இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டத்தின் கவரைப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்வதற்காக 05 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.
கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் தரித்து நின்ற சரக்கு ரயிலுடன் மற்றுமொரு கடுகதி ரயில் மோதி விபத்து சம்பவித்தது. கர்நாடக மாநிலத்தின் மைசூரிலிருந்து பிஹார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் புறப்பட்ட பாக்மதி கடுகதி ரயில், திடீரென்று அங்கு தரித்து நின்ற சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது அந்த ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டதுடன், ரயில் பெட்டியின் அடியில் தீ பிடித்தது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ரயிலில் பயணித்த ஏனைய பயணிகளான 1,800 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் 18 ரயில் போக்குவரத்துகள் இரத்துச் செய்யப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட குழுவினரும் பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது