காஸா மீதான யுத்தத்தை கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி ஆரம்பித்த இஸ்ரேல், லெபனான் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தெற்கு லெபனான் மீது தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளது.
அத்தோடு கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி யெமனின் ஹுதைதா துறைமுகத்தின் மீது மீண்டும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல், சிரியா தலைநகர் டமஸ்கஸ் உள்ளிட்ட நகர்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் ஈரான் திடீரென பிளாஸ்ரிக் மற்றும் ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளைக் கொண்டு கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டது. இஸ்ரேல் மீது குண்டுமழை பொழியப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ‘உண்மையான வாக்குறுதி நடவடிக்கை 2’ எனப் பெயரிட்டு இஸ்ரேல் மீது இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட இத்தாக்குதலுக்கு ஈரான், 200 பிளாஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பு அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயீல் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உச்சகட்ட யுத்தப் பரபரப்பு ஏற்பட்ட காலத்தில் கூட பொறுமை காத்த ஈரான், திடீரென இஸ்ரேல் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸரல்லா, ஈரானின் இஸ்லாமிய குடியரசு படையின் பிரதித் தளபதி அப்பாஸ் நில்ஃபோரௌஷன் உட்பட 10 இற்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் மூலம் கடந்த 27 ஆம் திகதி மாலையில் கொல்லப்பட்டனர். அக்காலப்பகுதியில் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடும் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது.
இவ்வருடம் முற்பகுதி முதல் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் முக்கியஸ்தர்களை இஸ்ரேல் துல்லிய தாக்குதல்கள் மூலம் சிரியாவில் கொன்றொழிக்க ஆரம்பித்தது. அச்சமயங்களில் ஈரான் மௌனம் காத்தது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈரான் இஸ்லாமிய குடியரசுப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி முஹம்மத் ரிசா சாஹிடி உட்பட முக்கிய தளபதிகள் அடங்கலாக 16 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு எதிராக வெகுண்டெழுந்த ஈரான், 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள், 120 பிளாஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க முற்பட்ட போதிலும், அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலை அமைதிப்படுத்தியது.
அதன் பின்னர், ஜனாதிபதி மசூத் பெசஸ்கியானின் பதவியேற்பு வைபவத்தில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த இஸ்மாயீல் ஹனியே கடந்த ஜூலை 31 ஆம் திகதி துல்லிய தாக்குதல் மூலம் தெஹ்ரானில் கொல்லப்பட்டார். அதற்கு இஸ்ரேல் உரிமை கோராத போதிலும், இஸ்ரேலை குற்றம் சாட்டிய ஈரான், பதிலடி கொடுப்பதற்கான முஸ்தீபுகளை முன்னெடுத்தது. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா யுத்த விமானங்களையும் போர்க்கப்பல்களையும், விமானந்தாங்கிக் கப்பல்களையும் மத்திய கிழக்குக்கும் மத்திய தரைக்கடலுக்கும் அவசர அவசரமாக நகர்த்தியது.
