சமூகத்துக்கு விழிப்புணர்வு தரும் படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்கிற கொள்கை கொண்டவர் ரேவதி. அதே நோக்கம் கொண்ட படங்களுக்கு உதவவும் தயங்க மாட்டார்.
‘டபுள் டக்கர்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் தீரஜ். மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில், அவர் அடுத்து நடித்துள்ள படம் ‘பிள்ளையார் சுழி’. அதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள ரேவதி, இப்படத்தில் நடித்தற்காக ‘ஒரு ரூபாய்கூட ஊதியம் வாங்கமாட்டேன்; இப்படத்தில் நடிப்பது என் கடமை’ எனக் கூறி மறுத்துள்ளார். தீரஜ், அபிநயா, மைம் கோபி உள்ளிட்ட பலருடன் 7 வயது ஆட்டிசக் குழந்தையான உன்னி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். படம் குறித்து தீரஜ் கூறும்போது, “நான் இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறேன்.
நான் சினிமாவில் நடிக்க வந்தது பணம் சம்பாதிக்க அல்ல. மாறாக நல்ல கதைகளில் நானும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு கலைஞனாகப் பெயர் பெற விரும்புகிறேன்.
இன்றைக்கு மாற்றுப் பாலினத்தவர் பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மகத்தானது. ஆனால் ஆட்டிசக் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு அதுபோன்ற குழந்தைகளைப் பாதுகாத்து அன்பு செலுத்தும் பெற்றோர்களுக்கு இல்லை, பொதுச் சமூகத்துக்கும் இல்லை. அதற்கு ‘பிள்ளையார் சுழி’ போடும் படைப்பு இது.
இப்படத்தில் எனது மகனை அடிப்பதுபோல் காட்சி. நான் முடியாது என்று இயக்குநரிடம் மறுத்தேன். ஆனால், உண்மையாக அடிக்க வேண்டும் என்று இயக்குநர் என்னை வற்புறுத்தினார். குழந்தையை அடித்துவிட்டு நான் பல நாள் அழுதேன். ரேவதியின் பங்களிப்பு இந்தப் படத்தை உயர்த்திவிட்டது” என்றார்.