சனத் ஜயசூரிய இலங்கை அணியின் பயிற்சியாளரானது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆரம்பத்தில் இடைக்கால பயிற்சியாளராக இருந்து அதுவே சற்று நீடிக்கப்பட்டு, பின்னர் நிரந்தர பயிற்சியாளராக ஓர் ஆண்டுக்கு அவர் நியமிக்கப்பட்டது வரையான பயணம் என்பது சனத் ஜயசூரிய கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
‘அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சர்வதேச அணி ஒன்றுக்கு பயிற்சியாளர் ஒருவராக செயற்பட வேண்டாம்’ என்று ஜனசூரியவுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிய நிலையிலேயே அவர் இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நிரந்தரமாக வகிப்பதற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
அந்தப் பொறுப்பை அவருக்கு வழங்க கிரிக்கெட் நிர்வாகம் நாடியபோது மருத்துவ ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு ‘ஆம்’ சொல்லிவிட்டார். அப்போது அவருக்கு தலைமை பயிற்சியாளருக்கான ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது, எவ்வளவு சம்பளம், கொடுப்பனவுகள் என்ன… என்ன… என்று எது பற்றியும் யோசிக்கவில்லை.
‘அதனை தயாரித்து எனக்குப் பின்னர் அனுப்புங்கள்’ என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிடம் குறிப்பிட்ட ஜயசூரிய பேச்சுவார்த்தை அறையில் இருந்து வெளியேறி நேராக வீரர்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.
பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்து பணியமர்த்துவதென்பது சாதாரணப்பட்டதல்ல. பாடசாலை அணி ஒன்றுக்கு பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்வதென்றால் கூட ஏகப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அப்படி இருக்க ஜயசூரிய போன்ற ஒருவர் பயிற்சியாளர் ஆனது தற்செயல் என்றபோதும் அவ்வாறான ஒருவரை நிரந்தர பயிற்சியாளராக சம்மதிக்க வைத்தது என்பது தற்சயல் என்பதற்கு அப்பால் இலங்கை கிரிக்கெட் சபையை பொறுத்தவரை அது அவர்களின் அதிர்ஷ்டம் என்று கூட குறிப்பிடலாம்.
கடந்த காலங்களில் இலங்கை சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் அணி, அதில் இருக்கும் வீரர்கள் பட்ட துன்பத்தை விடவும் இலங்கை கிரிக்கெட் சபை சந்தித்த ஏச்சுப் பேச்சுகள் அதிகம். அந்த சூழலில் ஜயசூரியவின் வருகை என்பது அவர்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய விடுதலை.
ஜயசூரியவைப் பொறுத்தவரை அவருக்கு பயிற்சியாளராக இருந்த முன்னனுபவம் இல்லை. உங்களுக்கு கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட முடியுமா? என்று ஊடகங்கள் அவரிடம் கேட்டபோது கூட, ‘பொதுவாக கொஞ்சம் தெரியும்’ என்று பொதுப் படையாகத் பதிலளித்திருந்தார். அவர் கூறிய பதில் வெளிப்படையானது. தனக்குப் பயிற்சியாளராக செயற்பட முடியுமா என்பது ஆரம்பத்தில் அவருக்குக் கூடத் தெரியாது.
ஆனால் ஒன்று மாத்திரம் எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஜயசூரியவுக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும் அதனை கச்சிதமாகச் செய்வார் என்பது அனைவரும் நம்பிய ஒன்று. ஒரு வீரராக, அணித் தலைவராக, கிரிக்கெட் உலகில் புதுமைகளைச் செய்த ஒருவராக அவரது இருபது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை இதற்கு நல்ல உதாரணம்.
பின்னர் இலங்கை தேர்வுக் குழு தலைவராகவும் அணியில் செய்ய வேண்டிய முக்கிய பல மாற்றங்கள் மற்றும் புதிய வீரர்களை அணிக்கு உள்வாங்கியது என்று பல வேலைகளைச் செய்திருந்தார். அவர் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தபோது தான் இலங்கை அணி 2014 டி20 உலகக் கிண்ணத்தை வென்றது.
