கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற 16 வயது மாணவி 356 மீற்றர் உயரம் கொண்ட தாமரை கோபுரத்தின் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இதுதொடர்பில் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மிகவும் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு 03 ஐச் சேர்ந்த மாணவியொருவரும் இன்னுமொரு மாணவனும் கடந்த ஜூலை 2ஆம் திகதி கொம்பனி வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது அனேகருக்கு நினைவிருக்கும். சில தினங்களுக்கு முன்னர் தாமரைக் கோபுரத்தில் இருந்து உயிரை மாய்த்தவர் இந்த மாணவர்களின் நெருங்கிய தோழி என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இவர் சம்பவத்தன்று பெற்றோரிடம் மாலையில் சங்கீத வகுப்புக்கு செல்வதாகவே கூறிச் சென்றுள்ளார். மாணவியின் தந்தை, காலை 7.10 அளவில் அவரை வழமை போல் பாடசாலையில் விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் மதியம் 2.30 மணியளவில் மதிய உணவை கொண்டு வந்து கொடுத்துள்ளார். உணவுப் பார்சலை தந்தையிடமிருந்து பெற நண்பியொருவருடன் பாடசாலை வாசலுக்கு வந்துள்ளார் மாணவி.
ஆனால் சங்கீத வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி சாப்பாட்டுப் பார்சலை தந்தையிடம் வாங்கிச் சென்ற மாணவி, அதிக நேரம் பாடசாலையில் இருக்கவில்லை.
பாடசாலையிலிருந்து சுமார் இருநூறு மீற்றர் தொலைவிலுள்ள தாமரை கோபுரத்துக்கு முச்சக்கரவண்டியில் 3.30 மணியளவில் சென்றுள்ளார். சர்வதேசப் பாடசாலைச் சீருடை அணிந்து, பாடசாலை பையுடன் தாமரை கோபுரத்தில் நுழைந்தார்.
ஆனால் அவர் தாமரை கோபுரத்தின் பார்வையாளர் தளத்துக்கு வந்த போது பாடசாலைச் சீருடையுடன் வரவில்லை. இடையில் எங்கோ அவர் ஆடைகளை மாற்றியிருக்கிறார்.
கொம்பனி வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் இருவரும் இதே பாணியிலேயே சீருடை அணிந்தவாறு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து பின்னர், ஆடைகளை மாற்றிக்கொண்டு பாடசாலை பைகள், மொபைல் போன்கள் மற்றும் காலணிகளை வைத்துவிட்டு கட்டடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகெண்டனர்.
ஆனால், அவர்களின் தற்கொலை குறித்து தீவிரமான விசாரணை நடத்தப்படவில்லை.
கொம்பனி வீதி அடுக்குமாடி குடியிருப்பை விட, தாமரைக் கோபுரத்தின் பார்வையாளர் பகுதி அதிக உயரம் கூடிய பகுதியாக காணப்படுகின்ற போதிலும் அது அதன் 29 ஆவது தளமே. எனவே இந்த மாணவியின் தற்கொலைக்கும் கொம்பனிவீதி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இருமாணவர்களின் மரணங்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் விழுந்த இடமும் ஒரே மாதிரியாகவே உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேபோல் மாணவி தாமரை கோபுர வளாகத்துக்குள் தற்கொலை செய்துகொள்ளும் வரை சுமார் இருபது நிமிடங்கள் இருந்துள்ளார். அங்கிருந்து பார்த்தால் அம்மாணவியின் நண்பர்கள் குதித்து தற்கொலை செய்துகொண்ட கொம்பனி வீதி அடுக்குமாடி குடியிருப்பு நன்றாக தெரியும். அந்த திசையை நோக்கியே அவர் நின்றிருந்ததாகவும் சுமார் இரண்டு நிமிடங்கள் அதைப் பார்த்தபடி இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் பலமுறை கீழே குதிக்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது. தாமரைக் கோபுரத்தின் பார்யாளர் தளத்தைச் சுற்றியுள்ள உயரமான சுவர் பகுதியில் ஏற முடியாமல் போனமையால் முதல் முயற்சி தோல்வியடைந்தது.
