Home » தேசிய அவதாரம் எடுக்கும் நடேச ஐயர்

தேசிய அவதாரம் எடுக்கும் நடேச ஐயர்

பெருமை தரும் தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம்

by Damith Pushpika
October 20, 2024 6:57 am 0 comment
  • நடேச ஐயர் (1887 – 1947) 

நவீன அடிமைகள் எனப்படுபவர் யாவர்? ஏமாற்று வழிகள் மூலம், நியாயமற்ற முறையில் அழைத்து (கடத்தி) வரப்பட்டு, நிர்ப்பந்த ஊழியம், கடுமையான உழைப்புச் சுரண்டல். குறைந்த கூலி, ஏமாற்று முறைமைகள், அதிகார துஷ்பிரயோகம், குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வெளியேற முடியாத, கண்ணுக்குத் தெரியாத கட்டுகள் போன்ற நிலைமைக்கு உட்படுபவர் நவீன அடிமைகளாகக் கருதப்படுவர். இந்தியாவிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்ட எமது மூத்த குடிகளுக்காகவே வரையப்பட்ட ஒரு வரைவிலக்கணமாக இக்கூற்று தென்படுகிறது. இந்த நிலைமை இன்றுங்கூட முற்றுமுழுதாக விலக்கப்பட்டுவிட்டதாகக் கொள்ள முடியாது. இல்லையென்று வாதிப்போர் இரத்தினபுரியில் கலைச்செல்வியை தரையில் கிடத்தி காலால் உதைத்த சம்பவத்தை எந்த வகைக்குள் அடக்குவர். இலங்கையின் சிரேஷ்ட சமூகவியலாளர் கலாநிதி குமாரி ஜெயவர்தன மலையகத்தில் இன்னும் அடிமைத்தனம் நிலவுகின்றதென்று அறுதியிட்டு கூறுகிறார். (தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி சிவப்பிரகாசம் லண்டனில் ஒளிபரப்பப்பட்ட அவரது உரையில் ‘மலையகத்தின் நவீன அடிமைகள்’ என்ற பதத்தை பலமுறை பிரயோகித்தார்.)

21 ஆம் நூற்றாண்டில் நிலைமை இதுவென்றால் 20 ஆம் நூற்றாண்டில் மலையக நிலைமைகள் ஊகித்துணரக்கூடியதுதான்.

வெள்ளைக்கார துரைமார்களின் அராஜகம் பெரிய கங்காணிமாரின் அடாவடித்தனம், இக்கெடுபிடிகளிலிருந்து வெளியேற நினைத்தாலும், அவர்களை சிக்க வைத்த கடன் பொறிமுறை என்ற விசச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனித கூட்டத்திற்கு அபயமளிக்க வந்த ஒரு துருவ நட்சத்திரம் தோ. நடசஐயர்.

கொழும்பு நகர வர்த்தக பிரமுகர்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியக் காங்கிரஸ் அதன் உயர்தட்டு அபிலாசைகளைக் கொண்டிருந்தபோது, நடேச ஐயர் தோட்ட கூலிகளின் குரலாக ஒலித்தார்.

ஜவகர்லால் நேரு, நடேச ஐயரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தபோதுகூட அதில் பெரிய ஆர்வம் காட்டாமல், அட்டனை மையப்படுத்திய தனது தொழிற்சங்க அமைப்பில் முனைப்போடு ஈடுபட்டதாக ஒரு செய்தியும் உண்டு.

இவ்வாறான ஒரு மலையக ஆளுமையை தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் தோட்ட தொழிலாளர் நலனுக்காக மாத்திரம் உழைத்த மனிதராக மட்டுமின்றி இந்த நாட்டின் முழு தேசிய உருவாக்கத்திற்கும் பங்களிப்பு வழங்கிய ஒரு முற்போக்கு தலைவராக அடையாளம் கண்டிருப்பது, மலையகத்தைச் சார்ந்த எங்களை பெருமை கொள்ளச் செய்கிறது.

அதன் முழு பிரகடனமும் வருமாறு :-

இன்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் குடியேற்றவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களை பெருந்தோட்டக் கைத்தொழிலுக்காக இந்நாட்டுக்கு கொண்டு வந்து சேவையில் ஈடுபடுத்துகின்ற செயற்பாட்டிற்குள் அவர்கள் மிகுந்த சுரண்டலுக்கு இலக்காகினர். சுதந்திரத்திற்கு பின்னரும் இந்நாட்டு பொருளாதாரத்தில் கட்டமைப்புச் சார்ந்த மாற்றத்தை செய்யாமல் அவ்வண்ணமே பேணிவந்த சுதேச ஆளுகைப் பிரபுக்களுக்கும் இந்த மக்கள் அனுபவிக்கின்ற துன்பகரமான வாழ்க்கைத் தரத்தில் பாரதூரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை நிலவவில்லை. முதல் தடவையாக மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மேற்கொண்ட பாரதூரமான இடையீடு நடேச ஐயராலேயே மேற்கொள்ளப்பட்டது.

