Home » இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்திய அர்ப்பணிப்புக்கான சான்று
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்திய அர்ப்பணிப்புக்கான சான்று

by Damith Pushpika
October 6, 2024 6:00 am 0 comment

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரி, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்தான். ஜெய்சங்கரின் வருகையானது, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அண்டை நாடுகளுடனான மூலோபாய மற்றும் இருதரப்பு உறவுகளை பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் புது டில்லியின் நோக்கத்தையும் இந்த விஜயம் சுட்டிக்காட்டுகிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்திருந்த அவர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவையும் சந்தித்ததுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்திருந்தார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடனான கலந்துரையாடல்களின்போது, அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர் (SAGAR) கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் முன்னேற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். இலங்கையின் முன்னுரிமையின் அடிப்படையிலான பணித்திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு இந்தியா வழங்கிவருகின்ற அபிவிருத்தி உதவிகள் தொடருமெனவும் அவர் உறுதியளித்திருந்தார். அந்த அடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தினை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஊடாக நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கடனுதவித் திட்டங்களின்கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் நிறைவேற்றப்பட்ட 7 பணித்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை நன்கொடைத்திட்டங்களாக மாற்றமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை புகையிரத சேவைகளுக்காக டீசலில் இயங்கும் 22 ரயில் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்குவதற்கும் இந்தியா தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பின்போது எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் LNG விநியோகம், வழிபாட்டுத்தலங்களுக்கான சூரியக்கல மின்மயமாக்கல், இணைப்புகள், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம், மற்றும் பால்துறை அபிவிருத்தி குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உரையாடியிருந்தார். இவ்வாறான துறைகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பு வழங்கும் அதேவேளை வருமானத்துக்கான புதிய மார்க்கங்களையும் உருவாக்குமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார். செழிப்புமிக்க ஓர் இலங்கைக்கான நோக்கினை நனவாக்குவதிலும் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதிலும் இந்தியாவின் பொருளாதார ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தியினை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆற்றல்கள் குறித்து தெரிவித்திருந்த அவர், இலங்கையில் உற்பத்திச் செலவினை குறைப்பதற்கும் மேலதிக வளங்களை உருவாக்குவதற்கும் இது ஆதரவாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன் இத்துறையானது மேலும் வளர்வதற்கான சாத்தியங்களை கொண்டிருப்பதனையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

அதேபோல, இந்திய முதலீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கல், மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் ஆளுமை விருத்தி தேவைகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றினை நிவர்த்திசெய்வதற்கும் இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் மூலமான நலன்கள் குறித்தும் அவர்களது சந்திப்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் கூறியிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஆரம்பம் முதலே இலங்கையின் பொருளாதார

ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்காக இந்தியா ஆதரவளித்துவந்ததாக நினைவூட்டியிருந்தார். இந்தியா முதலாவதாக நிதி உத்தரவாதத்தினை வழங்கியிருந்ததுடன் அதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட நிதி வசதி குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வழிகோலப்பட்டது. நாட்டிற்கான சர்வதேச முறிகளின் உரித்தாளர்களுடனான உடன்படிக்கைகள் தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்கள் சபையில் இந்தியாவின் ஆதரவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கையுடனான தனது இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படுவதனை துரிதப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புகின்றது. பாதுகாப்பு துறைகளில் இந்தியா மற்றும் இலங்கையின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளமையை இச்சந்திப்புகள் வெளிக்காட்டியிருந்தன. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கும் பங்களிப்பினை வழங்குகின்றது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுக்கள் அவசியமானதெனவும் இவ்விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கையின் ஆட்புலத்தினை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார். இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான கடுமையான அபராதம் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையானது, இந்த விவகாரத்தை தீர்த்துவைப்பதற்கான ஒரு நிலையான அடித்தளத்தினை உருவாக்கும். மீன்பிடித்துறை மற்றும் மீனவர் சங்கங்கள் குறித்த கூட்டுப் பணிக் குழு கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படும். மேலும், 50 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டியிருந்தார்.

பரஸ்பரம் பொருத்தமான ஒரு திகதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரால் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division