கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் நிறைவடைந்தது. வழக்கம் போல சாதனைகள் பல முறியடிக்கப்பட்டன. நாட்டின் விளையாட்டுத்துறையில் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் ஆரம்பப் புள்ளியாக கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்கல்வி பிரிவினால் நடத்தப்படும் இந்த விளையாட்டுப் போட்டியை குறிப்பிடலாம்.
பாடசாலை மட்டத்தில் விளையாட்டுப் போட்டியில் இருந்தே தேசிய மட்டம் பின்னர் சர்வதேச மட்டத்துக்காக வீர, வீராங்கனைகள் அடையாளம் காணப்படுகின்றனர். எனவே, இம்முறை போட்டியையும் இலங்கையின் எதிர்கால விளையாட்டுக்காக உன்னிப்பாக அவதானிக்க வேண்டி உள்ளது. ஒட்டு மொத்தமாக இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் 31 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறந்த வீரராக அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தின் அயோமால் அகலங்க தெரிவானார். அவர் 20 வயதுக்கு உட்பட்ட 400 மீற்றர் தடை தாண்டி ஓட்டப்போட்டியை 51.16 விநாடிகளில் நிறைவு செய்து புதிய கனிஷ்ட சாதனை படைத்தே இந்த கௌரவத்தைப் பெற்றார். சர்வதேச போட்டிகளிலும் இலங்கை சார்பில் பதக்கம் வென்று தந்திருக்கும் அயோமால் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது.
அதேபோன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை பிபில நன்னபுராவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் வென்றார். 20 வயதுக்கு உட்பட்ட தூரம் பாய்தல் போட்டியில் அவர் 6.19 மீற்றர் திறமையை வெளிப்படுத்தியே சிறந்த வீராங்கனையானார்.
இதில் 1273 புள்ளிகளை வென்ற மேல் மாகாணம் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் முதலிடம் பெற்றது எதிர்பார்த்ததே. ஆடவர் பிரிவில் சம்பியனாக நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியும், பெண்களுக்கான சம்பியனாக வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் தெரிவாகின. ஆடவர் பிரிவில் இரண்டாம் இடத்தை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் பெண்கள் பிரிவில் ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயமும் வென்றன.
இதில் வசதி படைத்த பிராந்தியம் மற்றும் பாடசாலைகள் முன்னிலை பெற்றிருப்பதையே பொதுப்படையாக பார்க்க முடிகிறது. அதிலும் சர்வதேச பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை போட்டிகளில் முன்னேறி வருவதை அண்மைக் காலங்களில் பரவலாக பார்க்க முடிகிறது. திறமையான வீர, வீராங்கனைகளை உள்வாங்குவது மற்றும் மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கு போதுமான வசதிகள் இருப்பது போன்ற காரணிகளை இதற்கு முக்கியமாக குறிப்பிட்டுக் கூறலாம்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மாகாண மட்டத்தில் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கு அங்கிருக்கும் மாணவர்களின் திறமைக்கு அப்பால் அந்த மாணவர்களுக்கு போதிய வசதி இன்மை மற்றும் பாடசாலை மட்டத்தில் திறமையான மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான கட்டமைப்பு ஒன்று இல்லாமை போன்ற காரணிகளை குறிப்பிடலாம்.
இதில் வட மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகள் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றன. கோலூன்றிப் பாய்தலில் இலங்கையில் பிரபலமான மாகாணமாக வடக்கு உள்ளது. இம்முறையும் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிரூஷிக்கா தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவரால் 2.90 மீற்றர் உயரம் தாவ முடிந்தது.
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.30 மீற்றர் உயரம் பாய்ந்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் சி. துஷாந்தன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வட மாகாண வீர, வீராங்கனைகள் கோலூன்றிப் பாய்தலில் பிரத்தியேக திறமையை வெளிப்படுத்தி வருகின்றபோதும் அந்தத் திறமை ஒரு கட்டத்துக்கு மேல் வளர்க்கப்படுவதில்லை என்பது பெரும் குறையாக இருக்கிறது. இந்தப் போக்கு தொடரக் கூடாது. சர்வதேச மட்டத்தில் குறிப்பாக, ஆசிய மட்டத்தில் இலங்கைக்கு கோலூன்றிப் பாய்தலில் பதக்கங்களை வெல்வதற்கு வட மாகாணத்தில் அதிக அவதானம் செலுத்தினாலேயே போதுமானது.
