“அஅன்றாடம் சூரியன் உதிக்கும். ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. அந்தக் கனவானது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாட்டை உருவாக்குவதாகும். ஆனாலும் பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதை நான் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகார மோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் போயுள்ளது. எமது வரலாற்றில் நழுவ விட முடியாத சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகை தன்மையை ஏற்றுக் கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்”
எங்கும் அநுர. எதிலும் அநுர. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் இக்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு நபராக மிகக் குறுகிய காலத்தில் மாறியுள்ளார் நமது நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.
தமது நீண்ட கால எதிர்பார்ப்பையும் நாட்டு மக்களின் நீண்ட கால கனவையும் பாராளுமன்றத்தில் வெறும் மூன்று ஆசனங்களை வைத்துக்கொண்டு நிறைவேற்றியுள்ளார்.
முதிர்ந்த, அனுபவம் மிக்க, பல சவால்களை ஏற்று நாட்டு மக்களின் போற்றுதலுக்கு இலக்காகியிருந்த பல தலைவர்கள் தேர்தலில் போட்டியிட, அத்தனை தலைவர்களையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டு மக்கள் மனங்களிலும் சிந்தனையிலும் உறுதியாக இருத்திக் கொண்ட தலைவனாக அவரைப் பார்க்க முடிகிறது. ஜே.வி.பி எதனையும் ‘நீட்’டாக செய்யும் என்பது தொடர்ச்சியாக அந்தக் கட்சிக்கு இருந்து வந்த பெருமை. இந்தத் தேர்தலிலும் பிரசாரங்களிலாகட்டும் வழங்கிய வாக்குறுதிகளிலாகட்டும் தேர்தலுக்காக வகுத்த திட்டங்கள் செயற்பாடுகளாகட்டும் அத்தனையிலும் அந்த ‘நீட்’ என்ற நேத்தியை காண முடிந்தது. அதுதான் இந்த அபார வெற்றிக்குக் காரணம்.
நாட்டு மக்கள் நேர்த்தியையும் நேர்மையான செயற்பாடுகளையும் விரும்புகின்றனர் என்பதற்கும், இது மிகச் சிறந்த அங்கீகாரம். தேர்தல் பிரசாரங்களுக்கான இறுதி நாளன்று நடத்திய நிகழ்ச்சியில், “வென்றால் உலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அந்த வெற்றி அமைய வேண்டும்” என்று அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தெரிவித்தார். அது நிதர்சனமாகியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம். பல காலம் தொடர்ச்சியாக இழுபட்டு வந்து பல்வேறு பேச்சுவார்த்தைகள், வர்த்தமானி வெளியீடு, நீதிமன்ற தீர்ப்பு என தொடர்ந்து இறுதி வரை அந்த மக்கள் ஏமாற்றப்பட்டனர். அந்த விவகாரம் பல அரசியல்வாதிகள் தமது அரசியலை மிக இலாவகமாக முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது. நாம் எதிர்பார்த்தது போலவே அது தேர்தல் பிரசாரம் வரை வந்து, தேர்தல் வாக்குறுதியாக மாறியது. “பழைய குருடி கதவைத் திறடி” என்பது போல் மீண்டும் புதிதாக 1350 ரூபாவைத் தருகின்றோம் மீதம் 350 ரூபா இதர செயற்பாடுகளை வைத்துப் பார்க்கலாம் என்ற நிலைக்குத் திரும்பியது. “இத்தகைய ஏமாற்று வாக்குறுதிகளை இனியும் நாங்கள் நம்பத் தயாரில்லை என்ற முடிவுக்கு வந்த மலையக மக்கள், இந்த முறை அவர்களது வரலாற்றுத் தலைவர்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, “எது வந்தாலும் பரவாயில்லை. இந்த முறை அநுர குமாரவுக்குக் கொடுத்துப் பார்ப்போம்” என்று எடுத்த முடிவு தான் மலையகத்தில் அவருக்கு குவிந்த வாக்குகள்.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, நாளைபற்றிய நம்பிக்கையை மக்கள் இழந்திருந்த சந்தர்ப்பத்தில், எவரும் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன் வராத ஒரு காலகட்டத்தில் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நாட்டைப் பொறுப்பேற்றவர் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. உண்மையில் பெரும் சவாலை ஏற்றுக் கொண்டவர் அவர்.
மிகக் குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முழுமூச்சாக செயற்பட்டவர் என்பதை மக்களே ஏற்றுக் கொண்டனர். இம்முறை அவரைக் கைவிட்டு விட்டால் மீண்டும் அந்த நெருக்கடி நிலையை அனுபவிக்க நேருமோ என்றும் வேறு யாருக்காவது ஆதரவளித்தால் அவர்கள் வந்து புதிதாக திட்டங்களை ஆரம்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ?
அப்படியானால் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் போன்று ஆகிவிடுமோ என்றெல்லாம் மக்கள் சிந்தித்தது மட்டுமன்றி பலரும் அதனை வெளிப்படுத்தியதை நாம் கண்டோம். நாட்டில் இன்னும் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டு ரணில்- சஜித் என்று பிளவு பட்டு இருந்ததாலும் அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தரப்பு பல தளங்களில் கால் வைத்திருந்ததாலும் இந்த முறை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.