அந்த உலகக் கிண்ணத்தை வெல்வதில் ஜயசூரிய செய்த சின்ன காய் நகர்த்தல் முக்கியமாக இருந்தது. அப்போது தினேஷ் சந்திமால் தலைமையிலேயே இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கியது. ஆனால் ஆரம்பப் போட்டி ஒன்றில் இலங்கை அணி மந்தமாக ஓவர்களை வீசியதால் சந்திமால் ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டார். அவர் இல்லாமல் அணி சிறப்பாக செயற்பட்டதோடு அணியின் கட்டமைப்பு முழுமை பெற்றிருந்தது. இதனைப் பார்த்த ஜயசூரிய அணித் தலைவரிடம் புரியவைத்து அவரை விட்டுவிட்டு போட்டிகளில் இலங்கையை ஆடச் செய்து உலகக் கிண்ணத்தையும் வெல்ல வழி நடத்தினார்.
ஜயசூரிய 2023 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராகவே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு அடுத்து டி20 உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்தபோது பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் வெளியேற முடிவெடுத்தது எதிர்பார்த்ததே.
ஆனால் ஜயசூரியவிடம் இடைக்கால பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது உண்மையில் இடைவெளி நிரப்புவதற்கு மாத்திரம் தான். அந்த இடைவெளியில் அவர் செய்தது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றது, பின்னர் இங்கிலாந்து சென்று தொடரை இழந்தபோதும் கூட ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றது, கடைசியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என முழுமையாக வென்றது. எல்லாவற்றிலுமே சனத் ஜயசூரியவின் வழிகாட்டல் தீர்க்கமானது.
‘அவர்களுக்குத் தேவையான மன உறுதியை வழங்குவதே எனக்கு முக்கியமாக இருந்தது. அடிப்படையில் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்கள் என்னை நம்பும் இடத்திற்கு வந்தார்கள்.
அவர்களிடம் திறமை இருக்கிறது.
ஆனால் அவர்கள் அடிக்கடி அந்தத் திறமையை வெளிப்படுத்தினார்களே ஒழிய தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை. அதற்கு தமது பயிற்சியாளர் மீது இருக்கும் நம்பிக்கை, அவர்களின் தன்னம்பிக்கை மிக முக்கியம்’ என்று ஜயசூரிய அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய அணி ஒன்றுக்கு பயிற்சியாளராக இருப்பவர் வெறுமனே தொழில்நுட்ப விடயங்களை கற்றுக்கொடுப்பவர் அல்ல. அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், வழிநடத்துனராகவும் இருக்க வேண்டும். அதனை ஜயசூரிய நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.
குறிப்பாக அணியின் நடத்தை பற்றி அவர் விசேட கரிசனை காண்பிப்பது தெரிகிறது. அதேபோன்று அணியில் எவருக்கும் நிரந்தர இடம் இல்லை என்பது ஜயசூரிய பயிற்சியாளராக வந்த பின்னர் தான் அணியில் இருக்கும் சிரேஷ்ட வீரர்களுக்கு புரிந்திருக்கும். அதற்கு நல்ல உதாரணம் குசல் மெண்டிஸ். கடந்த காலங்களில் தொடர்ந்து சோபிக்காதபோதும் அணியில் நிரந்தமாக இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை தான் அவருக்கான பெரிய முட்டுக்கட்டை.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு சிறப்புத் துடுப்பாட்ட வீரர் என்ற இடத்தில் இருந்து விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் என்ற இடத்திற்கு தரம் இறக்கப்பட்டபோது தான் அவர் உண்மையில் தனது துடுப்பாட்டத்தில் அக்கறை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரை விடவும் அணியில் அதிக உரிமை எடுத்துக் கொள்வதற்கு ஜயசூரியவினால் முடிந்திருப்பது மற்றொரு முக்கிய விடயம். அது அணி வீரர்களிடையே நம்பிக்கையை மாத்திரமல்ல, மாரியாதை கலந்த பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடைசியில் அது மைதானத்திலும் பிரதிபலிப்பது தெரிகிறது.
‘தற்போது அவர்களுக்குத் தேவையான நம்பிக்கை அதேபோன்று மதிப்பு வீரர்கள் அறையில் இருக்கிறது. அத்தோடு அவர்களுக்குத் தேவையான தன்னம்பிக்கையை நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். எவருக்கு என்னிடம் வந்து எந்த விடயத்தை கூற முடியும். சுதந்திரமாகப் பேச முடியும். அது கிரிக்கெட்டாக இருக்கலாம், வேறு விடயமாகக் கூட இருக்கலாம்.
