நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக சுற்றித்திரியும் மட்டக் குதிரைகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. பிரதான வீதியில் வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுக்கே மட்டக்குதிரைகள் திடீரென பாய்வதால் விபத்துகள் நிகழ்வது பெருகி வருகிறது. நுவரெலியாவில் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மட்டக்குதிரையின் சாணம் மற்றும் சிறுநீரால் சாலையின் வழுக்கும் தன்மையும் அதிகரித்து அதிக விபத்துகளும் ஏற்படுகின்றன. இவை தவிர, வீதியில் அவை திரிவதால் விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்கள் பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுதந்திரமாக வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர்.
நுவரெலியாவில் பிரதான பகுதிகளில், வீதி ஓரங்களின் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் பழுதடைந்து ஒளிர்வதில்லை. இதனால் அதிக இருள் சூழ்ந்த பகுதிகளில் கூட்டமாக நிற்கும் மட்டக்குதிரைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் அதிகளவில் சம்பவிக்கின்றன. விபத்தில் இறப்பு வீதம் குறைவு என்றாலும் கை, கால் முறிவு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை வழக்கமாக உள்ளது.
குறிப்பாக பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மட்டக்குதிரைகளின் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கின்றது.
இதில் அதிகமாக நுவரெலியா மாநகரசபை (சினிசிட்டா) பொது மைதானத்தில் தினந்தோறும் நூறுக்கும் மேற்பட்ட மட்டக் குதிரைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அவை அங்கு விளையாடும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் மிரட்டி விரட்டுகின்றன. அதனால், மாணவர்கள் அச்சத்துடன் விளையாடாமலேயே மன உளைச்சலுடன் திரும்புகின்றனர்.
அதிகமானவர்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மைதானத்தை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்கின்றன. இதனால் நடைப்பயிற்சி செல்லும் அனைவரும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே குறித்த மைதானத்துக்குள் மட்டக்குதிரைகள் மாடுகள், நாய்கள் நுழையாத வண்ணம் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் நுவரெலியா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களை மூடியவுடன் பொது மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படும். அவ்வாறான நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மட்டக்குதிரைகள் கூட்டம் கூட்டமாக முழு நகரையும் ஆக்கிரமித்து அசுத்தப்படுத்தி வருவதும், துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.
நுவரெலியா -– கண்டி, நுவரெலியா -– உடப்புசல்லாவ, நுவரெலியா -– – பதுளை போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து வீதியாக இருந்து வருகிறது. இந்த வீதிகளில் பகல் நேரம் மட்டுமன்றி, இரவு நேரங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள், பாடசாலை வாகனங்கள், அரசுதுறை சார்ந்த வாகனங்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய ரக வாகனங்கள் வரை இந்த வீதியில் செல்கின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த வீதியில் 30க்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகள் தினமும் சுற்றித்திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் வாகன சாரதிகள், குறிப்பாக இருசக்கர, முச்சக்கரவண்டிகள் மட்டக்குதிரை நகரும் திசையை கணிக்க முடியாமல் மோதி விபத்தில் சிக்குகின்றன.
இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதும், காயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது.
மேலும் மட்டக்குதிரை வளர்க்கும் உரிமையாளருக்கு பலதடவைகள் உரிய தரப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
அதிகமாக கிராமப்புறங்களில், மேய்ச்சலுக்கு பிறகு மட்டக்குதிரைகளை மாலை நேரங்களில் தொழுவத்தில் கட்டும் பழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கிராமங்களில் இரவு நேரங்களில் மட்டக்குதிரைகள் நடமாட்டத்தை வீதிகளிலோ பிற பிரதான இடங்களிலோ காண இயலாது. ஆனால் மாறாக நகர்ப்புறங்களில் உள்ளவர்கள், தாங்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் அவற்றைத் தொழுவத்தில் கட்டாததால் விபத்துகள் பெருமளவில் நடைபெறுகின்றன,
எனவே, நகர்ப்புறங்களில் மட்டக்குதிரையால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் கால்நடைகள் மேய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், விபத்து ஏற்படும் முன்பு பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் என பொது மக்களும், வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செ.திவாகரன் நானுஓயா.