Home » அனைத்து மக்களதும் அரசியல் மையமாக தேசிய மக்கள் சக்தி
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட

அனைத்து மக்களதும் அரசியல் மையமாக தேசிய மக்கள் சக்தி

by Damith Pushpika
October 20, 2024 6:00 am 0 comment

தற்போது நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார். எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பொதுத்தேர்தலும் நடைபெற விருக்கிறது.

இவ்வாறான சூழலில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் வடக்கு இணைப்பாளருமான பிமால் ரத்நாயக்க தினகரன் வார மஞ்சரிக்கு அளித்த பேட்டி வருமாறு…

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பல தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையுமெனக் கருதுகிறீர்களா?

பதில்: இல்லை. பொதுத்தேர்தலையும் நிச்சயமாக நாம் வெற்றி கொள்வோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு தேசிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் வாக்கு கிடைக்கப்பெற்றது. ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 57 இலட்சம் வாக்குகளும் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்றவையே.

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை விடவும் 13 இலட்சம் குறைவான வாக்குகளையே ஐ.ம.சக்தி பெற்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, மாத்தறை என அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிட்டோம். ஆனால் ஐ.ம. சக்தி வடக்கில் தமிழரசு கட்சியுடனும் கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் மலையகப் பிரதேசங்களில் மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடனும் தெற்கில் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களுடனும் இணைந்து தான் தேர்தலில் போட்டியிட்டது.

பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சி தனியாகப் போட்டியிடுகிறது. சம்பிக்க ரணவக்க தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளார். ஸ்ரீ ல.மு.கா, அ.இ.ம.கா கட்சிகள் சில மாவட்டங்களில் தனித்தும் சில மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடுகின்றன. அத்தோடு இன்று அதிக பிரச்சினைகளும் நெருக்கடிகளும் நிறைந்த கட்சியாக மாறியுள்ளது ஐ.ம.சக்தி. இவை பொதுத்தேர்தலில் ஐ.ம. சக்தியின் வாக்குகளில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

கேள்வி: பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பொறுப்பெற்றுள்ள ஜனாதிபதியால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென நம்புகிறீர்களா?

பதில்: ஆம். எம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம். அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்துள்ளோம். இருந்தும் சிலர் நாம் ஆட்சிக்கு வந்ததும் டொலர் 400 ரூபாவாகும். எரிபொருளுக்கு வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பொருட்களின் விலைகள் உயரும் எனக் கூறினர். ஆனால் எமது ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, வாழ்க்கைச் செலவும் இருந்ததை விடவும் குறைவடைந்து, பங்கு சந்தையிலும் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய பொருளாதார ஸ்திரநிலையைப் பேணியபடி கட்டம் கட்டமாக முன்னேற்றப்பாதையில் நாட்டை இட்டுச் செல்வது எமது முதல் முயற்சியாகும். அதன் பயனாக நாட்டில் பொருளாதாரம் குறித்து நிலவிய நம்பிக்கையற்ற தன்மை நீங்கியுள்ளது.

எமது நாட்டின் சனத்தொகையில் 55 சதவீதமானோர் பொருளாதார சிரமங்களுக்கு பெரிதும் முகம் கொடுத்துள்ளனர். 26 சதவீதமானோர் ஏழைகளாக இருக்கின்றனர். அதனால் பொருளாதார ஸ்திர நிலையைப் பேணியபடி மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப ஜனாதிபதி, நிதியமைச்சர் என்ற வகையில் பெரும்போகத்திற்குரிய பசளைக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணையாளரும் அனுமதியளித்துள்ளார். கடற்றொழிலாளர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி: ஜனாதிபதி பதவியேற்றதும் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள்?

