Home » இஸ்ரேலின் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆயுதங்களை அள்ளிவழங்கும் அமெரிக்கா!

இஸ்ரேலின் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆயுதங்களை அள்ளிவழங்கும் அமெரிக்கா!

by Damith Pushpika
October 20, 2024 6:00 am 0 comment

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு முதலாம் உலக மகாயுத்த காலம் முதல் நீடிக்கின்றது. அந்தப் பின்னணியில் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்கா, வருடா வருடம் 3.8 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு உதவியாக வழங்கி வருகிறது. கடந்தாண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி காசா மீதான யுத்தம் ஆரம்பமான பின்னரான ஒரு வருட காலப்பகுதிக்குள் மாத்திரம் 14 பில்லியன் டொலர்களை மேலதிகமாக இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா. இவற்றில் பெரும்பாலானவை ஆயுதத் தளவாடங்களாகும்.

இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கும் முதன்மை நாடாக விளங்கும் அமெரிக்கா, காசா மீதான யுத்தம் ஆரம்பமான பின்னர் இஸ்ரேலை ஆயுத தளவாடங்கள் ரீதியில் பலப்படுத்துவதில் முன்னுரிமை அளித்து செயற்படுகின்றது.

காசா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரி லெபனானின் ஹிஸ்புல்லாஹ், யெமனின் ஹுதிக்கள் மற்றும் சிரிய, ஈராக்கின் சில போராளிக்குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. ஆன போதிலும் அமெரிக்கா, ‘இஸ்ரேலை இரும்புக்கவசம் கொண்டு பாதுகாப்போம்’ என ஏற்கனவே அறிவித்துள்ளதோடு, 2000 இறாத்தல் நிறை கொண்ட குண்டுகள், பதுங்கு குழிகளை தாக்கியழிக்கும் குண்டுகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுத தளவாடங்களை வாரிவழங்கி வருகிறது.

இவ்வாறான சூழலில், தற்போது தாட் (Terminal High Altitude Area Defense -THAAD) என்ற அதிநவீன வான் பாதுகாப்பு கட்டமைப்பை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா. இது உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இப்பாதுகாப்பு கட்டமைப்பு இவ்வார நடுப்பகுதியில் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளதோடு, அதனை இயக்கவென 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலிடம் ஏற்கனவே அயன் டோம், டேவிட் ஸலிங்க், எரோ- 2 , எரோ 3 என மூன்று வகையான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன. அவற்றில் அயன் டோம் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. இது குறுந்தூர ரொக்கட்டுகள் மற்றும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது. அத்தோடு 4 கிலோ மீற்றர் முதல் 70 கிலோ மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட குறுந்தூர ெராக்கெட்டுகளையும், குண்டுகள் மற்றும் மோட்டார்களையும் இடைமறித்து தாக்கி அழிக்கும்.

டேவிட் ஸ்லிங் என்பது நீண்ட தூர ெராக்கெட்டுகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் மத்திய அல்லது நீண்ட தூர பிளாஸ்டிக் ஏவுகணைகளை 300 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து இடைமறித்து அழிக்கும்.

அரோ – 2 மற்றும் அரோ – 3 வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் 2,400 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் போது மத்திய மற்றும் நீண்ட தூர பிளாஸ்டிக் ஏவுகணைகளைத் தாக்கியழிக்கும்.

இத்தகைய மூன்று வகையான வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை இஸ்ரேல் தன்னகத்தே கொண்டிருந்தும் கூட, கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி 180 பிளாஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்தது. இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் 90 சதவீதமானவை உரிய இலக்குகளை அடைந்ததாக ஈரான் இஸ்லாமிய புரட்சிக்காவலர் படைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் இஸ்ரேல் இராணுவப் பேச்சாளர், ஈரான் பயன்படுத்திய பெரும்பாலான பிளாஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து தாக்கியழிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான ஏவுகணைகள் வெற்றுப் பகுதிகளில் விழுந்து வெடித்ததாகவும் கூறினார்.

ஈரான் மேற்கொண்ட பிளாஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேலுக்கு சேதங்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரிட் ஜேர்னல், இத்தாக்குதலுக்கு ஈரான் பயன்படுத்திய பிளாஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் வரலாற்றில் முதன் முறையாக முகம்கொடுத்தவையாகும் என்றுள்ளது.