இதே சூழலில் ஈரானின் ஜனாதிபதி மசூட் பெசஸ்கியானுடன் தொடர்பு கொண்ட மேற்கு நாடுகளும் அமெரிக்காவும், ‘ஈரானின் இறையாண்மையை மீறி ஈரானின் விருந்தாளி ஹனியே கொல்லப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் மீது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். நாம் காஸாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதியைக் கொண்டு வருகின்றோம்’ என்று உறுதியளித்துள்ளன. அதனால் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதை ஈரான் தாமதப்படுத்தியுள்ளது. இருப்பினும் இரு மாதங்கள் கடந்தும் காஸாவில் யுத்தநிறுத்தம் கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அசோசியேட்டட் பிரஸுக்கு கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி, ‘இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு ஈரான் பதிலளிக்காதிருப்பதற்கு ஈடாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய தலைவர்களும் அளித்த உறுதிமொழிகள் அப்பட்டமான பொய்’ என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஈரானில் கடும் பதற்றம் ஏற்பட்டிருந்த சூழலில் ஈரானின் பிரதித் தளபதி அப்பாஸ் நில்ஃபோரௌஷன், ஹஸன் நஸரல்லாவுடன் சேர்த்துக் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு, ஈரான் மக்களுக்கு கடந்த 30 ஆம் திகதி ஆற்றிய உரையில், ‘நாட்டின் அடக்குமுறை இஸ்லாமிய ஆட்சியில் இருந்து ஈரானிய மக்கள் விரைவில் விடுதலை பெறுவார்கள். ஒவ்வொரு நாளும், உங்களை அடிபணிய வைக்கும் ஒரு ஆட்சியை நீங்கள் காண்கிறீர்கள், லெபனானைப் பாதுகாப்பது, காஸாவைப் பாதுகாப்பது பற்றி உமிழும் பேச்சுக்கள், ஒவ்வொரு நாளும், அந்த ஆட்சி நமது பிராந்தியத்தை இன்னும் இன்னும் இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது. பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஈரானின் பயங்கரவாதப் பினாமி குழுக்களின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ஒழித்துவிட்டது. இஸ்லாமிய ஆட்சிக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால், அது உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்து பில்லியன்கணக்கான டொலர்களை வீணடிப்பதை நிறுத்திவிடும், அதற்கு பதிலாக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரை ஆற்றப்பட்ட பின்னரான 24 மணித்தியாலயங்களுக்குள் இஸ்ரேல் மீது ஈரான் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதென சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மொசாட் தலைமையகம், நவட்டிம் விமானத் தளம் உள்ளிட்ட முக்கிய படைத்தளங்களை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதால், எந்தவொரு சிவிலியனும் பாதிக்கப்படவில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. அதனை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல்களால் பல விமானதளங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அலுவலக கட்டடங்கள் மற்றும் பிற பராமரிப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன. ஆனால் இத்தாக்குதலில் எந்த விமானமும் சேதமடையவில்லை என்று இஸ்ரேலிய இராணுவத்தை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர், “ஈரான் கடும் தவறிழைத்து விட்டது. அதற்கு உரிய விலை கொடுக்கும்’ என்றார். அதற்கேற்ப தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முஸ்தீபுகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஈரானிய படைத்தளபதி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயற்சிக்குமாயின் இதைவிட மோசமான தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றுள்ளார்.
இவ்வாறான சூழலில் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமெனெய் தெஹ்ரானில் உரையாற்றும் போது, இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும்தான் காரணம். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய் கூறுகின்றனர். அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும்” என்றுள்ளார்.
இதேவேளை ஈரானின் தாக்குதலை ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறினாரெனக் குறிப்பிட்டு இஸ்ரேல் அவருக்குத் தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் முன்னெடுத்த ஏவுகணைத் தாக்குதலை ஈரானிய மக்கள் மாத்திரமல்லாமல் ஈராக், லெபனான், பலஸ்தீன், ஜோர்தான் மக்களும் கொண்டாடியுள்ளனர்.
லெபனானில் கடந்த ஒக்டோபர் 08 முதல் இவ்வருடம் ஒக்டோபர் வரையும் 1640 பேர் கொல்லப்பட்டுளளனர். அவர்களில் 104 பேர் சிறுவர்களாவர். 194 பேர் பெண்களாவர். 8408 பேர் காயமடைந்துள்ளனர். பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தெற்கு லெபனான் மீதான தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து சிவிலியன்கள் இழப்பும் பாதிப்புக்களும் பெரிதும் அதிகரித்துள்ளன. அங்குள்ள 25 கிராமங்களில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸா மீது இஸ்ரேல் ஆரம்பித்த யுத்தம் நாளையுடன் (07.10.2024) ஒரு வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் காஸாவுக்கு அப்பால் லெபனான், யெமன், சிரியா, ஈரான் வரை யுத்தம் விரிவடைந்துள்ளது. இது மூன்றாம் உலக யுத்தத்திற்கு வித்திடுமோ? அல்லது பிராந்திய யுத்தத்திற்கு வழிவகுக்குமோ? என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
மர்லின் மரிக்கார்