மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல் எழுப்பும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய வெளிநாட்டில் தங்கியிருந்து தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அவர் ஈஸ்டர் ஞாயிறு தின தற்கொலை தாக்குதலுடன் தொடர்பான முக்கிய உண்மைகள் அடங்கிய புத்தகத்தையும் அண்மையில் வெளியிட்டார். தினகரன் வாரமஞ்சரி அவருடன் மேற்கொண்ட நேர்காணலே இது….
நீங்கள் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டீர்கள். ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஏன் நினைவுக்கு வந்தது?
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடந்தபோது நான் ஜெனிவாவில் இருந்தேன், ஈஸ்டர் குண்டு தாக்குதலைப் போலவே அரகலய எனும் போராட்டமும் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. எனக்குத் தெரிந்த பலர் இதைப் பற்றி என்னிடம் கேட்டதால், அதைப் பற்றி மேலும் ஆராய ஆரம்பித்தேன். நான் செயல்ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் தேடிப் பார்த்து நடவடிக்கை மேற்கொள்பவன் என்ற வகையில் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி உங்களால் புதிதாக எதைக் கண்டுபிடிக்க முடிந்தது? தடுத்திருக்கக்கூடிய தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? என்பதுதான் எஞ்சியிருக்கும் கேள்வி?
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உளவுத் துறையின் தலைவரிடமிருந்துதான் இது தொடர்பான தகவல் வந்துள்ளது. ஆனால் எமது புலனாய்வுப் பிரிவுகள் இது தொடர்பில் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முப்பது வருடகால யுத்தத்தை எதிர்கொண்டு பெரும் புலனாய்வுப் பிரிவைக் கொண்டுள்ள எம்மால் ஏன் இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனது என்பதே என் கேள்வி.
நாட்டிலேற்பட்ட புதிய மாற்றத்தின் மூலம் ஈஸ்டர் தின தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒரு தரமான விதை வளம் மிக்க மண்ணில் விழுந்திருக்கும் சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். நாட்டு மக்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றம், புதிய அரசியல் புரட்சி இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நினைக்கிறேன். இது ஒருபுறம் பொறுப்பு, மறுபுறம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.
ஈஸ்டர் தாக்குதல், ஊடகவியலாளர்களின் படுகொலைகள், அதேபோன்று தாஜுதீன் கொலை உள்ளிட்ட மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி தெளிவாக கூறியது. அந்தப் பொறுப்பும் வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியும் அந்த வாக்குறுதியை வழங்கியிருந்தது. இப்போது இதற்கான ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவது அவர்களின் பொறுப்பாகும்.
நாட்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் பல்வேறு அரசியல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. ஆனால் அவற்றில் சில வாக்குறுதிகளே நிறைவேற்றப்படுகின்றன. இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
என்னால் இதனை 100% சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் நான் சொன்னதைப் போல் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். தற்போது அந்த மாற்றம் கிடைத்துள்ளது. அந்த மாற்றத்தின் படியேதான் இனி செயல்பட வேண்டும். எனினும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.
அதே சமயம் கூற வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. இந்தச் செயற்பாடு அரசாங்கத்தினுடைய அல்லது ஜனாதிபதியின் வேலை மட்டுமல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பினரும் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.
–எமது நாட்டில் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் நடந்தது எதுவுமில்லை. இவ்வாறான சூழ்நிலையில், இதுபோன்ற பணிகளுக்கு புதிய பொறிமுறை அல்லது புதிய செயல்முறை தேவை என்று நீங்கள் நினைக்கவில்லையா?
அதைத்தான் நான் சொன்னேன், இது அரசாங்கத்தின் வேலை மட்டுமல்ல என்று, தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதேபோன்று ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்குவோம் என்று பிரசார மேடைகளில் தெளிவாகக் கூறியிருந்ததுதானே. அதேபோன்று தாஜுதீனின் கொலை, திருகோணமலையில் காணாமல் போன இளைஞர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இந்தச் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமா? அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது என நீங்கள் நினைக்கிறீர்களா?