இல்லாவிட்டால் அணிக்குள் வேறு விடயங்கள் நடக்கலாம். எதனையும் நேராக வந்து என்னிடம் கூறுவதற்கு அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. நான் அந்த சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
நீங்கள் உங்களுடைய கிரிக்கெட்டை ஆடுங்கள் என்றே நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன். அதற்கு வரம்பு இல்லை. அது தான் எமது கிரிக்கெட். எமக்கே தனித்துவமான இலங்கைக் கிரிக்கெட்.
இந்த நிலைமையுடன் அவர்கள் மெல்ல மெல்ல அவர்களின் இயல்பான நிலைக்கு வந்தனர். அவர்கள் சௌகரியமாக உணர்ந்தார்கள். வீரர்கள் அறை நல்ல சூழலில் உள்ள. சுதந்திரமாக எதனையும் பேசுவது, சுதந்திரமாக உரையாடுவது போன்ற விடயங்கள்…
அதேபோன்று அவர்கள் அவர்களின் ஆட்டத்தின் மூலம் களிப்பை உணர்கிறார்கள். வீரர்களின் அறை என்பது ஒரு பணியிடம் போன்றோ அல்லது முதலாளிக்கு பயந்து வாழும் இடமாகவே இல்லை. இது தான் மாற்றம்.
இது ஒன்றும் மந்திரமோ, சாகசமோ அல்ல. பொதுவாகப் பார்த்தால் அது தான் அடிப்படையான விடயங்கள்.
வீரர்கள் அறை அப்படி இருந்தபோதும் பயிற்சி இடம் இல்லாவிட்டால் பயிற்சி வலைக்குள் அவ்வாறு இல்லை. அங்கே கண்டிப்பான ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் விரும்புகின்றவாறு பயிற்சி வலைக்குள் செயற்பட முடியாது. அங்கே திட்டமிட்ட முறை இருக்கும்.
பயிற்சிக்குச் சென்றால் நாம் அதிக கண்டிப்பாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவோம்.
யாருக்கேனும் ஓய்வு தேவையென்றால் நான் அவர்களுக்கு ஓய்வு வழங்குவேன். அதேபோன்று பந்து வீசுபவர்கள் பற்றி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அசித்த (பெர்னாண்டோ) நீண்ட காலமாக அனைத்து வகையான (டெஸ்ட், ஒருநாள், டி20) சர்வதேச போட்டிகளிலும் ஆடுகிறார். அது இலகுவானதல்ல. எனவே அவ்வாறான பந்துவீச்சாளர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே நாம் அதனைச் செய்வோம்’ என்கிறார் சனத் ஜயசூரிய.
ஜயசூரிய என்பவர் உண்மையில் இலங்கை கிரிக்கெட்டின் அடையாளம். தனது 20 வயதுகளின் ஆரம்பத்தில் இலங்கை அணியில் அவர் இணைந்தபோது ஒரு தேர்ந்த அணி உருவாவதற்கான ஆரம்ப சூழல் அங்கே இருந்தது. அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹானாம, சமிந்த வாஸ், முத்தையா முரளிதன் என்று 1990களின் நடுப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி உலகின் உச்சத்தைத் தொட்டபோது ஜயசூரியவின் பங்கு முக்கியமானது.
110 டெஸ்ட் போட்டி, 445 ஒருநாள் போட்டிகளுடன் தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி காலத்தில் அறிமுகமான டி20 கிரிக்கெட்டில் கூட ஆடிய ஜயசூரிய படைத்த சாதனைகள் இன்றும் கூட யாராலும் நெருங்க முடியாதது. அவர் எப்போதுமே இலங்கைக்கு தனித்துவமான கிரிக்கெட் ஒன்றையே உருவாக்க முயற்சிக்கிறார்.
அதுவே, சர்வதேச அரங்கில் இலங்கை தனது கிரிக்கெட்டை உயர்த்துவதற்கு முக்கியமானது.
எஸ்.பிர்தெளஸ்