ஈரானின் இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட கடும் தாக்குதல் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை நேற்று (26) தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“இஸ்ரேலிய படைகளால் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் நிறைவடைந்துள்ளது. எங்கள் விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியுள்ளன” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளது. ஈரான் மீது வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் நேற்று (26) நடத்தியுள்ளது.
ஈரானிலுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் இதன்போது தெரிவித்தது.
பல மாதங்களாக ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்குவைக்கவில்லையென தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள், அமெரிக்காவின் ஒத்துழைப்புடனேயே இந்த தாக்குதல் இடம்பெறுவதாகவும் வான் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல மாதங்களாக தொடர்ச்சியாக ஆராய்ந்த பின்னரே, ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முடிவு செய்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சரவை பல மாதங்களாக தாக்குதல் எவ்வாறானதாக காணப்படவேண்டுமென ஆராய்ந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதியில், இராணுவ இலக்குகளை தாக்க தீர்மானித்ததாகவும், ஆபத்தான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இலக்குகளை தாக்க தீர்மானித்ததாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.