இவ்விடயங்களை எதிர்ப்பதென்றால் ஒரு சிறு குழுதான் இதனை எதிர்க்கும். உண்மையைக் கண்டறிவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குவதும் மேற்கொள்ளப்படவே வேண்டும். இதனை மேற்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கமும் முயற்சித்தது. ஆனால் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கு இருக்கும் பலத்திற்கு அமைய அவற்றிற்கு ஏற்படுத்தப்படும், ஏற்படும் தடைகள் அதிகமாகும். எனினும் இந்தப் பணியை அரசுப் பணியாகச் செய்யாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு மேற்கொண்டால் யாரும் காலைப் பிடித்து இழுக்கப் போவதில்லை.
இந்த விசாரணைகளை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?
புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்தில் தற்போது மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே உள்ளனர். எனவே, அவர்களால் திடீரென இந்தப் பயணத்தை ஆரம்பிக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சியை அமைத்ததன் பின்னரே இந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் இவ்வாறான வேலைகளை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
அடுத்தது ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஊடாக மாத்திரம் இவ்வாறான வேலைகளை ஆரம்பிப்பது பொருத்தமானது என்றும் நான் நினைக்கவில்லை.
ஒருமித்த கருத்துடன் இணைந்த செயல்முறையைத் தொடங்குவதே சிறந்த விடயம். அவசரமாக ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்காமல், தேசிய ரீதியில் இந்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதி ஒருவரின் ஒத்துழைப்புடன் அல்லது ஆலோசனையுடன் கூடியதாக மேற்கொண்டால் மாத்திரமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஏனெனில் இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆணைக்குழு அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என எமக்கு நன்றாகவே தெரியும். சிலர் நல்ல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச் செயல்கள் குறித்து அரச சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
அவ்வாறான ஒன்று அவசியம். அதனால்தான் இது ஜனாதிபதியின் அல்லது அரசாங்கத்தின் வேலையாக இருக்கக்கூடாது என நான் கூறுகின்றேன். இதற்கு ஒரு சுயாதீனமான அலுவலகம் தேவை. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத வழக்குகளை சுதந்திரமாக தாக்கல் செய்யக்கூடிய அலுவலகம் ஒன்று தேவை. இந்த விடயங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. அரசாங்க அதிகாரிகள் அல்லது இராணுவ அதிகாரிகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராக வேண்டும். எனவே, முதலில் ஒரு பொறிமுறையினை அமைத்துக் கொண்டால், அது சுதந்திரமாக இயங்கும்.
புதிய அரசியல் மாற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ஒரு நல்ல முன்னேற்றம், இந்த நாட்டை ஆட்சி செய்திருப்பது இரண்டு குடும்பங்கள்தானே. ஜனாதிபதி ஆர். பிரேமதாச மட்டும் பிரபு வர்க்கம் என்ற லேபலில் வராதவர். என்றாலும் அவர் வந்ததும் பிரபு வர்க்க பங்காளராகவேயாகும். சமுதாயத்தில் கீழ் மட்டத்திலிருந்து அதிகாரத்தைப் பிடிப்பது இதுவே முதல் தடவையாகும். சமூகத்திற்கும், இலங்கைக்கும், தெற்காசியாவிற்கும் கிடைத்த பாரிய சந்தர்ப்பமாக இதனைச் சுட்டிக்காட்டலாம். பிரபு வர்க்கத்திற்கு வெளியே அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும் என்பது இப்போது தெளிவாகி இருக்கின்றது. அந்த நிலை சிலியில் காட்டப்பட்டது. இது லத்தீன் அமெரிக்காவில் பல நிகழ்வுகளில் காட்டப்பட்டுள்ளது. எனினும் ஆசியாவில், இதுபோன்ற சூழ்நிலைகள் அரிதானவை. அந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்த மாற்றம் வரலாற்றுத் தருணமாகும்.
எனினும் சலுகைகளும் அதிகாரமும் மக்களை மாற்றிவிடும்தானே?
