மூன்று தசாப்த காலமாக பத்திரிகைத்துறையிலும் ஆய்வுத்துறையிலும் இயங்கிவரும் சரவணன், தற்போது நோர்வேயில் வசிக்கிறார். அங்கிருந்து அரசியல், வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் பத்து வரலாற்று நூல்களை இதுவரை எழுதியுள்ளர். அவை மிகவும் முக்கியமான நூல்கள். அந்நூல்களில் சில சாகித்திய விருதுகளையும், இந்திய அரசின் சிறந்த நூலுக்கான பரிசையும் பெற்றுள்ளன. தேசியம், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், மலையகம், பேரினவாதம் குறித்த விடயங்களில் அவர் தொடர்ந்தும் எழுதி வருகிறார். அந்த வகையில் தற்போது இலங்கையின் மகாவம்சத்தின் 06ஆவது தொகுதியை முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது குமரன் பதிப்பகத்தால் அச்சேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த “மகாவம்சம்” தொகுதியானது 800 பக்கங்களுக்கும் மேற்பட்டதாகும். மகாவம்சத்தின் ஆறாவது தொகுதி தமிழில் வெளிவருவதன் முக்கியத்துவம், அதன் வரலாற்று வகிபாகம் என்பன குறித்து தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள என். சரவணன் தினகரன் வார மஞ்சரிக்கென அளித்த பேட்டி………
கேள்வி: பத்திரிகை மற்றும் ஆய்வுத்துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள நீங்கள் மகாவம்சத்தை தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பதாக அறிய முடிகிறது. அது தொடர்பில் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?
பதில்: ஆம். நிச்சயமாக. உலகில் வேறெங்கும் ஒரு நாடு தனது சுயவரலாற்றை இந்தளவு நீண்ட காலத்துக்கு எழுதி வைத்ததில்லை. 2550 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய சுயவரலாற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் ஒரே நாடு என்கிற பெருமை இலங்கைக்கு உள்ளது. அந்தந்த ஆட்சியாளர்களின் ஆட்சிகாலப் பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்கள், சமூக, சமய, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகள், எதிர்கொண்ட இடர்கள் என பல விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிற்காலத்தில் தொல்லியல் ரீதியில் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான மூலாதாரங்கள் அதில் இருந்தன. அதுபோலவே அவ் வரலாற்றுக் கதைகளில் பல புனைவுகளும், ஐதீகக் கட்டுக்கதைகளும் கூட உள்ளன. அவ்வாறான தொல்லியல் சான்றுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படாத பல கட்டுக்கதைகளுக்கும் அதில் குறைவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: அப்படியென்றால் மகாவம்சத்தில் பல வரலாற்று குளறுபடிகளும் இருக்கிறது என்கிறீர்களா?
பதில்: ஆம். நிச்சயமாக உள்ளன. அதனை பல சிங்கள தொல்லியல் அறிஞர்கள் தமது ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கையின் வரலாற்றை சிங்கள பௌத்த புனித வரலாறாக கட்டியெழுப்பியதில் மகாவம்சத்துக்கு பெரும் பங்கு உண்டு.
கேள்வி: மகாவம்சத்தை மொழிபெயர்த்ததன் நோக்கம் குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்: மகாவம்சம் இதுவரை 6 தொகுதிகள் வெளிவந்துள்ளன. “மகாவம்சம்” மூல நூல் கி.மு. 483 தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது.
அதன்பின்னர் 2ஆவது தொகுதி கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான இலங்கை ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. இரண்டாம் தொகுதியை “சூளவம்சம்” என்றும் அழைக்கின்றனர். 1815 இல் இலங்கை முழுவதுமாக அந்நியர் வசமானது தொடக்கம் 1936 வரையான காலப்பகுதியை 3 ஆவது தொகுதி பதிவு செய்கிறது.
