கு காசாவின் பெய்ட் லஹியா பிராந்தியத்தில் 29.10.2024 நடத்திய தாக்குதலில் 143பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதலின் பிரதிபலிப்புகள் நீடிப்பதோடு முழுமையாக அழித்தொடுக்கப்படும் செயலை யூத இராணுவம் நிகழ்த்தி வருகின்றது. இத்தாக்குதல் அகதி முகாம்கள் மீதான தாக்குதலாகவே அமைந்திருந்தது. ஏறக்குறைய பாலஸ்தீனர்கள் மீதும், அடுக்குமாடி கட்டடங்கள் மீது அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் பகுதிகள் மீதும் தொடர்ச்சியாக இஸ்ரேலிய இராணுவம் விமான தாக்குதலை நிகழ்த்தி வருகின்றது. இவை அனைத்தும் அடிப்படை விதிமுறைகள், போர்க் குற்றங்களாகவும், காணப்படுவதோடு போறியியல் நெறிமுறைகள் எல்லாவற்றையும் மீறுவதாக அமைந்துள்ளது.
எனவே புதிதாக வருகை தந்திருக்கும் ஹிஸ்புல்லாக்களின் தலைமையும் வரவிருக்கின்ற அமெரிக்க ஜனாதிபதியும் மேற்காசிய அரசியலில் புதிய கட்டத்தை அல்லது நகர்வை நோக்கி செயல்படுவதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கிறது. இதில் ஈரானியர்களுடைய அணு ஆயுதம் மீதான தாக்குதல் என்பதும் அதனை தடுக்கும் உத்தியுமே மேற்காசிய அரசியலில் அராபிய தரப்புக்களின் பிரதான இலக்காக உள்ளது. மறுபக்கத்தில் இஸ்ரேலியர்கள் மேற்குலகத்தோடு இணைந்து தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதோடு மேற்காசியாவின் இருப்பையும் இப்பிராந்தியத்தில் அரசியல் அதிகாரத்தையும் காசா பகுதி மீதான யூதர்களின் குடியிருப்பையும் இப்போர் உறுதிப்படுத்துவதற்கான முனைப்புகளோடு நகர்கிறது.