பதில்: காலம் தாழ்த்தாது முன்னெடுக்கக்கூடிய வேலைத்திட்டங்களாக வீண்விரயத்தைக் குறைத்தல், சிக்கனப் பயன்பாடு, வளங்களை முறைகேடாகப் பாவிக்காதிருத்தல் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்திற்கு மாத்திரமல்லாமல் அமைச்சரவை, ஆளுநர்கள் பதவி ஏற்பு வைபவங்களுக்கும் எவ்வித நிதியும் செலவிடப்படவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய வைபவங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடப்பட்டன.

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கட்டம் கட்டமாகக் குறைத்து உரிய பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ கட்டமைப்புக்களிலும் கடமையில் ஈடுபட ஏற்பாடு செய்துள்ளோம்.

அதேநேரம் கடந்த கால ஜனாதிபதிகள் சில அமைச்சுகளுக்குரிய வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். அதனால் அத்தகைய அமைச்சுகள் வாடகை வாகனங்களையே பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளன. இதன் விளைவாகவும் நாட்டில் பெருமளவில் செலவு ஏற்பட்டிருந்தது. தற்போது அத்தகைய அமைச்சுகளுக்கு வாகங்களைப் பகிர்ந்தளித்து வாடகை வாகனங்களுக்கான செலவை நிறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி செயலகத்திற்கு மாத்திரம் பெருந்தொகையில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களையும் நாம் குறைத்துள்ளோம்.

இவ்வாறு எமது ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் எவ்வளவு நிதியை நாம் சேமித்துள்ளோம் என்பதை நாட்டு மக்கள் முன் வைக்க எதிர்பார்த்துள்ளோம்.

கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மத்திய வங்கி மோசடி, படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராம் வழக்கு, லலித் மற்றும் குகனைக் கடத்தி படுகொலை செய்தமை போன்றவாறான விசாரணைகள் குறிப்பிடத்தக்கவை.

கேள்வி: புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் பெருமளவில் கடன்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்: நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணிய படி பயணத்தை ஆரம்பித்துள்ளோம். ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத்திட்டமே இன்னும் செயற்பாட்டில் உள்ளது. அவரது வரவு செலவுத் திட்டம் மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒன்று வரிச் சுமையை ஏற்றுதல், மற்றையது கடன் பெறுதல், மூன்று அரச சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகியனவாகும். அவற்றில் அரச சொத்துக்களை விற்பனை செய்வதை நாம் நிறுத்தியுள்ளோம்.

என்றாலும் வரிச் சுமையை ஜனாதிபதியால் குறைக்க முடியாது. அதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. அதனால் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் சில வரிகளை குறைக்க வேண்டும். குறிப்பாக நாம் அறிவித்துள்ள படி உணவு, கல்வி, மருந்துப் பொருட்கள் என்பவற்றுக்கான வற் வரியை சட்டமொன்றை நிறைவேற்றி குறைக்க உள்ளோம்.

கடன் பெறுவதற்காகவே ரணில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளார் என்பதை அவரது நண்பர்கள் அறிவர்.

அதனால் நாம் கடன் பெறுவதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடுகின்றனர். எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னர் சமர்ப்பிக்கப்படும்.

கேள்வி: நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையின் படி, தற்போதைய புவிசார் அரசியலுக்கு மத்தியில் இந்தியா, சீனாவுடனான உறவுகள் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: நாம் எல்லா நாடுகளுடனும் வெளிப்படையானதும் சுதந்திரமானதுமான உறவுகளைப் பேணி வருகின்றோம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக ஜனாதிபதி 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவற்றில் இந்தியா, சீனா, அமெரிக்கா, பலஸ்தீன், சவுதி அரேபியா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்றிருந்தன. அந்தந்த நாடுகளின். ஊடாக இலங்கையின் அபிவிருத்திக்கும் சுபிட்சத்திற்கும் உச்சளவிலான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவே நாம் எதிர்பார்க்கிறோமே தவிர முன்னணி நாடுகளுக்கு மத்தியில் நிலவும் உலகளாவிய அதிகார முரண்பாட்டுக்குள் இணையவல்ல. நாம் அணிசேராக் கொள்கைப்படி செயற்படுகிறோம்.

