வா சிப்பு பழக்கம் ஒரு மனிதனை பூரண மனிதனாக மாற்றக்கூடிய வலிமையைக் கொண்டுள்ளது. வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புலப்படுத்தும் நோக்கத்துடன் பிரதி வருடமும் ஒக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாக கொள்ளப்படுகிறது. மலையக மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடயே வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்றது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு இன்டர்நெட் யுகம் என அழைக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் யுகத்தில் மனிதனின் நாளாந்த வாழ்வில் கால மாற்றத்திற்கேற்ப வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று மனிதன் ஒருவன் நினைத்த மாத்திரமே உலகத்தின் எந்த மூலை முடுக்கிலும் வாழும் ஒருவனுடன் தொடர்பு கொள்ளக் கூடிய விதமாகவும் அவனுடன் அவன் முகத்தை பார்த்து உரையாடும் விதத்திலும் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.
இன்று சிறுவர் தொடக்கம் முதியர்வர் வரை கையடக்க தொலைபேசிகள், முகநூல்கள், கணினிகள், தொலைக்காட்சிகள் ஆகிய சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தில் நாட்டம் கொள்ளாமல் அவர்களால் வாக்கியங்களை எழுத்துப் பிழை இன்றி எழுத முடியாதுள்ளதோடு பொது அறிவில் மிகவும் பின் தங்கிய நிலையிலும் உள்ளார்கள்.
எனவே மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை சிறுவயதில் இருந்தே ஊக்குவிக்கும் விதத்தில் அரசாங்கமும், சமூக நிறுவனங்களும், பெற்றோரும் உரிய விதத்தில் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டும்.
எவ்வாறெனில் அரசாங்கம் கல்வி அமைச்சின் மூலம் மாணவர்களின் அறிவை விருத்தி செய்துகொள்ளும் விதத்தில் சிறந்த நூல்களை பாடசாலைகளுக்கு வழங்குவதோடு ஒவ்வொரு பாடசாலையும் நூல் நிலையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நூல் நிலையங்களை உருவாக்கி பொறுப்புள்ள ஆசிரியர்களை நியமித்து மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைகளில் கழிக்கும் நேரத்திலும் பார்க்க தமது பெற்றோருடனேயே அதிகளவு காலத்தை கழிக்கிறார்கள். எனவே பெற்றோர் தமது பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்தை சிறு வயதில் இருந்தே ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு நல்ல நூல்களை வாங்கிக் கொடுப்பதோடு இடைக்கிடை தேசிய பத்திரிகைகளையும் வாங்கிக் கொடுத்து அவர்களை நல்ல விதத்தில் வழிநடத்த வேண்டும்.
இந்த நாட்டில் செயற்படும் ஆலய நிர்வாகங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவை அவற்றிற்காகவே மக்கள் என சிந்திக்காது மக்களுக்காகவே அவை என புதிய கோணத்தில் சிந்தித்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான உரிய விதத்தில் செயல்பாடுகளை மேற்கொண்டு கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பை நல்க வேண்டும்.
சில பாடசாலைகளில் நூல் நிலையங்களில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் மாணவர்களுக்கு நூல்களை விநியோகித்தால் அந்த புத்தகங்களை மீளவும் ஒப்படைக்க மாட்டார்களோ என்ற அச்சத்தில் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதில்லை என்பதை அறியக் கூடியதாக உள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அங்கத்துவ கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அக்கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கு நூல் நிலையங்களிலிருந்து நூல்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் நூல் நிலையங்கள் மூலம் மாணவர்கள் உரிய பலன்களை பெறக் கூடியதாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது.
உயிருக்கு தமிழ், உறவுக்கு சிங்களம், உலகிற்கு ஆங்கிலம் எனவே நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழ் மாணவனும் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் மொழியையும் சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள சிங்கள மொழியையும் சர்வதேச மொழியான ஆங்கில மொழியையும் தவறாது கற்று அந்த மூன்று மொழிகளிலும் புலமை பெற வேண்டும்.இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பெயர்ப் பலகைகளில் இடம்பெற்றுள்ள சொற்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளமைக்கு காரணம் அவை தமிழ் புலமையற்றவர்களினால் எழுதப்பட்டமையே. எனவே, எதிர்காலத்தில் இந்த நாட்டில் அமையவுள்ள பெயர்ப் பலகைகளில் எழுத்துப் பிழைகள் இடம்பெறாத விதத்தில் எழுதப்படவேண்டும். தமிழ்ப் புலமை கொண்டவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படின் எதிர்காலத்தில் பெயர்பலகைகளில் எழுத்துப் பிழைகள் இடம்பெறுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும். ஆகவே, வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் மாத்திரமின்றி அனைத்து தரப்பினரும் மேற்கொண்டால் நாடும் சிறக்கும் நாட்டு மக்களும் பயனடைய முடியும். குறிப்பாக மலையக மாணவர்கள் தங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் எனவே வாசிப்பு பழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வில் உயர்வோம்.
சி.ப.சீலன்