அதன்பின்னர் மீண்டும் கொம்பனி வீதி அடுக்குமாடி குடியிருப்பை இரண்டாவது முறையாகப் பார்த்து விட்டு மீண்டும் முயற்சி செய்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்தது.
இறுதியாக, மாணவி தனது காலணிகளை கழற்றி வைத்துவிட்டு குதித்துள்ளார். இதன்மூலம் மாணவி நீண்டகாலமாக யோசித்த பின்னரே இச்செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மூன்றாவது மாடியின் திறந்த பகுதியில் தரையில் சடலத்தைக் கண்டதுமே மேலே இருந்து ஒருவர் விழுந்துள்ளமை அங்கிருந்தவர்களுக்கு தெரிவந்துள்ளது.
250 மீற்றருக்கும் அதிகமான உயரத்திலிருந்து கீழே விழுந்த அவளது உடல் எலும்பு முறிவுக்கு உட்பட்டு பலத்த சேதமடைந்திருந்தது.
இதனையடுத்தே இதுதொடர்பில் அங்கிருந்த நிர்வாகியொருவர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
29ஆவது மாடியிலுள்ள பார்வையாளர் தளத்தில் மாணவியின் பை மற்றும் மொபைல் என்பன இருந்துள்ளன. அதில் சர்வதேச பாடசாலை பரீட்சை வினாத்தாள்கள் இருந்தன. அந்தக் கோப்பில் அவளது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அவளது அடையாளத்தைக் கண்டறிய சர்வதேசப் பாடசாலை அதிகாரிகளை பொலிஸார் தொடர்புகொண்டனர். அதுமட்டுமின்றி மாணவியின் தந்தையிடமிருந்து கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.
அந்த அழைப்புக்கு.பொலிஸ் அதிகாரியொருவர் பதிலளித்துள்ளார். அப்போது நேரம் சுமார் மாலை 4.55 மணியிருக்கும் மகளின் தொலைபேசியில் ஆணொருவரின் குரல் பதிலளிப்பதைக் கண்டு பதற்றமடைந்துள்ளார் தந்தை. மகள் பெரும் ஆபத்தில் உள்ளதாகவும் விரைவில் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
அதன்படியே அவர் மருதானை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இப்போதே தனது மகள் தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.
பை மற்றும் பாதணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளரான மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் தொடர்பில் யாரையும் நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. மகள் சுறுசுறுப்பாக படித்துக்கொண்டிருந்ததாகவும் மன அழுத்தத்தில் இருந்ததற்கான எந்த அறிகுறியையும் வெளிகாட்டவில்லையெனவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்கிறார். இரண்டாம் வருட மருத்துவபீட மாணவி, உயிரிழந்த மாணவி குடும்பத்தில் இளையவர். லண்டன் பொதுத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பாடசாலைக்கு செல்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளார், ஆனால் மாணவி அதற்கான காரணத்தை பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் நண்பர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
கொம்பனி வீதி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் இறப்பதற்கு முன்னர் அவளுடன் பேசிய பின்னரே இவ்வுலகிலிருந்து விடைபெற்றுள்ளதாகவும் தெரிவருகின்றது.