சஜித் பிரேமதாச வழங்கிய வாக்குறுதிகள் ஒரு பக்கம் இருக்க, அவர் தேர்தலுக்கு வரும் முன்னரே எதிர்க்கட்சியிலிருந்து எந்தளவுக்கு மக்களுக்கு சேவைகளை வழங்க முடியுமோ அதனை செயலில் காட்டியிருந்தார்.
அந்த வகையில் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டம் வரை சஜித் பிரேமதாசவின் கூட்டங்களுக்கு திரண்ட மக்களைக் கண்டவர்கள் சஜித் பிரேமதாச தான் அடுத்த ஜனாதிபதி என்று தீர்மானித்து விட்டனர். மக்கள் மட்டுமின்றி எங்கி ருந்தோவெல்லாம் அவருடன் இணைந்து கொண்டவர்களும் அதற்கு சான்றாக இருந்தனர்.
ஒரு குறுகிய காலத்தில் இந்த அனைத்துமே மாறிவிட்டது. மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து விட்டனர். மாற்றத்தை எதிர்பார்த்த ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டத்தின் விளைவுகள், அதனையடுத்து ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்பார்த்து ஆனால் அடைய முடியாது போனஇறுதி வெற்றியை இம்முறை தேர்தல் மூலம் அடைந்து விட முடியும். அதற்கான ஒரே நபர் அநுர குமார திசாநாயக்க தான் என்பதை உறுதி செய்து விட்டனர். அந்த அசையாத உறுதி தான் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளை அநுர குமாரவுக்கு பெற்றுக் கொடுத்தது.
தேர்தல் முடிவுற்று புதிய அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் தவிர ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மூவரிடமும் முக்கியமான பல அமைச்சுப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அந்த அமைச்சுக்கள் மூலம் முக்கியமாக எதனை செய்ய வேண்டுமோ அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
அடுத்த மிக முக்கியமான விடயமாக பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. மீண்டும் கட்சிகள், கூட்டணிகள், கட்சித் தாவல்கள், தேர்தலில் வெல்வதற்கான வியூகங்கள் என கவனம் அந்தப் பக்கம் சென்றிருந்தாலும் மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் படிப்படியாக மேற்கொண்டு வருவதைக் காண முடிகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில் இரத்தினச் சுருக்கமாக சில விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.
மக்கள் எதிர்பார்ப்பதையெல்லாம் அல்லது நாட்டுக்கு தேவையானதையெல்லாம் ஒரேயடியாக செய்வதற்கு தான் ஒன்றும் மாயாஜால வித்தைக்காரன்அல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியம் என தெரிவித்துள்ள அவர், நாட்டைக் கட்டி யெழுப்புவதில் உண்மையுடன் நேர்மையாக செயற்படக்கூடியவர்களுக்கு தமது அரசாங்கத்தில் கதவு திறந்தே இருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது உரையில் உண்மையும் நேர்மைத் தன்மையும் காணப்பட்டது. இதைத்தான் செய்வேன். இவ்வாறு தான் செய்வேன் இதற்கு ஒத்துழைப்பைத் தாருங்கள் என்ற அழைப்பு அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளில் அவர் அக்கறை செலுத்த மாட்டார். சர்வதேச ரீதியான உறவுகள் அவரது காலத்தில் சீர்குலைந்து போகும். அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்றெல்லாம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட விசமப் பிரசாரங்களை பொய்யாக்குவதாக அவரது உரை அமைந்திருந்தது.
மிக விரைவாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாகவும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நடவடிக்கைகளை தொடரவுள்ளதாகவும் அவர் அந்த உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்துள்ளார்.
இந்த நாடு ஜனநாயக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் சமத்துவமாக வாழக்கூடிய உரிமையும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டி நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றும் நாடு தொடர்பில் மக்கள் கண்ட கனவை தனது காலத்தில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அதற்கு அனைவரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அந்த உரை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நன்மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது என்றே குறிப்பிட முடியும்.
அந்த வகையில் அவரது உரையின் சில முக்கிய பகுதிகளை இங்கு சுட்டிக் காட்ட முடியும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு நம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
சந்தர்ப்பவாதம் அதிகாரமோகம் சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் போயுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய அவர், எமது வரலாற்றில் நழுவ விட முடியாத சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகை தன்மையை ஏற்றுக் கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என்றும் தெரிவித்திருந்தார். மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதே நேரம் அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துள்ள அவர், எம் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எமது செயற்பாடுகளின் ஊடாக அவர்களின் நம்பிக்கையை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டைக் கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பையும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. அந்தக் கனவானது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும். ஆனாலும் பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நான் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகார மோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் போயுள்ளது.
எமது வரலாற்றில் நழுவ விட முடியாத சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகை தன்மையை ஏற்றுக் கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம். நாம் இலங்கை பிரஜைகள் என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை இந்த நாடு தோல்வி அடையுமே தவிர வெற்றியடையாது. அரசியலமைப்பு ரீதியான பொருளாதார அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒருபோதும் நாம் பின்வாங்க மாட்டோம். மக்களுக்கு பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஏற்றுமதிப் பொருளாதாரம், இந்த நாட்டின் உயிர்நாடியான விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் மக்களுக்கான அத்தியாவசிய துறைகள் துரிதமாக கட்டி யெழுப்பப்பட வேண்டியது அவசியம். அவ்வாறான நடவடிக்கைகள் நேர்மையாக முன்னெடுக்கப்படுமானால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு நிலைத்திருக்கும் என்பது உறுதி.
லோரன்ஸ் செல்வநாயகம்