ஆம், வர்த்தகம், வெகுஜன ஊடகம் போன்றவை காரணமாக இது ஏற்படக் கூடும். உருகுவேயின் முன்னாள் தலைவர் இன்றும் அரை ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொண்டே வாழ்ந்து வருகின்றார். அவர் சலுகைகளுக்குப் பின்னால் செல்லா விட்டாலும் அவரால் பொறிமுறையினை மாற்ற முடியாது போனது. ஏனென்றால், மக்கள் நல்லவர்கள் என்ற கருத்தொற்றுமையில் இருந்தால், வெற்றியோ மாற்றமோ ஏற்படாது. நாம் செய்ய வேண்டியது பொறிமுறையை மாற்றுவதுதான். எனவே, நல்லவர்களுக்காக காத்திருக்கக் கூடாது. ஒரு நல்ல பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
அதிகாரம் ஊழலை உருவாக்குகிறது என்ற கதை 100 சதவீதம் சரியானதே. ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்ததும், எதுவும் எழுதப்படாத வெள்ளை தாள்களைப் போன்ற சுத்தமான குணாதிசயங்களைக் கொண்ட இரண்டு அல்லது மூன்று இளம் அரசியல்வாதிகளைப் பார்த்தேன். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் எங்கு விழுந்தார்கள் என்பதை நான் கூறத் தேவையில்லையே. நல்ல மனிதர்கள் என்று கலா சாரத்தை உருவாக்க முடியாது. பொருத்தமான பொறிமுறையை நிறுவுவதே முக்கியமானதாகும்.
தேசிய மக்கள் சக்தியும் அந்த நிலைக்கு உள்ளாகக் கூடும் என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?
மக்கள் விடுதலை முன்னணியின் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இன்று கட்சியில் இல்லை. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த நந்தன குணதிலக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளராக உள்ளார். அதனால்தான் தனிப்பட்டவர்களின் குணாதிசயங்களுக்கு அமைவாக அல்ல, சரியான பொறிமுறை தேவை என்றே நான் கூறுகின்றேன். இந்த வாய்ப்பை தவறவிட்டால், மீண்டும் ஒரு பொருத்தமான பொறிமுறையைத் தயாரிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்க முடியாது.
அரச ஊடகங்கள் சுதந்திரமாக்கப்படும் என்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஊடகங்களில் வெளிவரும் விடயங்களில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும்.
நிச்சயமாக, அரச ஊடகங்கள் என்பது பொதுச் சொத்தாகும், பொதுச் சொத்துக்களை அரசாங்கம் விரும்பியவாறு கையாள முடியாது.
அரச ஊடகங்கள் தொடர்பில் குழு அறிக்கைகள் ஏராளம் உள்ளன. 1994ஆம் ஆண்டில் 4 குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஊடகத்துறை அமைச்சராக தர்மசிறி சேனாநாயக்க பதவி வகித்த போதே அக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதில் ஆர். கே. டபிள்யூ. குணசேகரவின் அறிக்கையில் ஊடகவியலாளர்களின் சம்பளம் தொடர்பிலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகை ஆசிரியர்கள் கூட அரசியலமைப்புச் சபையின் மூலமே நியமிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதிக்கு ஆபத்துள்ளதாக நீங்கள் சமூக ஊடகம் ஒன்றில் கூறியிருந்தீர்களே…?
ஆம், நிச்சயமாக ஆபத்து இருக்கக் கூடும், ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் போது இதுபோன்ற ஆபத்துகள் உள்ளன. பிரபு வர்க்கத்தினரிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படும்போது இத்தகைய ஆபத்துகள் ஏற்படும். பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அத்தகைய ஸ்னைப்பரைப் பயன்படுத்துவது கடினமான விடயமல்ல. இன்று பாதாள உலகம் என்பது ஒரு ஆயுதப் படை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒன்று இரண்டு கோடி கொடுத்து நாட்டைக் கடக்க டிக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தால் எதையும் செய்து கொள்ள முடியும். இன்று அரசியல் என்பது செல்வத்தை உருவாக்கும் ஒரு வழியாக மாறிவிட்டது. எம்மோடிருந்து ப்ளேன்டி குடித்துக் கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகளாக ஆனதன் பின்னர் போய் பார்த்தால் வித்தியாசம் தெளிவாகத் தெரியும். அவர்களின் வீடுகள் அரண்மனைகள் போன்றுள்ளன. எனவே நாம் முன்னர் குறிப்பிட்ட தாஜுதீன், பிரகித் எக்னலிகொட போன்ற சம்பவங்களால் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் எதையும் செய்யத் துணியலாம். அந்த ஆபத்து நிச்சயம் உண்டு. சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
எம். எஸ். முஸப்பிர்