மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி ஆடும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இன்று ஆரம்பமாகும். தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னரே இலங்கை அணி வெள்ளைப் பந்துக்கு திரும்புகிறது. என்றாலும் நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் என்பது மாறுபட்ட போட்டிகளாக இருப்பதால் இந்த இரு அணிகளுமே வித்தியாசப்பட்டிருக்கும்.
இரண்டு கிரிக்கெட்டிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய பத்தும் நிசங்க, கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் தவிர்த்து அணிகளுமே முற்றிலும் மாறுபட்டிருக்கும். எனவே, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டுக்கு என்று அணிகள் பிரத்தியேகமாக மாற வேண்டி இருக்காது.
ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் இலங்கை ஆடவிருக்கிறது. இதன் முதல் போட்டி இன்று (13) நடைபெறவிருப்பதோடு அடுத்த இரு போட்டிகளும் முறையே எதிர்வரும் 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளிலும் தம்புள்ளையில் இரவு நேர ஆட்டமாகவே நடைபெறப்போகிறது.
இலங்கை அணி சில முக்கிய மாற்றங்களுடனேயே இந்த டி20 தொடரில் கமிறங்குகிறது. முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் வெளியேற்றம் மற்றும் பானுக்க ராஜபக்ஷவின் வருகையை இங்கு குறிப்பிட்டுக் கூறலாம்.
தசுன் ஷானக்க என்பவர் போட்டியை எப்போது வேண்டுமானாலும் திசை திருப்பக்கூடியவர் என்றாலும் அவரது ஆட்டத்தில் ஒரு தொடர்ச்சிப் போக்கு இல்லாமை இன்று அவர் ஓரங்கட்டப்படுவதற்கு காரணமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் அணித் தலைமை பொறுப்பை இழப்பதற்கும் அவரது தலைமையில் இருந்த குறைகளை விடவும் ஆட்டத்தில் இருந்த குறைகளே பெரிதாகக் காணப்பட்டது.
பின்னர், சாதாரண வீரராகவும் அவரால் சோபிக்க முடியாமல்போனது. பந்துவீச்சில் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தபோதும் துடுப்பாட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்தது. கடைசியாக அவர் ஆடிய மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆனதோடு, அதன்பின்னர் உள்ளூர் அல்லது லீக் கிரிக்கெட்டுகளிலும் அவர் தனது திறமையைக் காட்டத் தவறிவிட்டார்.
மறுபுறம் பானுக்க ராஜபக்ஷ அணிக்குத் திரும்பியதும் பெரும் போராட்டத்தின் பின்னராகும். கடந்த 20 மாதங்களாக அவரால் அணியில் இடம்பிடிக்க முடியாமல்போனது. ஓட்டங்களைச் சேர்க்கத் தவறியது, அணியில் பிடிமானம் இல்லாமல் இருந்தது எல்லாமே அவருக்குப் பாதகமாக இருந்தது.
என்றாலும் உலகெங்கும் டி20 லீக் கிரிக்கெட்டுகளில் ஆடி வரும் பானுக்க ராஜபக்ஷ அந்தப் போட்டிகளில் சோபித்த நிலையிலேயே அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டின் பிரத்தியேக வீரராக இருக்கும் பானுக்க ராஜபக்ஷவின் ஆட்டம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரியவின் கிரிக்கெட் பாணிக்கு நன்றாக பொருந்துகிறது. எப்போதுமே எதிராணியை முற்றாக முறியடிக்கும் போட்டித் தந்திரத்துக்கு பெயர்போன சனத் ஜயசூரிய தனது ஆட்டப்போக்கை செயற்படுத்துவதற்கு பானுக்கவை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.
அத்தோடு பானுக்கவின் வருகையுடன் இலங்கை அணியின் மத்திய வரிசையில் இருந்து வந்த குறைபாட்டை சரி செய்ய வாய்ப்பு இருக்கிறது. கடந்த காலத்தில் தசுன் சானக்க சோபிக்கத் தவறியது, பதிலாக அழைக்கப்பட்ட அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸும் சரியாக ஆடாதது என்று மத்திய வரிசை தடுமாற்றம் கண்டு வந்தது.
இந்நிலையில், பானுக்கவை சரியாக பயன்படுத்த முடியுமாக இருந்தால் இலங்கை அணிக்கு பெரும் பலமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவரை இலங்கை அணி இன்றுவரை சரியான வகையில் பயன்படுத்தத் தவறியது பெரும் இழப்பாகும்.
பானுக்கவால் பந்தை எந்த நேரத்திலும் பௌண்டரிக்கு வெளியில் அடிக்க முடியும் என்பது அவருக்கேயுரிய பிரத்தியேகமான திறமையாகும். அவ்வாறான வீரர்கள் கிடைப்பது மிக அரிதானது.
இலங்கை அணி அனுபம் மற்றும் இளம் வீரர்கள் என்று கலவையாகவே மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இதில் இளம் வீரர் சமிந்து விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருப்பது எதிர்காலத்துக்கான முதலீடாகவே பார்க்க முடிகிறது. 22 வயதான சமிந்து கடைசியாக நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஒரு வேகப்பந்து சகலதுறை வீரராக தேர்வாளர்களின் அவதானத்தை பெற்றார்.
கடைசியாக நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆடிய அவர் பந்துவிச்சில் 4 ஓவர்களுக்கும் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 4 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் டி20 குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளபோதும் அவர் பதினொரு வீரர்களில் இடம்பெறுவதற்கு தொடர்ந்து போராட வேண்டி இருக்கும். லங்கா பிரீமியர் லீக்கில் சோபித்ததை அடுத்தே அவர் இலங்கை டி20 அணிக்கு சேர்க்கப்பட்டார். என்றாலும் அவர் கடைசியாக டி20 போட்டி ஒன்றில் ஆடி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது.
அதேபோன்று ஜெப்ரி வன்டர்சே கடந்த ஓகஸ்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சாக 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சோபித்த நிலையில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் இலங்கை டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
என்றாலும் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன போன்ற டி20 போட்டிக்கே பிரத்தியேகமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அவர் அணியில் 11 வீரர்களுக்குள் இடம்பெறுவது என்பது போராட்டமாக இருக்கும்.
மதீஷ பதிரண, நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றிருக்கிறார்கள்.
மறுபறம் மேற்கிந்திய தீவுகள் அணி நிகலஸ் பூரன், அன்ட்ரே ரசல், அகீல் ஹொசைன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் போன்ற முன்னணி வீரர்கள் இன்றியே இலங்கை வந்திருக்கிறது. என்றாலும் அந்த அணி தொடர்ந்து வலுவாகவே உள்ளது. ரோவ்மன் பொவல் தலைமையிலான மேற்கிற்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இருக்காது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இதுவரை ஆடிய 15 டி20 சர்வதேச போட்டிகளில் இலங்கையால் அதிபட்சமாக 8 போட்டிகளில் வெல்ல முடிந்திருப்பதோடு 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
என்றாலும் இலங்கை மண்ணில் ஆடிய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் ஆதிக்கம் செலுத்தி இருப்பது தான் விசித்திரமானது. அதாவது இரு அணிகளும் இலங்கை மண்ணில் ஆடிய 6 டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளால் 4 போட்டிகளில் வெல்ல முடிந்துள்ளது. எனவே சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்வதில் இலங்கை அணி அவதானமாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.