ஸ்பெயினின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான கலங்கரை விளக்கங்களில் ஒன்று தான் ஹெர்குலஸ் கோபுரம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்த கோபுரம் மாலுமிகளுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது.
கி.பி 2ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களால் கட்டப்பட்ட ஹெர்குலஸ் கோபுரம், பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெக்ஸாண்டிரியாவின் கலங்கரை விளக்கத்தால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. ரோமானிய பொறியியலாளர் கயஸ் செவியஸ் லூபஸ் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோபுரம், ஏறத்தாழ 55 மீற்றர் உயரத்தில் எழும்பி நிற்கிறது.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஸ்பெயின் பொறியியலாளர் யூஸ்டாகியோ கியானினியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும், அதன் அடிப்படை வடிவமைப்பு இன்றும் அதேபோல் உள்ளது.
ஹெர்குலஸ் கோபுரம் வெறும் கலங்கரை விளக்கமல்ல. இது கடல்சார் வரலாறு மற்றும் ரோமானிய பொறியியல் வல்லமையின் சின்னமாகும்.
2009ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இந்த கோபுரம், தனது வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவத்திற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.