Home » முஸ்லிம் மஜ்லிஸ்: 80 வருட பயணம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின்

முஸ்லிம் மஜ்லிஸ்: 80 வருட பயணம்

by Damith Pushpika
October 20, 2024 6:54 am 0 comment
நிர்வாகக் கட்டடம், பொறியியற் பீடம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை இருள்வானில் உடுக்கள் போல மிளிரச்செய்ய 1944 ஆம் ஆண்டு SLM. ஷாபி மரைக்கார் மற்றும் S.A. இமாம் ஆகியோரின் தூரநோக்கின் விளைவாக உருவாக்கப்பட்டதே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் எனும் வரப்பிரசாதம். இதன் வளர்ச்சிக்கு பல முட்பாதைகள் தடைக்கற்களாக தொடர்ந்து வந்தாலும் அவற்றையெல்லாம் சிறந்த தலைமைத்துவத்தாலும் தியாகத்துடனான விடாமுயற்சியாலும் கைகோர்த்து கடந்து இவ்வருடம் எண்பது ஆண்டு கால பயணத்தை எட்டியுள்ளமை வியந்து புகழ வேண்டிய சாதனையாகிறது.

காலங்கள் மாறிச் சென்றாலும் நவீனம் என்ற பெயரில் நாகரிகம் வளர்ந்த போதிலும் இஸ்லாமிய மார்க்கத்தின் தூய்மையை பல்கலைக்கழக மாணவர்களிடையே பாதுகாக்க வேண்டும் மற்றும் பலதரப்பட்ட துறைகளிலும் அவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் தொடர்ந்தும் இயங்கி வரும் எமது மஜ்லிஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவத்திற்கு மிக முக்கியமான முன்னுதாரணமாக திகழ்கிறது. அதாவது முஸ்லிம் மஜ்லிஸின் தலைமைத்துவத்தின் கீழ் கிட்டத்தட்ட ஒன்பது துறைகளுக்கும் தனித்தனியாக உப மஜ்லிஸ்களை நிர்வகிப்பது மட்டுமல்லாமல் பொருத்தமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் மஜ்லிஸ் வழங்கும் திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் இன, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்திற்கும் வழங்கப்படுகின்றது. எனவே எமது முஸ்லிம் மஜ்லிஸின் இந்த தனித்தன்மையானது அனைவராலும் போற்றப்படக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.

பல்கலைக்கழக வாழ்க்கையில் முஸ்லிம் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருப்பதோடு கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதில் முஸ்லிம் மஜ்லிஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கலாசார விழாக்கள், கருத்தரங்குகள், மதச் சொற்பொழிவுகள் போன்றவை மூலம் மாணவர்களிடையே ஒற்றுமையையும், பரஸ்பர புரிதலையும் வளர்க்க மஜ்லிஸ் முயன்று வருகிறது. இதன் பெயர் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளான ‘Toward Success’, ‘Edu Voyage’ மற்றும் ‘Pera Adventour’ பாடசாலை மாணவர்களின் கல்வியிலும் கூட கரிசனை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவை மாத்திரமல்லாமல் ‘இன்ஷிரா’ எனும் சஞ்சிகையூடாக மாணவர்களின் திறமைகளை உலகறியச்செய்கிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பள்ளிவாசலின் பராமரிப்பு, ரமழான் மாதத்தில் நோன்பு திறப்பு மற்றும் ஸஹர் ஏற்பாடுகள், ஹஜ் யாத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என முஸ்லிம் மாணவர்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் மஜ்லிஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்டு, முஸ்லிம் மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

சமூக சேவை நடவடிக்கைகளிலும் முஸ்லிம் மஜ்லிஸ் முன்னணியில் உள்ளது. இயற்கை பேரழிவுகளின் போது நிவாரணப் பணிகள், இரத்த தான முகாம்கள், கிராமப்புற மக்களுக்கான மருத்துவ முகாம்கள் என பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் பலர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். அவர்களது அனுபவங்களையும், அறிவுரைகளையும் தற்போதைய மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தளமாகவும் முஸ்லிம் மஜ்லிஸ் விளங்குகிறது.

எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதும், அதே நேரத்தில் பாரம்பரிய மதிப்புகளை பாதுகாப்பதும் முஸ்லிம் மஜ்லிஸின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இவ்வாறாக, கடந்த 80 ஆண்டுகளாக பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கி வரும் முஸ்லிம் மஜ்லிஸ், எதிர்காலத்திலும் தனது பணியை மேலும் விரிவுபடுத்தி, புதிய உயரங்களை அடைய உறுதி பூண்டுள்ளது.

எம்.ஆர்.எஃப். ரிப்னா, எம்.எஃப் .எஃப். ரிமாசா, டீ.எம் .யமீன் படம்: மொஹமட் பஸால்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division