வானம் கொட்டட்டும்’, ‘படைவீரன்’ ஆகிய கவனத்துக்குரிய படங்களைத் தந்தவர் தனா. அடிப்படையில் சிறுகதை எழுத்தாளரான இவர், எழுதி, இயக்கி, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹிட்லர்’ திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
மணிரத்னத்தின் உதவியாளர் நீங்கள். உங்கள் திரைப்படங்களில் உள்ள கிராமம் மணிரத்னம் உருவாக்கும் கிராம வெளியிலிருந்து முற்றிலும் வேறொன்றாக இருக்கிறது.. இயக்குநர் மணி ரத்தினத்திடமிருந்து சினிமா என்கிற கலை வடிவத்தைத்தான் கற்றுக்கொள்ள முடியும். அவருடைய படைப்பு மனநிலையை காப்பி அடிக்க முடியாது. திரைக்கு எப்படிக் கதை சொல்ல வேண்டும், அதற்கு எப்படித் திரைக்கதை அமைக்க வேண்டும் என்பது உள்பட சினிமா பற்றி அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். ஆனால், எனது படம் என்பது என்னுடைய படைப்பு மன நிலையாகத்தானே இருக்க முடியும்.
உங்களுடைய ‘படை வீரன்’ தலித் பிரச்சினைகளைப் பேசிய படம். அது விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற அளவுக்கு வரவேற்பு பெறாமல் போய்விட்டதே. இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் இருவரும் தங்கள் வாழ்க்கையின் வலிகளைச் சொந்த அனுபவங்களிலிருந்து பதிவு செய்தார்கள். அதேபோல் தான் நானும் எனது வாழ்க்கையின் வலியை அதில் பதிவு செய்தேன். ஆனால் அது தெற்கத்தித் தமிழ்நாட்டின் பதிவு. தலித் பிரச்சினையை இந்தப் பக்கம் நின்று பேசிய படம் அது. அந்தப் படத்தைப் பார்த்த தனுஷ் மிகவும் பாராட்டினார். மக்களைச் சென்றடைந்த ஒரு ஹீரோ இல்லாதது, இன்னும் பல காரணங்களால் கவனம் பெறாமல் போய்விட்டது.
‘வானம் கொட்டட்டும்’, ‘படைவீரன்’, ‘ஹிட்லர்’ மூன்றும் மூன்று விதமான படங்கள். இது நீங்கள் திட்டமிட்டே செய்ததா? – அடிப்படை யில் நான் ஒரு பார்வையாளர் – அப்படித்தான் சினிமாவைப் பார்க்கிறேன். எனக்குக் கமல் படமும் பிடிக்கும், ரஜினிகாந்த் படமும் பிடிக்கும். ஒரே மாதிரியான படங்கள் எடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு சிறுகதை ஆசிரியராக சினிமாவை எப்படிப் பார்க்கிறீர்கள்? – சிறுகதை ஆசிரியராக அதனுடைய கடைசிப் பாராவில்தான் அந்தக் கதை இருப்பதாக நான் நம்புகிறேன். இந்தப் பயிற்சி எனக்கு சினிமாவை அணுகுவதற்கு உதவியாக இருந்தது. சினிமா என்கிற வடிவத்தை ஒரு சிறுகதையைப் போலவே அணுகுகிறேன். சினிமாவுக்கான திரைக்கதையை அமைப்பதில் சிறுகதை எழுதிய பயிற்சி எனக்குக் கை கொடுத்தது. அதைப்போல் சிறு கதையும் நாவலும் வாசகரிடம் பெற முடியாத ஓர் இடத்தை சினிமாவால் வெகு எளிதாகப் பெற முடியும் என்பதையும் நான் உணர்ந்தேன்.
ஹிட்லர் ஓர் அரசியல் த்ரில்லர் படமா? – ஹிட்லர் படம் ஒரு கல்யாண விருந்து போன்றது. இதை ஒரு நல்ல த்ரில்லர் படமாக உணர முடியும். இதில் ஒரு நல்ல காதல் கதையைப் பார்க்கலாம்.