அதுமட்டுமின்றி மாணவி நவம்பர் 2022 முதல் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது இரு நண்பர்களின் மரணத்தினால் ஆழ்ந்த வேதனையில் இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார். மகள் பாடசாலைக்குச் செல்லும்போது, தேவையில்லாமல் பணம் கொடுப்பதில்லை என்றும். அவள் பயன்படுத்தும் மொபைல் போன், கம்பியூட்டர் என்பவற்றை அடிக்கடி தான் கண்காணித்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் இறந்து 24 மணித்தியாலத்துக்குள் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்து. இறுதிக் கிரியைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புடன் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. குறைந்தபட்சம் அவரது பாடசாலை நண்பர்களுக்கு கூட இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாடசாலை மாணவர்கள் உயரமான இடங்களில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பது இது முதல் தடவையல்ல என புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் பிரபல கல்லூரி மாணவரொருவர் 2023 ஆம் ஆண்டு வீடியோ கேம்களுக்கு அடிமையாகி பாடசாலையின் மூன்று மாடி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார், ஆனால் அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார். இதுதொடர்பில் தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டாரா தெரிவிக்கையில்,
தற்கொலை என்பது ஒரு செயல். அப்படி ஒரு யோசனை வரும் ஒருவர் முதலில் அதைப் பற்றி திட்டமிட்டு பிறகு செயற்படுத்துகிறார். விரக்தி, மனச்சோர்வு போன்ற சூழ்நிலைகள் ஒருவரை வாழும் ஆசையை இழக்கச் செய்யும். மேலும் மது, போதைப்பொருள் போன்ற பழக்கங்களும் தற்கொலைப் போக்கை அதிகரிக்கும். சிலருடைய ஆளுமைப் பண்புகள், அதாவது ஒருவரிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை எதிர்மறையாக இருந்தால், பிரச்சினைகள் ஏற்படும்போது உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கலாம்.
‘நான் சோர்வாக இருக்கிறேன், நான் இறந்துவிடுவேன், வாழ விரும்பவில்லை” என்று யாராவது இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால், வழக்கமான தோற்றம் மாறிவிட்டால், அவர்கள் விரக்தியடைந்து மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்று நினைக்கலாம்.
குறிப்பாக குழந்தைகள் விடயத்தில் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும். குழந்தை பேசும் விதம் மற்றும் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாகவிருந்தால், நீங்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும். சில குழந்தைகள் எதுவும் பேச மாட்டார்கள். குறைந்தபட்சம் என்ன கேட்டாலும் பதில் சொல்வதில்லை. விரும்பிய காரியங்களைக் கூட செய்யாமல் ஒதுங்கி உட்கார்ந்திருந்தால், மனச்சோர்வடைந்தால், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பற்றி யோசிக்காமல் அசுத்தமாகவும் அழுக்காகவும் இருந்தால், அது ஒரு தீவிரமான நிலை. குழந்தையில் இதுபோன்ற நடத்தையை நீங்கள் கண்டால், நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். ஒரு சிறப்பு மனநல மருத்துவரைப் பார்க்குமாறு அந்த மருத்துவர் பரிந்துரைத்தால், உடனடியாக அந்த ஆலோசனையைப் பின்பற்றுங்கள். தேசிய மனநல மருத்துவ மனையின் 24 மணி நேர 1926க்கு அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறலாம். அங்கு இரகசியம் பேணப்படும்.
குறிப்பாக 12- –15 வயது குழந்தைகள் மற்றும் 20- – 25 இளைஞர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகமாக காணப்படுகின்றது.
மேலும், ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்தவர்களிடம் தொடர்ந்து கவனம் தேவை. ஒரு நபர் வாழ்க்கையை வாழ முடியாது எனச் சோர்வடையும் போது அதை உணர்ந்து உதவுவது நம் அனைவரின் சமூகப் பொறுப்பாகும்.
2022 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதிலிருந்து அக்டோபர் 6, 2024 வரை தாமரை கோபுரத்தைப் பார்க்க 2,251,868 உள்ளூர் பார்வையாளர்களும் 93,958 வெளிநாட்டுப் பார்வையாளர்களும் வந்துள்ளனர்.
விபத்துக்களை தவிர்க்கும் வகையில் கட்டடத்தின் கண்காணிப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சர்வதேச தரத்திற்கமைவாக பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும் மாணவியொருவர் கண்காணிப்பு அறையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வசந்தா அருள்ரட்ணம்