மலையக மக்களின் வரலாறானது 200 வருடங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. கடந்த பல வருடங்களாக இம்மக்கள் பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றத் தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல்கள் போன்ற அனைத்து தேர்தல்களையும் சந்தித்துள்ளனர். மேற்கூறிய அனைத்து தேர்தல்களிலும் தங்களுடைய வாக்குரிமையை பல்வேறு கட்சிகளுக்கும், சின்னங்களுக்கும், தனி நபர்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும், அளித்துள்ளனர். இதனால் இம்மக்கள் பெற்றுக் கொண்ட நன்மைகள் பல இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
குறிப்பாக, பிரஜா உரிமையை பெற்றுக் கொண்டமை, ஒரு சில தோட்ட மக்கள் காணி உரிமையையும், வீட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டனர். தோட்டங்களுக்கான கொங்கிறீட் பாதைகள், மின்சார வசதிகள், நீர் வசதி, போக்குவரத்து வசதி, உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள், பாடசாலைகள் அபிவிருத்தி, பாடசாலைகளுக்கான கட்டடங்கள், ஆளணியினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றை பெற்றுக் கொண்டமை, மேலும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு, விளையாட்டு உபகரணங்கள், ஆலயங்களுக்கான உதவிகள், விளையாட்டு கழகங்களுக்கான உதவிகள், வைத்தியசாலைகளுக்கான வசதிகள் போன்றவற்றை பெற்றுக் கொண்டமை, தோட்ட மக்களுக்கான சமூர்த்தி கொடுப்பனவு, அஸ்வெசும கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்கான புலமைப் பரிசில் போன்றவற்றை பெற்றுக் கொடுத்தமை, சுய தொழில் வாய்ப்புக்கான உதவிகளையும், தொழிற் பயிற்சிகளையும் பெற்றுக் கொடுத்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம், இருப்பினும் மலையக மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் அநேகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் சொந்த முகவரி இல்லாத மக்களாக வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகம் என்றால் அது மலையக மக்கள் சமூகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலானது, மலையக அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், தொழிற் சங்க அரசியலுக்கும் ஓர் பாரிய சவாலாக இருக்கப் போகின்றது என்பதில் ஐயமில்லை. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலானது, அரசியல், சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக பல்வேறு விடயங்களை சுட்டிக் காட்டியிருப்பதை அவதானிக்கலாம். நாட்டு மக்களின் மனநிலையை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் மலையக அரசியல் இருக்கின்றது.
எனவே மலையக மக்களினதும், பெருந்தோட்ட மக்களினதும், இருப்பு, சமூக பாதுகாப்பு, இனத்துவ அடையாளங்கள், கலை கலாசார பாதுகாப்பு, போன்றவற்றை கருத்தில் கொண்டு இத் தேர்தலை சந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலைப் போல் இம்முறை தேர்தலானது அமையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இம்முறை பாராளுமன்றத் தேர்தலானது பல சவால்களை கொண்டிருக்கப் போகின்றது என்பது மட்டும் உண்மையாகும். அதாவது பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் கடும் போட்டி சகல மட்டங்களிலும் காணப்படும்.
பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, மிகவும் சாதுரியமாகவும், புத்திசாலித்தனமாகவும், தீர்க்கத்தரிசனமாகவும், அரசியல் தந்திரோபாயங்களுடனும், தூர நோக்கோடும் சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மலையக மக்களின் எதிர்கால வாழ்க்கைத் தர முன்னேற்றம் மேம்பாடு, வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மலையக மக்களின் சமூக பொருளாதார அரசியல் கலாசார செயற்திட்டங்களை செயற்படுத்தக் கூடியவாறு இத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
மலையக அரசில் கட்சிகளால் வழங்கப்பட்ட கடந்த கால வாக்குறுதிகள் அனைத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே தொடர்ந்து அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளுக்கு மட்டும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. கடந்த கால தேர்தல்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் 2024 என்பது அரசியல் கட்சிகளுக்கும், தொழிற் சங்கங்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் முக்கிய சவால் நிறைந்தது. அதாவது மாவட்டங்களில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, கட்சிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு சவால்களும், பிரச்சினைகளும் இருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக மக்களின் செல்வாக்கைப் பெற்றவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.
இலஞ்சம், ஊழல், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால் மக்கள் அவர்களை இலகுவில் நிராகரித்து விடுவதற்கான வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக அதிகமாக இருக்கும். கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடமாக அது உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டுப் பற்றுடையவர்கள், நேர்மையானவர்கள், மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்கள், சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்பக் கூடிய சிந்தனையுடையவர்களையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் போது ஒரு முறைக்கு, பல முறை சிந்தித்து செயலாற்ற வேண்டும். இது காலத்தின் தேவையாகும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த காலம் மலையேறி விட்டது.
இன்றைய இளைய சமூகத்தின் மனநிலையை அறிந்து செயற்பட வேண்டியதுடன், மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும். எதிர்கால வேலைத்திட்டங்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் போட்டி போடும் வேட்பாளர்கள் கற்றவர்களாக இருக்க வேண்டும். மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்மொழிவுகளை முன் வைக்க வேண்டும். இனிவரும் காலங்களிலும் பணத்துக்கும், மதுவுக்கும், சோற்றுப் பார்சலுக்கும் மக்கள் வாக்களிக்க தயாராக இருப்பார்களா என்பது சந்தேகத்துக்குரியதே.
நாட்டின் நிகழ்கால அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அடிமட்ட மக்களிடையே தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களைக் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக மலையத்தில் கற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
இரா. சிவலிங்கம்