1936 – 1956 காலப்பகுதியை 4 வது தொகுதி என்றும், 1956 – 1977 வரை 5 வது தொகுதி என்றும், இறுதியாக 1978 – 2010 வரையான காலப்பகுதி 6 வது தொகுதி என்றும் அழைக்கிறோம்.இவற்றில் முதலாவது மகாவம்ச தொகுதி மாத்திரம் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்திருக்கிற போதும் அவை எதுவும் நிறைவு செய்யப்படவில்லை. பூரணப்படுத்தப்படாத தொகுதிகள் என்பதை மூலத்துடன் ஒப்பிடுகையில் காணலாம். இரண்டாவது தொகுதியை செங்கை ஆழியான் சாராம்சப்படுத்தி சிறு நூலொன்றையும் எழுதியிருக்கிறார். அதுவும் பரிபூரண தமிழாக்கம் இல்லை.
அப்படிப் பார்க்கையில் தற்போது என்னால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற 6ஆவது தொகுதியானது, உள்ளது உள்ளபடி அப்படியே வரலாற்றை தமிழுக்கு மொழிபெயர்த்த முதலாவது சந்தர்ப்பம் எனலாம்.
கலாசார திணைக்களம் இப்போதைக்கு இதனை நிறைவு செய்யாது என்பதை அவர்களின் மூலம் அறிந்துகொண்டதன் பின்னர் தான் அதன் முக்கியத்துவம் கருதி எனது ஆய்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இதனை நிறைவு செய்தேன்.
கேள்வி: அதுசரி மகாவம்சம் இன்றும் தொடர்ச்சியாக எழுதப்படுகின்ற ஆவணம் என்கிறீர்களா?
பதில்: ஆம்! நம்மில் பலர் மகாவசம் என்று அறிந்து வைத்திருப்பது மகாநாம தேரரால் எழுதப்பட்ட முதலாவது மகாவம்சத்தை மாத்திரம் தான். ஆனால் 1956க்குப் பின்னர் அப்பணியை அரசே பொறுப்பேற்று மேற்கொண்டு வருகிறது. மகாவம்ச ஆக்கக் குழு அத்திணைக்களத்தின் கீழ் தனியாக அமைக்கப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் அதன் ஆக்கப் பணியில் பங்கெடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் மொழியிலும் அரசு அக்கடமையை மேற்கொள்ளத் தவறி இருக்கிறது. இதுவரை எந்தத் தொகுதியின் மூலமும் இந்தத் தீவின் தமிழ் மக்கள் மகாவம்சத்தை முழுமையாக அறியும் வாய்ப்பு கிட்டியதில்லை. அதனை அரசு ஒரு போதும் செய்ததுமில்லை. ஆரம்பத்தில் பாளி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வந்த மரபு இருந்தது. இறுதி மூன்று தொகுதிகளும் சிங்கள மொழியில் எழுதி பாளிக்கு மொழிபெயர்க்கப்பட்டு ஏக காலத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
ஆங்கிலத்திலும் கூட மகாவம்சத்தின் சில தொகுதிகள் கிடைக்கின்றன.
ஆனால் தமிழில் அரசு மொழிபெயர்த்ததில்லை. தற்போது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன்.
ஆனால் அதுவும் முதலாவது தொகுதியை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும் அதற்கே இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும் என்பதையும் அறிந்த போதுதான் இத்தனையும் மொழிபெயர்க்க இன்னும் பல ஆண்டுகள் எடுக்கக் கூடும் என்கிற முடிவுக்கு வர முடிந்தது.
இந்நிலையிலேயே 6 ஆவது தொகுதியின் முக்கியத்துவம் கருதி அத்தொகுதியின் இரு பாகங்களையும் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டேன்.
கேள்வி: நீங்கள் ஆறாவது தொகுதியை குறிப்பாக ஏன் தெரிவு செய்தீர்கள்?