1921 இல் இந்நாட்டின் முதலாவது தமிழ் தினசரித் செய்தித்தாளான ‘தேசநேசன்’ செய்தித்தாளை ஆரம்பித்த நடேசய்யர் இந்நாட்டின் மலையகத் தமிழ் சமுதாயத்தின் சிக்கல்கள் பற்றி தேசிய மட்டத்தில் அச்சு ஊடகம் மூலமாக கலந்துரையாடத் தொடங்கினார். அக்காலக்கட்டத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள், வெளியாட்கள் எவருக்குமே பிரவேசிக்கக்கூட தடைசெய்திருந்த அடிமை வலயமாக பேணிவரப்பட்டுக் கொண்டிருந்த தோட்டங்களுக்குள் மாறுவேடம் தரித்து உட்புகுந்து தொழிலாளர்களுடன் உறவுகளை கட்டியெழுப்பி அவருடைய மக்களை விளிப்புணர்வூட்டுகின்ற செயற்பாங்கினை ஆரம்பித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்காக “தேச பக்தன்” எனும் செய்தித்தாளை அவர் ஆரம்பித்ததோடு அதனை இரகசியமாக வெள் ளைக்காரத் தோட்ட ஏகாதிபத்தியம் பூராவிலும் மக்கள் மத்தியில் தமது உரிமைகள் பற்றிய புதிய புத்துணர்ச்சியை உருவாக்கியே பகிர்ந்தளித்தார். தனது செயற்பாடுகளை பெருந்தோட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் பொதுவாக இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்காக தோற்றினார். 1927 இல் இலங்கை தொழிலாளர் சங்கத்தினால் நெறிப்படுத்தப்பட்ட துறைமுக வேலைநிறுத்தத்திற்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை சேர்த்துக் கொள்வதில் நடேச ஐயர் வெற்றிபெற்றார். இந்நாட்டின் ஒரு சில தொழிலாளர் தலைவர்களால்கூட இந்திய தொழிலாளர்கள் இந்நாட்டுத் தொழிலாளர்களின் தொழில் வாய்ப்புகளை குறைந்த சம்பளத்திற்காக சேவையாற்றி பறித்தெடுக்கின்ற குழுவினராக நோக்குகையில் இந்த மண்ணில் வசிக்கின்ற அனைவரதும் எதிர்காலம் நாட்டின் அபிவிருத்தியிலேயே தங்கியிருக்கின்றது என்பது நடேச ஐயரின் தூரநோக்காக அமைந்தது. அதனால் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிளவுப்படாமல் அதற்காக போராடவேண்டுமென்பது அவருடைய கருத்தாக அமைந்தது.

தலைசிறந்த பேச்சாளரான அவர் தனது கருத்துக்களால் பெருந்தொனையான மக்களை கவர்ந்திருப்பதில் வெற்றி பெற்றதோடு தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்தார். 1936 இல் ஹற்றன் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து அரசு கழகத்திற்கு தெரிவாகிய அவர் உலகச் சந்தையில் தேயிலை விலைக்கு அமைவாக தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளையும் தோற்படிப்பதில் முன்னின்று செயலாற்றினார். 1930 இல் தசாப்தத்தில் பிற்பகுதியில் பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தில் தொழிலாளர்கள் தோட்டத்தின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதால் ஏற்பட்ட நிலைமைக்குள் இந்நாட்டின் பெருந்தோட்டத்துறைக்கான முதலாவது கூட்டு உடன்படிக்கையை கையொப்பமிடுவதில் தனித்துவமான வகிபாகத்தை நடேச ஐயர் ஈடேற்றினார்.

1930 இல் மலையகத்தின் முதலாவது அச்சகமான “சகோதரி” அவரால் ஆரம்பிக்கப்பட்டதோடு அதனூடாக பிரசுரிக்கப்பட்ட செய்தித்தாள்கள் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் தீர்மானகரமான மாற்றத்தைக் குறித்துநின்றது. நடேச ஐயர் மலையக தமிழ் இலக்கியத்தின் தந்தை என பாராட்டப்படுகின்றார்.

லண்டன் ஆர். இராமலிங்கம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division