இதில் ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்தார்.
மறுபுறம் கிழக்கு மாகாணம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதோடு அதிலும் தமிழ் மொழிமூல பாடசாலையின் வீர, வீராங்கனைகள் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையே வென்றனர்.
18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருக்கோவில் மெதடிஸ் மிஷன் வித்தியாலய வீரர் வி. விஹாஸ் 45.75 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றாரர். இதே போட்டி நிகழ்ச்சியில் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் ரம்சி அஹ்சான் 3ஆம் இடம்பெற்று வெண்கலம் வென்றார். அவர் 45.78 மீற்றர் தூரம் எறிந்திருந்தார். இவர் தேசிய மட்டத்தில் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவென்றாலும் இன்னும் திறமை மெருகேற்றப்பட வேண்டி இருக்கிறது.
இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் அதிகம் அவதானிக்கப்பட்ட வீராங்கனையாக மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி அபிசேக்கா உள்ளார். கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்ந்த 16 வயதான தரூஷி, தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியது மாத்திரம் அன்றி அந்த மூன்று போட்டிகளிலும் தேசிய சாதனையைப் படைத்தார்.
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 4 நிமிடம் 29.97 விநாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்த தரூஷி 39 ஆண்டு சாதனையை முறியடித்தார். 1985 ஆம் ஆண்டு அப்போது காலி சங்கமித்தா பெண்கள் பாடசாலை மாணவியாக இருந்த தம்மிகா மெனிக்கேவினால் இந்தப் போட்டியை 4 நிமிடம் 35.7 விநாடிகளில் நிறைவு செய்து படைத்த சாதனையையே முறியடித்தார்.
தம்மிகா மெனிக்கே பின்னர் பெண்களுக்கான 800 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சம்பியன் மற்றும் தெற்காசிய சம்பியன் பதக்கங்களைக் கூட வென்றிருந்தார். எனவே, தரூஷி முறியடித்த சாதனை என்பது இலங்கைக்கான எதிர்பார்ப்பையே அதிகரித்திருக்கிறது.
அதேபோன்று 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் 2.11.00 காலத்தில் போட்டித் தூரத்தை நிறைவு செய்த தரூஷி தங்கப் பதக்கம் வென்றதோடு புதிய போட்டிச் சாதனையையும் படைத்தார். பெண்களுக்கான 3,000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தரூஷி 10:14.70 காலத்தில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றதோடு புதிய போட்டிச் சாதனையையும் நிறைவேற்றினார்.
தரூஷி அபிசேக்கா பிரத்தியேகமாக ஞாபகப்படுத்துவதற்கு அவரது பெயரும் முக்கியமானது. கடந்த ஆண்டு அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக பட்டம் வென்ற தரூஷி கருணாரத்னவின் பெயரே அதற்குக் காரணமாகும். இதனால் புதிய தரூஷியை குட்டித் தரூஷி என்றும் அழைக்கலாம்.
தரூஷி கருணாரத்னவும் மத்திய தூர ஓட்ட வீராங்கனை ஒருவர். இந்த ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிவரை முன்னேறிய தரூஷி கருணாரத்ன தற்போது அமெரிக்காவில் கல்வியைத் தொடர்வதோடு கிட்டத்தட்ட ஒரு தொழில்முறை தடகள வீராங்கனையாக மாறியிருக்கிறார்.
குட்டித் தரூஷியும் ஏற்கனவே இலங்கை சார்பில் கனிஷ்ட மட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சோபித்திருக்கிறார். எனவே, அவரது பயணம் நீண்டது. அதற்கு வழி செய்வது முக்கியம்.
எஸ்.பிர்தெளஸ்