பதில்: அதுதான் இறுதியாக வெளிவந்த தொகுதி. அது 1978 – 2010 காலப்பகுதியைப் பற்றிப் பேசுகிறது. இன்னும் சொல்லப்போனால் இக்காலப்பகுதியானது சிவில் யுத்தம் தொடங்கி அது முடிந்த காலப்பகுதியாகும். முந்தைய தொகுதிகள் தான் தமிழுக்கு முழுமையாக வரவில்லை. ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் உள்ளடங்கிய இந்தத் தொகுதியில் தமிழ் மக்களின் அரசியல், பண்பாட்டு அபிலாசைகள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட மக்கள் அறிவது அவசியம். அதையும் அரசு செய்யாத நிலையில் அக்கடமையை நிறைவேற்றும் பொறுப்பு மீண்டும் எங்களைப் போன்றவர்களிடம் வந்து சேர்ந்து விடுகிறது.
கேள்வி: இந்த ஆறாவது தொகுதியை உருவாக்கிய நூறுக்கும் மேற்பட்டவர்களில் சிறுபான்மை சமூகங்களின் பங்கைப் பற்றி அறிவீர்களா?
பதில்: ஆம். ஒரேயொரு தமிழர் மாத்திரம் அதில் பங்கேற்றிருக்கிறார். அவர் தான் பேராசிரயர் சி.பத்மநாதன். ஆனால் அவரிடம் இது குறித்து நேர்காணலொன்றை நான் மேற்கொண்டிருந்தபோது இந்த மகாவம்ச உருவாக்கத்தோடோ, இக்குகுழுவோடோ தனக்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றார். வெறுமனே இக்காலப்பகுதியில் சைவ சமய நிலை பற்றிய கட்டுரையொன்றை எழுதிக் கேட்டதாகவும். அதனை மட்டுமே தான் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். எனவே இதுவரையான மகாவம்ச தொகுதிகள் இத்தீவின் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை இதன் ஆக்கப்பணியில் இருந்து மாத்திரம் அல்ல, அவர்களை வரலாற்றுப் பதிவுகளில் இருந்தும் அப்புறப்படுத்தி எழுதப்பட்டிருப்பதாகவே நான் உணருகிறேன்.
இன்னொரு வகையில் சொல்லப்போனால் இலங்கையின் பன்முகத்தன்மை பேணப்படாத நூலே மகாவம்சம் என்கிற ஒரு விமர்சனத்தை என்னால் நிச்சயம் வைக்க முடியும்.
கேள்வி: மகாவம்சத்தைப் பற்றிய விமர்சனங்களை செய்திருக்கிறீர்களா?
பதில்: ஆம் கடந்த சில வருடங்களாக மகாவம்சத் தொகுதிகளின் மீதான எனது விமர்சன ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு ஆய்வு இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். அக்கட்டுரைகளின் தொகுப்பும் அடுத்த மாதமளவில் நூலாக வெளிவருகிறது. ஆனால் மகாவம்ச மொழிபெயர்ப்புப் பணியில் எனது சொந்தக் கருத்துக்கள் பாதிப்பை செலுத்த விட்டதில்லை. மொழிபெயர்ப்பு அறத்தின் பால் நின்று அக்கடமையை நிறைவேற்றி இருக்கிறேன்.
கேள்வி: இம்மொழிபெயர்ப்பின் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
பதில்: ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கீழும், அரசியல், பயங்கரவாதம், சமூகம், கல்வி, கலாசாரம், பொருளாதாரம், சூழலியல், மருத்துவம் என்கிற தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பொறுப்பான குழுக்களே தனித்தனியாக அதனை எழுதியுள்ளன. கலாசாரப் பகுதி எளிமையாக இருந்த அளவுக்கு ஏனைய பகுதிகள் மொழிபெயர்க்க எளிமையாக இருக்கவில்லை. சில இடங்களில் ஒரு வசனம் அரை பக்கத்துக்கு நீள்கிறது. அதனை பல வசனங்களாக பிரித்திருக்க முடியும்.
