முஸ்லிம் மக்கள் மத்தியில் பல்வேறு அரசியல் தலைமைகள் உள்ளூராட்சி மன்றத்திலிருந்து பாராளுமன்றம் வரைக்கும் அங்கம்வகித்து செயற்பட்டு வருகின்றபோதிலும் அவ்வப்போது, ஆங்காங்கே அபிவிருத்திகள் நடைபெற்றாலும், இன்னும் அம் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலுள்ளதாக, மட்டு. மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சீரேஷ்ட அரசியல்வாதியும் அக்கூட்டமைப்பின் தலைவருமான பஸீர் சேகுதாவுத் தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்தார். அந்த நேர்காணலின் முழுவிபரம் வருமாறு :
கேள்வி : தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் சுயேச்சை குழுவாக களமிறங்கி பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றீர்களா?
பதில் : எந்த சுயேச்சைக் குழுவுக்காவது, மக்கள் மத்தியில் செல்வாக்கும், நற்பெயருமுள்ள வேட்பாளர்கள் அமைந்திருந்தால் வெற்றிபெற வாய்ப்புகள் உண்டு.
கேள்வி : தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரிந்து சென்று, தனித்தனியாக தேர்தலில் களமிறங்குவதனால் கட்சிகளின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும் என நீங்கள் நினைக்கின்றீர்களா? இது ஏனைய கட்சிகளுக்கு சாதகமாக அமையும் எனக் கருதலாமா?
பதில் : இனமாக, சமூகமாக, கட்சியாக பிரிந்துச்சென்று தேர்தலில் மாத்திரமல்ல, எந்தவொரு பொது வேலைத் திட்டத்திலும் களம் இறங்குவது எவ்வித சாதகமான முடிவையும் தரப்போவதில்லை.
கட்சிகளின் இருப்பு மாத்திரமல்ல, சமூக, அரசியல் இருப்பும் மக்கள் குரலும் நசுக்கப்படும். இது நிச்சயமாக தேசிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.
கேள்வி : தென்னிலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக அரசியல் ரீதியில் தெளிவடைந்திருப்பதாக கருதப்படுகின்றது. இந்நிலையில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பிரிந்துசென்று தனித்தனியாக தேர்தலை சந்திப்பதால் அவர்கள் மத்தியில் கிடைக்கப்பெறும் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாக களம் இறங்குவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றதா?
பதில் : அண்மையில் ஏறாவூர் பாடசாலையொன்றில் நிகழ்ந்த இமாம் கல்வி பவுண்டேஷன் நடத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அனைத்து முஸ்லிம், இலங்கை தமிழ், மலையக தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குமாறு பகிரங்கமாக நான் அறைகூவல் விடுத்திருந்தேன். இவ்வாறு நடந்திருந்தால் தேசிய பட்டியல் உட்பட ஆசனங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டிருக்கும். அது மாத்திரமன்றி இந்த கூட்டு, பாராளுமன்றத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மிளிர்ந்திருக்கும். நான், ஈரோஸ் இயக்கத்திலும், உறுப்பினராக இருந்தபோது கைதுசெய்யப்பட்டு நான்காம் மாடி வரையில் கொண்டுச்செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.
வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் மத்தியில் பல திட்டங்களை செய்துள்ளேன். இந்த அனுபவத்தினாலேயே மேற்கூறிய கருத்தை பகிரங்கமாக அறிவித்திருந்தேன். தற்போது சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
கேள்வி : நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி அதற்கு ஆதரவளிக்குமா? புதிய அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கான எண்ணம் உள்ளதா?
பதில் : பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மைபெற்று ஆட்சிமைக்குமாயின், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் உச்சபீடம் கூடி எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே நான் செயற்படுவேன்.
கேள்வி : தென்னிலங்கை அரசியலில் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதிலிருந்து விலகி இருக்கின்றார்கள். மாறாக தற்போது இளைஞர் யுவதிகளுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றார்கள். இது பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில் : தென்னிலங்கை சிரேஷ்ட அரசியல்வாதிகள் இம்முறை களமிறங்காமல் இருப்பது அக்கட்சிகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளின் அச்சத்தினால் ஆகும். முன்னைய காலங்களில் பிள்ளைகள் தாய், தந்தையர்களின் சொற்களுக்கு செவிசாய்த்து செயற்பட்டார்கள். ஆனால், தற்போதைய இளைஞர் யுவதிகளின் சொற்களுக்கு பெற்றோர்கள் செவிசாய்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு, தற்கால சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிப்பு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆதிக்கம், வாசிப்பில் ஈடுபாடுயின்மையே காரணமாக அமைந்துள்ளது.
கேள்வி : நாட்டை தற்போது பொறுப்பேற்றிருக்கின்ற புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் : புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது கட்சியை திறம்பட நடத்திக் காட்டியுள்ளார். பிறப்பில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர், கிராமிய பாடசாலையில் படித்து விஞ்ஞான பீடத்தில் பல்கலைக்கழக கற்கையை பூர்த்தி செய்தவர், கடின உழைப்பாளி, மக்கள் மத்தியில் வேலைத்திட்டங்களை முன்னிறுத்தி நடத்தியவர். ஆகவே, அவர் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என நம்புகிறேன். காலம் பதில் சொல்லும்.
கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால், இவ்விரு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதனால் அடிமட்ட மக்கள் மத்தியில் இன ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை நிலை நிறுத்துவதற்கு உங்களிடம் ஏதேனும் ஆலோசனை உள்ளதா??
பதில் : மட்டக்களப்பில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் காலங்காலமாக மொழி, தொழில், அடிப்படையில் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இவ்விரு இனங்களையும் பிளவுபடுத்துவதற்கான அரசியலை 80 களிலிருந்து செய்துவருவதும் வாக்குகளைப்பெற்று பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு பிரிவினைகளை தோற்றுவித்ததும் உண்மைதான்.
எனினும், இந்த அரசியல்வாதிகளால் நிரந்தர பகைமையை ஏற்படுத்த ஒரு காலமும் முடியாது. இவ்விரு இனங்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதாயின் கட்சி பேதமற்ற கோஷம் முன்வைக்கப்பட வேண்டும்.
மதத்தால் இந்துவானாலும், மாண்பில் முஸ்லிம் என்றாலும், வேதம் பயிலும் கிறிஸ்தவரெயென்றாலும் ஈழத்தவர், ஈழத்தவரே! அவர்கள் எங்கிருந்தாலும் நம்மவரே என்று ஈரோஸ் இயக்கத்தை தோற்றுவித்த மறைந்த தோழர் இரத்தின சபாபதி எழுதிய “ஈழவர் இடர் தீர்” என்ற புத்தகத்தில் கூறியிருந்த கோட்பாடு மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் என்ற அடையாளத்துக்கு அப்பால் நாம் ஈழவர் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
நேர்கண்டவர் : வ.சக்திவேல்