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுங்கள்?

பதில்: எமக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையில் உயிர்த்த ஞாயிறு விசாரணையும் ஒரு முக்கிய பகுதி. இது இலங்கை மனசாட்சியின் பிரச்சினையாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் 300 அப்பாவி கிறிஸ்தவ மக்களை படுகொலை செய்திருக்கிறார்கள். இல்லாவிடில் அது இதயத்தில் ஓட்டையுள்ளது போன்று அமையும். அதனால் அந்த ஒட்டையை அடைப்பது இன்றியமையாததாகும்.

அதேநேரம் அத்தாக்குதலால் நாட்டில் அநீதிக்கும் ஒதுக்கத்திற்கும் பாதிப்புக்கும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் பெரிதும் உள்ளாகினர். இத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுப்பதும் கூட நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் தவிர்த்துக்கொள்ள முடியாத பொறுப்பேயாகும். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்ததும் இவை அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தார். ஆனால் எமது ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி: அரசியலமைப்பின் 13 வது திருத்தமான மாகாண சபை முறைமை குறித்து குறிப்பிடுவதாயின்?

பதில்: இலங்கையில் தேசிய ஐக்கியமின்மை மற்றும் சமத்துவமின்மை அல்லது இலங்கையர் என சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாதுள்ளமை குறித்து நாம் மிகத் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் 1948 முதல் இலங்கை தேடிய விடயமொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அது தான் யாழ்ப்பாணத்தையும் கல்முனையையும் மாத்தறையையும் கொழும்பையும் ஒன்றாக இணைக்கக்கூடிய தேசிய அரசியல் இயக்கத்தின் தேவையாகும்.

1948 இல் பதவிக்கு வந்த டி.எஸ். சேனநாயக்கா முதல் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோர் கடந்த 76 வருடங்களாக அதிகாரத்திற்காக இனவாத்தைப் பயன்படுத்தினர். முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக மலையக மக்களின் வாக்குரிமையை நீக்கினார். சுதந்திரத்தோடு நாடு அரசியல் ரீதியாகப் பிரியத் தொடங்கியது.

இத்தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்கும் போது இன்று வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரதும் முக்கிய அரசியல் மையமாக தேசிய மக்கள் சக்தி மாறிவருகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக முழு நாட்டையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். தேசிய ஐக்கியமின்மைக்கு 13வது திருத்தத்தை விடவும் முதல் தரத் தீர்வாக அது இருக்கும்.

நாம் அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அது வரைக்கும் ஆளுநர்கள் ஊடாக மாகாண சபை நிர்வாகங்கள் முன்னெடுக்கப்படும். ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எமது ஆட்சிக்காலத்தில் வட மாகாண ஆளுநர் தமிழ் மொழியில் தான் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். இதற்கு முன்னர் எல்லா ஆளுநர்களும் ஆங்கில மொழியில் சத்தியப் பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள படி புதிய அரசியலமைப்பை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். அனைத்து மக்களதும் சமய, கலாசார, அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் உறுதிப்படுத்தி மேம்படுத்தும் வகையில் எல்லா மக்களும் ஐக்கியமாக ஒரே நாட்டில் வாழக்கூடிய மிகவும் நியாயமான அரசியலமைப்பாக அது அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவது குறித்து எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில்: அது தொடர்பில் எமது கட்சியிலும் அரசிலும் உச்சபட்ச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அது தொடர்பிலான வேலைத்திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக வடக்கு மக்களின் வாழ்வாதார பொருளாதார பலத்தை மேம்படுத்துதல் அவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அதேபோன்று அவர்கள் தமது தாய்மொழியில் பணிகளை மேற்கொள்வதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான துரித வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம். அதேநேரம் கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள பாதையை பல வருடங்களாக மூடி வைத்திருந்தது போன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் பாதைகள் மூடப்பட்டிருக்கலாம். அத்தகைய பாதைகள் தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அச்சுறுத்தல் அற்ற பாதைகளை விடுவிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேள்வி: மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பள கோரிக்கைக்கு இன்னும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாதுள்ளதே?

