மலையகத்தின் மாற்றத்திற்கான வித்து கல்வி என்பதனை நன்குணர்ந்து அந்த துறையில் பல்வேறு பரிணாமங்களில் தனது பெயரையும் புகழையும் நிலைநாட்டி 23.09.2024 அன்று வாண்மை மிக்க ஒரு மனிதர் முன்னாள் ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஓய்வு பெற்றார்.
இவர் முதன் முதலில் 1988ஆம் ஆண்டு நோர்வூட் பாடசாலையில் ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்டார்.
நிவ்வெளி பாடசாலையில் ஆரம்ப பிரிவு ஆசிரியராக கடமையேற்று மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் தனது ஆசிரியர் பயிற்சியினை 1990ஆம் ஆண்டு நிறைவு செய்து கொண்ட இவர் 1992ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தினை ஒரே காலப்பகுதியில் பெற்றுக்கொண்டார்.
பயிற்சியினை தொடர்ந்து புளியாவத்தை தற்போது ஹொன்சி கல்லூரி என அழைக்கப்படும் பாடசாலையின் கணித ஆசிரியராக கடமையேற்றுக்கொண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் 1994ஆம் ஆண்டு பட்டத்துக்குப் பின்னரான் டிப்ளோமா பட்டத்தையும் (PGD) பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு பல்வேறு ஆளுமையினை பெற்றுக்கொண்ட இவர் 1996ஆம் ஆண்டு கொட்டகலை யதன்சைட் என்று அழைக்கப்பட்ட அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளராக கடமையேற்றுக் கொண்டார்.
ஓய்வின்றி கற்ற கல்வி இன்று விருட்சமாய் நிற்கிறது என்றால் அது மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இவர் இலங்கையின் கல்வி நிர்வாக சேவைக்குள் 2000ஆம் ஆண்டு புகுந்தார்.
2009ஆம் ஆண்டு கொத்மலை கல்வி வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளராக கடமையேற்றார். அந்தக் கல்வி வலயத்தில் 28 சதவீதமாக காணப்பட்ட கல்வி பெறுபேறுகள் 41.5 சதவீதமாக மாற்றம் பெற்றன.
இந்நிலையில் 2014 ஆண்டு கண்டி வலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற பின் கண்டி வலயம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெறுகின்றது.
ஆசிரியர்களின் மனோ நிலைகளை அறிந்து அதற்கேற்ப செயற்திட்டங்களை வகுத்து கல்வியில் புரட்சிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு காரணமாகினார். இதனால் ஹட்டன் கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் ஆகியவற்றின் பெறுபேறுகள் என்றுமில்லாத அளவுக்கு உயர்வடைந்தன .
இவ்வாறு தன்னையும் சார்ந்தவர்களையும் மாற்றத்திற்கு உட்படுத்தி அழியாத வரலாற்றினை பதிவு செய்து ஓய்வுபெறுகிறார். அவரது ஓய்வுக் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை பகிர்கிறது ஹட்டன் கல்வி சமூகம்.
மலைவாஞ்ஞன்