ஈரான் பயன்படுத்திய 180 ஏவுகணைகளில் 32 ஏவுகணைகள் எப் 35 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் மிகப் பெரிய நெவாடிம் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளன. இவ்விமானத் தளத்தில் 3 ஓடுதளங்கள் உள்ளன. அந்தத் தளங்களிலும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்களும் வெளியாகியுள்ளன.

ஈரானிய ஏவுகணைகள், படைத் தளங்களுக்குள் இருந்த அலுவலகக் கட்டடங்கள் மற்றும் பிற பராமரிப்புப் பகுதிகளை சேதப்படுத்தியதாகவும், அவை இஸ்ரேலிய விமானப்படையின் செயற்பாடுகளை பாதிக்கவில்லை. எந்த விமானமும் சேதமடையவுமில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் இத்தாக்குதலின் போது ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கவென பெருந்தொகை நிதியை இஸ்ரேல் செலவிட்டுள்ளது. இதன் பொருட்டு அரோ 2, அரோ 3 வான் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு அரோ கட்டமைப்பு ஒரு ஏவுகணையை இடைமறித்து அழிக்க 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். இதன்படி ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கவென 450 மில்லியன் டொலர் செலவு இஸ்ரேலுக்கு ஏற்பட்டதாக இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஜெரூஸலம் போஸ்ட்’ குறிப்பிட்டது. இத்தாக்குதலுக்கு ஈரான் செலவிட்டதை விடவும் இது இரு மடங்கு அதிகமாகும்.

இவை இவ்வாறிருக்க, ஈரான் முன்னெடுத்த ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேலுக்கு 40 முதல் 53 மில்லியன் டொலர் வரை சொத்து சேதங்கள் ஏற்பட்டதாக சொத்து வரி தரவுகளை மேற்கோள்காட்டி எடியோத் அஹ்ரொநொத் என்ற இஸ்ரேலிய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஈரானுக்குப் பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. அதற்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள், எண்ணெய்க் களஞ்சியங்கள், ஆன்மீகத் தலைவரின் இல்லம், இஸ்லாமிய புரட்சி காவலர் படை தலைமையகம் என்பவற்றை தாக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எண்ணெய்க் களஞ்சியங்களையும் அணுசக்தி நிலையங்களையும் தாக்கக்கூடாதென அமெரிக்கா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஆனால் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாசி அராக்சி, ‘எம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டால் எமது தாக்குதல்கள் கடுமையாகவும் தீவிரமாகவும் இருக்கும். நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனபோதிலும் எமது மக்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றோம். நாம் சிவப்பு கோடுகளைப் பார்க்க மாட்டோம்’ என்றுள்ளார்.

இவ்வாறு ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் உச்ச கட்ட யுத்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஈரான் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படும் போது ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடாத்தவே செய்யும். அதனால் ஈரானின் பிளாஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதைப் பிரதான நோக்காகக் கொண்டு தாட் வான் பாதுகாப்பு கட்டமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பாகும், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை இடைமறித்து முறியடிக்கக்கூடிய இக்கட்டமைப்பு பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் ரடார் கட்டமைப்பு, தீ கட்டுப்பாட்டு அமைப்பு, தொடர்பாடல் பாகம், ஏவுகணை லோஞ்சர்கள், இடைமறிப்புக்கள் என்பன அடங்கியுள்ளன.

இதேவேளை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பத்தா ஹைப்பர்சொனிக் என்ற ஏவுகணையை ஈரான் முதல் தடவையாகப் பயன்படுத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஏவுகணை இற்றை வரையும் அமெரிக்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாததாகும். அதனால் இந்த தாட் கட்டமைப்பு மூலம் இந்த ஏவுகணையை இடைமறிக்க முடியுமா என பரீட்சிக்கவும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கட்டமைப்பின் ஏவுகணைகள் 150 முதல் 200 கிலோ மீற்றர்கள் (93 முதல் 124 மைல்கள்) வரை சென்று இடைமறித்து தாக்கி அழிக்கக்கூடியவையாக விளங்குகிறது. அத்தோடு இது ஒரு தற்காப்பு ஆயுதமாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வழங்கியுள்ள டாட் ஏவுகணைப் பாதுகாப்பு கட்டமைப்பு செயற்படத் தொடங்கியதும் ஈரான் மீது எந்த வேளையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ‘இவ்வான் பாதுகாப்பு கட்டமைப்பை நம்பி தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம். இது 2019 இல் வழங்கப்பட்ட ஒன்று. அப்படி இருந்தும் எமது தாக்குதல்கள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதை இஸ்ரேல் மறந்து விடக்கூடாது’ என்று ஈரான் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division