பதில்: ரணில் விக்கிரமசிங்கவின் ஏமாற்று அரசியலின் விளைவே இது. நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சூழலில் பெருந்தோட்ட உரிமையாளர்களுடனும் தொழிலாளர்களுடனும் பேசி அவர்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்க வெண்டும். அந்த மக்களுக்கு அரசினால் சம்பளம் வழங்கக்கூடிய நிலைமை இல்லை. பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்கள் தான் அதனை வழங்க வேண்டும். இலங்கையில் மிகவும் ஏழ்மையில் வாழும் மக்களே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தான். அவர்களது பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதனை சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக மாத்திரமல்லாமல் பொருட்களின் விலைக்குறைப்பு, அவர்களுக்கான வீடமைப்பு, அவர்கள் சமூக, கலாசார ரீதியில் முகம் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு என்றவாறு அமைக்க வேண்டும். அவர்கள் இருக்கும் இடங்கள் கிராமங்களாக உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு பல கோணங்களிலும் கவனம் செலுத்தி மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்​தை உயர்த்த வேண்டும்.

கேள்வி: பொதுத்தேர்லின் பின்னர் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப்படுமா?

பதில்: நாம் நாட்டின் சுபீட்சத்திற்காக பாராளுமன்றத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம். மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு வரும் பிரதிநிநிதிகள் அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாவர். அதனை நாம் மதிக்கிறோம். ஆனால் மக்கள் வலுவான ஆணையை எமக்கு வழங்கும் போது அக்கட்சிகளை அரசாங்கத்திற்குள் எடுப்பது மக்களின் அபிப்பிராயத்திற்கு எதிரானதாகும். நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னெடுக்கவே மக்களிடம் ஆணையைக் கோருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகள் வேறு வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்து எம்மை தோற்றகடிக்கவே மக்களிடம் வாக்குகளைக் கேட்கின்றனர். தேர்தலில் இரண்டு பாதைகளில் சென்ற இருவர் தேர்தலின் பின்னர் ஒன்றிணைவதற்கு விஷேட காரணங்கள் இருக்க வேண்டும். மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டு அந்த ஆணைக்கு எதிராக செயற்படும் மோசமான அரசியல் கலாசாரம் இது.

கேள்வி: நிறைவாக நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில்: இந்நாட்டு சிங்கள மக்கள் நாம் தான் முற்போக்குவாதிகள், நாம் தான் மாற்றத்திற்கு அதிகம் பங்களிக்கிறோம். வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் வழமை போன்று ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் சேர்ந்து கொள்வதாகவும் பதவிகளை பகிர்ந்து கொள்வதாகவும் அந்த மக்கள் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளுடன் இணைந்திருப்பதாகவும் கருதி வந்தனர். அதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. ரவுப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன், தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா போன்றோர் எல்லா அரசுகளிலும் அமைச்சர்களாக இருந்து வருவதே இதற்கு சிறந்த உதாரணமாகும்.

என்றாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னரும் வடக்கு, கிழக்கு, மலையகப் பிரதேச மக்கள் மத்தியில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தியையே நம்பிக்கைக்குரிய கட்சியாகப் பார்க்கின்றனர். அவர்கள் பாரம்பரிய அரசியல் கட்சித் தலைவர்களை நம்பத் தயாரில்லை என்பதை வெளிப்படையாகவே கூறுகின்றனர். இந்த அரசியல் மாற்றத்திற்கு சிங்கள மக்கள் மாத்திரமல்லாமல் வடக்கு, கிழக்கு, மலையப் பிரதேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களும் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர். நாட்டின் மோசமான அரசியல் கலாசாரத்தில் இருந்து வெளியே வர எல்லா மக்களும் பாரிய பங்களிப்பை நல்கியமையையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

பேட்டி கண்டவர் : மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division