மூங்கில் என்பதும் ஒரு புல் இனந்தான் என்பது ஆச்சரியமான விடயம். உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மூங்கில் மரங்கள் சீனாவில் வளர்கின்றன. அதனால்தான் “மூங்கில்களின் உலகம்” என்ற அடைமொழியுடன் சீனா அழைக்கப்படுவதுண்டு.
மூங்கில்களில் பல இனங்கள் உண்டு. குறிப்பாக ‘சைனீஸ் பெம்பூ’ (Chinese bamboo) ரக மூங்கில் சீனாவின் விசேட அடையாளங்களில் ஒன்று. “Dendrocalamus giganteus” என்பது இதன் தாவரவியல் பெயர்.
சீன மூங்கில் வளர்வதற்கு செழிப்பான மண்ணும், தண்ணீரும், சூரிய வெளிச்சமும் தேவை. இவை அனைத்துமே சரியாய் அமையப் பெற்றது சீனா. மூங்கிலின் விதைகள் மண்ணில் விதைக்கப்படுகின்றன. தண்ணீர் ஊற்றி உரமிட்டாலும் மூங்கில் முளைப்பதற்கான அறிகுறியே வெளியே தெரியாது.
ஐந்து ஆண்டுகள் சென்றாலும் இந்த விதை முளைக்காதாம். மூங்கில் மரம், மண்ணில் வலிமையான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டுதான் மேலே முளைவிடும். தண்ணீர், சிறப்பு பராமரிப்பு எல்லாமே வலிமையான வேர்ப் பகுதியை உருவாக்கும். ஐந்தாவது ஆண்டில் மூங்கில் கொடுக்கும் பலனுக்கு வேர்தான் பலம். நாம் சற்றும் எதிர்பாராத வேகத்தில் தினசரி இரண்டு அடி என்கிற கணக்கில் மூங்கில் கிடுகிடு வளர்ச்சியை காட்டும். தொடர்ச்சியாக 45 நாட்கள் முதல் 55 நாட்கள் வரை வளரும். அதிவேகத்தில் வளரும் சீன மூங்கில்கள் 90– – 135 அடி உயரம் வரை வளர்ந்து நிற்கும். மற்றவகை மூங்கில்களைவிட சீன மூங்கில் வணிக ரீதியாக ஏராளமான பலன்களைக் கொடுக்கின்றன.
பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி ஒரு அங்குல அளவு கூட வளராமல் அப்படியே இருக்கும். நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். பிறகு சட சடவென்று அசுர வேகத்தில் ஒரே ஆண்டில் 80 அடிகள் உயரம் வளரும்.