இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை மாறி மாறி ஆட்சியிலிருந்த கட்சிகளுக்குப் பதிலாக மாற்றுக் கட்சியொன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்த பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்திருந்தனர்.
மக்களின் இந்தத் தீர்மானத்திற்கு அமையவே இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜே.வி.பி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.
இவ்வாறானதொரு மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவதற்குப் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தியிருந்தன. சுதந்திர இலங்கையில் சுமார் 76 வருடங்களாக ஆட்சியிலிருந்த கட்சிகள் மீது கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டமை, ஆட்சியில் இருந்தவர்கள் எடுத்த தீர்மானங்களால் நாடு பின்னோக்கித் தள்ளப்பட்டமை மற்றும் அதிகரித்துள்ள இலஞ்ச ஊழல் செயற்பாடுகள் என்பன இவற்றில் பிரதானமானவையாகும்.
குறிப்பாக அதிகரித்துள்ள ஊழலை ஒழித்து, கடந்த காலங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பது அநுரவுக்கு வாக்களித்த அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு.
அநுர அரசாங்கம் மீது மக்கள் வைத்துள்ள இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அவர்களால் தட்டிக்கழிக்க முடியாத விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்திருந்தாலும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், காபந்து அரசாங்கம் இது விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு பிரசார மேடைகளிலும் ஊழல்வாதிகளுக்கு சட்டரீதியாகத் தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. இது விடயத்தில் அரசாங்கத்திடமிருந்து அதிரடி நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இருந்தாலும், எந்தவொரு நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அவற்றை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும், அமைச்சர் விஜித ஹேரத்தும் சுட்டிக்காட்டியுள்ளனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும், அவர்களுக்கான தண்டனைகளைத் தீர்மானிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கும், சட்டத்தை நிலைநாட்டும் தரப்பினருக்குமே உள்ளது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இந்த நிலையில், அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் கைவைத்திருப்பதைக் காணமுடிகின்றது. இதன் முதலாவது கைதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கைது இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாது, பகுதி பகுதியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வாகனமொன்றின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் ஒருங்கிணைத்து அவற்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் புதிய அதிசொகுசு கார் ஒன்று சில நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பதாகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நடத்திய விசாரணைகளில் குறித்த கார் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொத்தமானது என்றும், அதில் பொருத்தப்பட்டிருந்த கராஜ் இலக்கத்தகடு பிறிதொரு வாகனத்திலிருந்து அபகரிக்கப்பட்டது என்றும் விசாரணைகளில் தெரியவந்தது.
சட்டவிரோதமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட வாகனத்தை சாரதியொருவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் தினம் குறித்த ஹோட்டலில் நிறுத்திச் சென்றிருந்தமையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்ததுடன், வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார். சம்பந்தப்பட்ட வாகனம் சட்டவிரோதமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் உறுதிசெய்தமையால் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை பிடியாணை பிறப்பித்திருந்தது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, ‘லங்கா சதொச’ ஊழியர்கள் 153 பேரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராகத் தவறியமைக்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல, மற்றுமொரு வாகன மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரான ரோஹித அபேகுணவர்தனவும் சிக்கியுள்ளார். கண்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதிவுசெய்யப்படாத இரு வாகனங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் ரோஹித்தவின் மருமகனின் வீட்டிலிருந்தே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டிருந்தன.
அமைச்சர் ரோஹித்தவுக்குச் சொந்தமான வாகனங்களே இவை என்றும் விசாரணைகளில் கூறப்பட்டிருந்தது. இவர் துறைமுக அமைச்சராக இருந்த நிலையில், வரி செலுத்தாமல் இருப்பதற்காகவே இந்த வாகனங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயார் என அவர் கூறியிருந்தார். இந்த விடயம் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பின்னரே உண்மை புலனாகும்.
கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசியல் நோக்கத்தினால் மேற்கொள்ளப்படும் வழிவாங்கல்கள் எனச் சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.
அது மாத்திரமன்றி ராஜபக்ஷக்களுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவற்றை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் உண்மைத் தன்மைகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்ைககள் எழுந்துள்ளன.
அண்மையில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் இளயை மகனின் பெயரில் பெருந்தொகையான பணம் துபாய் வங்கியொன்றில் இருப்பதாக வெளியான ஆவணமொன்றைத் தான் நல்லாட்சி காலத்தில் பார்த்திருந்த போதும், அவற்றை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கவில்லையென சந்திரிகா கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்குத் தாம் விசாரணைக் குழுக்களை அனுப்பியதாகவும், அங்குள்ள வங்கிக் கணக்குகளில் அவ்வாறான பணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் போயிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
எனவே, உண்மைகள் கண்டறியப்பட்டு மோசடிக் காரர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
பி.ஹர்ஷன்