வாசகர்கள் அவ்வசனத்தை வாசித்து முடித்து இருக்கும் போது தொடங்கிய இடத்தை மறந்து விடக்கூடுமோ என்று அச்சப்பட்டிருக்கிறேன். பல வசனங்கள் இவ்வாறு கால் புள்ளி இட்டு தொடர்கிற போக்கு முழு மகாவம்ச நடையிலும் காணப்படுகிறது. வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. மொழிபெயர்ப்பிலும் இந்த சிக்கலை எதிர்கொண்டேன்.
இதைவிட இலங்கையின் சிவில் யுத்தம் “பயங்கரவாதம்” என்கிற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிற அத்தியாயங்களில் இடங்களின் பெயர்களும், நபர்களின் பெயர்களும் சிங்களமயப்படுத்தப்பட்டு இருப்பதால் அவற்றை மீண்டும் தமிழில் அடையாளம் காண்பதில் சிரமமாக இருந்தது. இராணுவ நடவடிக்கைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது பல தடவை கூகிள் வரைபடத்தை திறந்து வைத்துக் கொண்டு அவ்விடங்களின் பெயர்களை சரி செய்தேன்.
சில இடங்களின் பெயர்களை யுத்த காலத்தில் அப்பிரதேசங்களில் வாழ்ந்தவர்களை தொடர்புகொண்டு உறுதிசெய்தேன்.
இதைவிட பொருளாதாரம், மருத்துவம், தொல்லியல் போன்ற கலைச்சொற்களை உறுதி செய்துகொள்ள பல துறைசார் அறிஞர்களின் பங்களிப்பை நாட வேண்டியிருந்தது.
மொழிபெயர்ப்பின் போது எதிர்கொண்ட சிக்கல்களை நான் தனியாக சிறு சிறு குறிப்புகளாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்திருக்கிறேன்.
கேள்வி: தமிழ் – சிங்கள பரஸ்பர மொழிபெயர்ப்புகளின் தொடர் தேவையை வலியுறுத்துகிறீர்கள்!
பதில்: ஆம்! இதுவரை இலங்கையில் வெளிவந்த அரசியல், வரலாறு, இனத்துவம், கலாசாரம், தொல்லியல், மரபுரிமை பற்றிய ஆய்வுகளின் மீது எனக்கு சந்தேகம் எழுகிறது. சிங்களத்தில் இருந்தும் மூலாதாரங்களைத் திரட்டாமல் தமிழில் வெளிவந்த எந்த ஆய்வும் பூரணமாக இருக்க முடியாது.
அது போல தமிழில் இருந்தும் மூலாதாரங்களை கையாளாத சிங்கள ஆய்வுகள் எவ்வாறு முழுமையடையும். சிங்களத்தில் எழுதுபவர்கள் சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்திலும் இருந்தும் திரட்டுவதைப் போல தமிழில் எழுதுபவர்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே ஆதாரங்களைத் திரட்டும் போக்கே இலங்கையின் ஆய்வுத் துறையில் காணப்படுகிறது. சிங்களத்தில் என்ன நடக்கிறது என்பதை தமிழர் அறியார். தமிழில் என்ன நடக்கிறது என்பதை சிங்களவர் அறியார். இரு இனங்களின் துருவமயப்பட்ட போக்குக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
எனது எழுத்துக்கள் தமிழ்ச் சூழலில் கவனம் பெறுவதற்கு சிங்கள மூலத் தகவல்களையும் எனது ஆய்வுகளில் கையாண்டு வருவது முக்கிய காரணம்.
கேள்வி: நிறைவாக, மகாவம்ச மொழிபெயர்ப்பை பூர்த்தி செய்தமையை எவ்வாறு உணருகிறீர்கள்?
ஒரு வரலாற்றுப் பணியை நிறைவு செய்த திருப்தி. மேலும், இப்பிரதியின் மீதான தமது கருத்துக்களை வெளிப்படுத்த தமிழ் பேசும் மக்களுக்கு வாய்ப்பு திறக்கப்பட்டதையிட்டு பெருமையடைகிறேன்.