Home » தமிழக பாரம்பரியக் கட்சிகளை ஆட்டம் காணச் செய்வாரா விஜய்?

தமிழக பாரம்பரியக் கட்சிகளை ஆட்டம் காணச் செய்வாரா விஜய்?

by Damith Pushpika
November 3, 2024 6:00 am 0 comment

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் திகதி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. தங்கள் அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

‘தமிழக வெற்றிக் கழகம்’ எனப் பெயர் வைக்க காரணம் என்ன என்பது பற்றிய விளக்க வீடியோ ஒன்றையும் விஜய் வெளியிட்டார்.

“கட்சியின் முதல் சொல் ‘தமிழகம்’. மக்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கூறும் வார்த்தை கட்சியின் முதல் வார்த்தையாக இருக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைதான் ‘தமிழகம். தமிழகம் என்றால் தமிழர்களின் அகம், தமிழர்கள் வாழும் இடம் என்றும் சொல்லலாம்.

அகநானூறு, சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து என பல இலக்கியங்களில் இடம்பிடித்த ஒரு வார்த்தைதான் தமிழகம். இந்த தமிழகம்தான் அறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.

த.வெ.கவின் மந்திரச் சொல் வெற்றி. அரசியலில் மட்டுமல்ல, பொதுவாகவே நமக்கு ஒரு அடையாளம் வேண்டுமானால், நமது பெயர்தான் ஒரு அடையாளமாக மாற வேண்டும். அப்படி ஒரு Positive Energy அந்தப் பெயரில் இருக்க வேண்டும். என்றுமே தன்னுடைய தன்மைைய இழக்காத ஒரு சொல் இருக்கும்; இந்த வார்த்தையைச் சொல்லும்போதே, உச்சரிப்பவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரு கூட்டத்தையே உணர்ச்சியோடு உற்சாகப்படுத்துகிற சொல் அது. நமது மக்களின் நாடி, நரம்புகளில அந்தச் சொல் நாணேற்றும்” என்று விஜய் அங்கு தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் முதல்நாள் மாலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத்தொடங்கியிருந்தனர்.

காலை 7 மணி முதலே மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த 3 பிரதான நுழைவுவாயில்கள் வழியாக மாநாட்டுத் திடலுக்குள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

பெரும்பாலும் அரசியல் கட்சி மாநாடுகளில் வெகுதொலைவில் இருந்து வாகனங்களில் ஆண்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் த.வெ.க மாநாட்டில் இளம் பெண்கள் பலர் ஆர்வமாக வந்திருந்ததைக் காண முடிந்தது. இதனால் மாநாட்டுத் திடலில் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற அரசியல் கட்சியை இவ்வருடம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியன்று நடிகர் விஜய் தொடங்கினார்.

இதற்கு முன்னதாக 26 ஜூன் 2009 அன்று, இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பரோபகார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விஜய் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் தொடங்கினார்.

‘விஜய் மக்கள் இயக்கம்’ பல வருடங்களாக தன்னால் இயன்றவரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருகின்றது.

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாகக் கருதியே நடிகர் விஜய் அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

தமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயரிட்டார்.

‘அடிப்படை அரசியல் மாற்றத்தை’ வெளிப்படையான, ஜாதியற்ற மற்றும் ஊழலற்ற நிர்வாகத்துடன் உறுதி செய்வதாக தெரிவித்தார். எதிர்வரும் 2026 இல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே தங்களது இலக்கு என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் பயணம் தொடர்பாக பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பா.ஜ.கவின் மறைமுக ஆதரவில் அவர் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக ஒருதரப்பு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பா.ஜ.க ஏதேனும் மறைமுகத் திட்டத்துக்காக விஜய் ஊடாக அரசியல் நடத்த முற்படுவதாக அத்தரப்பு கூறுகின்றது.

மறுதரப்பில் வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

விஜய் தொடங்கிய அரசியல் நடவடிக்ைக யானது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கும் என்று கூறப்படுகின்றது. அதேசமயம் மற்றைய திராவிட கட்சிகளுக்கும் விஜய் சவாலாக இருப்பாரென்றும் ஊகிக்கப்படுகின்றது.

விஜய் நடத்தியுள்ள முதலாவது மாநாடு மற்றைய கட்சிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது நன்றாகவே புரிகின்றது.

இந்நிலையில், தமிழக அரசியலில் விஜய் ஆழமாகக் காலூன்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division