தோட்ட நிர்வாகங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் தோட்டங்களை சரியாக பராமரிக்காது லாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படுவதனால் தேயிலை தோட்டங்கள் பெரும் பகுதி காடாகி வருகின்றன.
இதன் காரணமாக வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதோடு தேசிய வருமானத்தில் பெரும் பகுதியினை இழப்பதற்கு வழிவகுக்கிறது என்று செங்கொடிச் சங்கத்தின் தலைவர் எஸ். சிவசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் தோட்ட நிர்வாகங்கள் இலாபத்தை மாத்திரம் கருத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக தேயிலை கொழுந்து பறிக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு ஏனைய தோட்ட பராமரிப்பு வேலைகளுக்கும் எவ்விதமான பங்களிப்பும் வழங்குவதில்லை.
ஆரம்ப காலங்களில் ஆண் தொழிலாளர்கள் தோட்டப் பராமரிப்பு வேலைகளிலும் பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டனர்.
தற்போது மத்திய மலைநாட்டில் உள்ள பல தோட்டங்கள் பராமரிக்கப்படாததால் காடாகி வருகின்றது. இதனால் பெருந்தோட்ட பகுதிகளில் காட்டு மிருகங்கள் குறிப்பாக சிறுத்தை, பன்றி போன்றன அதிகளவில் உலவுவதோடு விஷ ஜந்துக்கள், விஷ அட்டைகள், குளவிக் கூடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வருவதுடன் அட்டைக்கடிக்கும் ஏனைய காட்டு மிருகங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகி வருவதால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் எவ்விதமான கொடுப்பனவுகளையோ நாளாந்த வேதனத்தையோ நட்ட ஈட்டையோ வழங்குவதில்லை. அதேபோல் வனவிலங்குகளால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், காயமடைந்தவர்கள் மரணித்தவர்களுக்கு இதுவரைகாலமும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாகவும் பெருந்தோட்டங்களில் தற்போது பெருகியுள்ள விஷ அட்டைகள் காரணமாகவும் பணிக்குச் செல்ல முடியாது மக்கள் தோட்டப் பணிகளில் இருந்து விலகி செல்வதை காணக் கூடியதாக உள்ளது.
தற்போது மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் விஷ அட்டைகள் பெருகி விட்டதால் அட்டை கடிக்கு உள்ளான தொழிலாளர்கள் சரும நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
ஆகவே இது விடயத்தில் தோட்ட நிர்வாகங்கள் துரித நடவடிக்கை எடுத்து காடாகிக் கிடக்கும் தேயிலைத் தோட்டங்களை மீள் சுத்திகரிப்பதோடு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் 40 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 20 நாட்களாக குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் தெரிவிக்கின்றார்.
தொடர்ந்து குளவி தாக்குதலுக்கு உள்ளாகும் பிரதேசங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு ஆடைகளை வடிவமைத்து வழங்குவதற்கு பொறுப்பான திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்தால் அது அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் ஆறுதலாக அமையும் என தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செ.தி.பெருமாள்